முன்னுரை
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த காலாண்டு இதழில் நாம் தொடர்ச்சியாக விசுவாச அறிக்கையை குறித்து படித்து வருகிறோம். கடந்த இதழிலும் கூட நாம் விசுவாச அறிக்கையின் தேவையைபற்றி படித்தோம். விசுவாச அறிக்கையின் தேவையைப் புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், வேதத்தின் சில அடிப்படை சாராம்சங்களை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதில் 1. வேதம் தொடர் வரலாற்று நிகழ்வுகளை கொண்டுள்ளது என்றும் 2. வேதம், மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை கூறுகிறது என்ற அடிப்படை சாராம்சங்களை கொண்டுள்ளது என்பதை படித்து, விசுவாச அறிக்கை வேதத்தில் உள்ளதா? என்ற கேள்விக்கு வேத ஆதாரங்களுடன் விசுவாச அறிக்கைக்கு சான்றழித்தோம்.
இன்றைய நாட்களில் கிறிஸ்தவ சபைகள் அநேக வித்தியாசமான போதனைகளால் நிறைந்திருக்கிறது, எல்லா சபைகளும் வேதத்தையும், இயேசு கிறிஸ்துவையும் குறித்து விசுவாசம் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் நம்முடைய கேள்வி வேதத்தையும் இயேசுவையும் குறித்து என்னவிதமான விசுவாசம் கொண்டிருக்கிறார்கள்? என்பதே. இதேபோலத்தான் எல்லா சத்தியங்களையும் வேதம் கூறும் வகையில் விசுவாசிக்கிறோமா என்பதை நிதானிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்காகவே நம் முன்னோர்கள் வேத அடிப்படையிலான விசுவாச அறிக்கையை தொகுத்து சபைக்கு வழங்கினார்கள்.
சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள் வேதத்தோடு மிக நெருங்கிய தொடர்பில் இருக்கிற 1689 லண்டன் பாப்திஸ்து விசுவாச அறிக்கையை பின்பற்றுகிறோம். இந்த 1689 விசுவாச அறிக்கையின் வரலாற்று பிண்ணனியை பின்வரும் பத்தியில் நாம் படிக்கலாம்.
வரலாற்று பின்னணி
பரிசுத்த வேதாகமத்தின் வேத சத்தியங்களை முறையாகத் தொகுத்து வழங்குகிறது 1689 விசுவாச அறிக்கை. 1677-ம் ஆண்டில் மூப்பர்களையும், விசுவாசிகளையும் கொண்ட இங்கிலாந்தில் இருந்த பல சபைகள் இணைந்து இதை முதலில் வெளியிட்டன. 1644-1648 இடைப்பட்ட காலங்களில் இங்கிலாந்தையும், ஸ்காட்லாந்தையும் சேர்ந்த பியூரிட்டன் பெரியோர்கள் வெஸ்ட்மினிஸ்டர் விசுவாச அறிக்கையைத் ( Westminister Confession of Faith ) தொகுத்து வெளியிட்டனர். அதே வேளை காங்ரிகேசனல் சபை (Congregationalists) அமைப்பைத் தழுவியவர்களும் சவோய் விசுவாச அறிக்கையை (Savoy Declaration of Faith and Order) 1658 -வெளியிட்டனர். வெஸ்ட்மினிஸ்டர் விசுவாச அறிக்கை பிரஸ்பிடீரியன் சபை அமைப்பு முறையின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தது. திருச்சபையின் தன்மை, திருமுழுக்கு, திருவிருந்து, சபை அரசமைப்பு போன்ற விசயங்களில் அவர்களிலிருந்து வேறுபட்ட கோட்பாடுகளை பாப்திஸ்து விசுவாசிகள் கொண்டிருந்தனர். 1644-ல் பாப்திஸ்துகள் ஏற்கனவே ஒரு சுருக்கமான விசுவாச அறிக்கையை எழுதி வைத்திருந்தனர். காலங்கூடி வந்தபோது அவர்கள் வெஸ்ட்மினிஸ்டர் விசுவாச அறிக்கையையும், சவோய் விசுவாச அறிக்கையையும் தழுவி, பாப்திஸ்து கோட்பாடுகளின் அடிப்படையில் 1677-ல் ஒரு விசுவாச அறிக்கையை எழுதினர். இம்மூன்று விசுவாச அறிக்கைகளும் சீர்திருத்தக் கோட்பாடுகளைப் பின்பற்றியதால் பல விதங்களில் ஒன்றையொன்று ஒத்திருந்தன. கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ சபைகளும் அக்காலத்தில் அரசால் துன்புறுத்தப்பட்டதால் இவ்விசுவாச அறிக்கையை பாப்திஸ்துகளால் உடனடியாக வெளியிட முடியவில்லை. 1689-ல் அரசின் துன்புறுத்தல் நின்று வழிபாட்டு சுதந்திரம் கிடைத்தபோது 37 பாப்திஸ்து போதகர்கள் இணைந்து இவ்விசுவாச அறிக்கையை வெளியிட்டனர். அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு இங்கிலாந்திலும், வேல்ஸ் தேசத்திலும் பார்டிகுலர் அல்லது கல்வினிச பாப்திஸ்து சபைகளின் (Particular or Calvinistic) விசுவாச அறிக்கையாக இதுவே இருந்தது. இது லண்டன் விசுவாச அறிக்கை என்றும் அழைக்கப்பட்டது. 1744-ல் வட அமெரிக்காவில் இருந்த கல்வினிச பாப்திஸ்து சபைகள் இதை அங்கீகரித்து ஏற்று பிலடெல்பியா விசுவாச அறிக்கை (Philadelphia Confession of Faith) என்ற பெயரில் பயன்படுத்தினர். லண்டனில் நீயூ பார்க் சாலை சபையில் போதகராக இருந்த சார்லஸ் ஹெடன் ஸ்பர்ஜன் 1853ம் ஆண்டில் தனது சபையிலும் தம்மைச் சார்ந்திருந்த சபைகளிலும் அஸ்திவாரத்தை உறுதிப்படுத்தி வேத சத்தியங்களில் வழி நடத்த 1689 விசுவாச அறிக்கையை மறுபடியும் வெளியிட்டார். இதற்கு எழுதிய முன்னுரையில் ஸ்பர்ஜன், “உங்கள் விசுவாசத்தைக் குறித்து வெட்கப்படாதீர்கள். சத்தியத்தின் காரணமாக நமக்கு ஒரு கொள்கைச் சின்னம் தேவைப்படுகிறது. மகத்துவமான நற்செய்தியின் நோக்கத்தை நிறைவேற்றத் துணைபுரிய, அதன் முக்கிய கோட்பாடுகளுக்கு இச்சிறுநூல் தெளிவான சாட்சியாக விளங்கும்” என்று எழுதினார். இது போதிக்கும் வேத சத்தியங்களை விசுவாசிக்காத தெளிந்த மனச்சாட்சியுடன் எவரும் சபையில் அங்கத்தவராக இருக்க முடியாது என்றும் சொன்னார். திருச்சபை சீர்திருத்தத்திற்கு சீர்திருத்தக் கோட்பாடுகளின் அவசியத்தை உணர்ந்த சபைகள் இதை ஏற்றுப்பயன்படுத்தின. மூன்னூறு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டிருந்தபோதும் இவ்விசுவாச அறிக்கை இன்று உலகெங்கும் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு சீர்திருத்த பாப்திஸ்து சபைகளின் விசுவாச அறிக்கையாக விளங்குகிறது.
விசுவாச அறிக்கையின் பயன்கள்
- சபைப்போதகர்களும், சபை அங்கத்தவர்களும் வேதத்தை விட்டு விலகிப்போகாதபடித் தம்மைக் காத்துக் கொள்ள இது உதவுகிறது. இவ்விசுவாச அறிக்கையை பயன்படுத்தும் சபைகளில் இதனை ஏற்றுக்கொள்ளாத போதகர்களுக்கு இடமில்லை, அங்கத்தவர்களுக்கும் இடமில்லை. “தனக்குத் தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த இராஜ்யமும் பாழாய்ப்போகும்” என்று இயேசு சொன்னார். ஆர்மீனியனிசப் போதனைகள், பெலேஜியனீசப் போதனைகள், கெரீஸ்மெட்டிக் போதனைகள் என்று எல்லாவற்றையும் விசுவாசிக்கும் போதகர்களையும் அங்கத்தவர்களையும் உள்ளடக்கிய ஒரு சபை எப்படி ஒரே சத்தியத்தில் கூடி ஜெபிக்கவோ, ஆராதிக்கவோ, ஊழியம் செய்யவோ முடியும்? ஆகவே, விசுவாச அறிக்கையை முறையாகப் பின்பற்றும் சபைகளில் கலப்படமான இறையியலுக்கு இடமிருக்காது.
2. ஒரு சபை தனது போதக ஊழியத்தை இதன் அடிப்படையில் ஆராய்ந்து தன்னையும், தனது போதகர்களையும் காத்துக்கொள்ள முடியும். போதகர்கள் (வேதத்தில்) உண்மையுள்ள மனிதர்களாக இருக்க வேண்டும் என்று பவுல் (2 தீமோத்தேயு 2:2) சொல்கிறார். அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைக் கொண்டவர்களாகவும், எதிர் பேசுகிறவர்களைக் கண்டனம் செய்ய வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் (தீத்து 1:8) என்றும் சொல்லுகிறார். வேதாகமக் கல்லூரிகள் இத்தகைய மனிதர்களை உருவாக்குவதை எதிர்பார்க்க முடியாத இந்நாட்களில் விசுவாச அறிக்கையைப் பயன்படுத்தி சபை தன் போதகர்கள் சத்தியத்தில் உண்மையுள்ளவர்களாகவும் அதை மட்டும் போதிக்கிறவர்களாகவும் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள முடியும்.
3. போலிப்போதனைகள் சபையை அணுகும்போது அவற்றை வேதரீதியில் ஆராய்ந்து அவற்றில் இருந்து சபையைப் பாதுகாத்துக் கொள்ள விசுவாச அறிக்கை துணை செய்கிறது. சபையில் சத்தியத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றபோது அவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும் விசுவாச அறிக்கை துணைசெய்கிறது.
4. விசுவாச அறிக்கையைப் பயன்படுத்தி வேத சத்தியங்களை முறையாகப் போதித்து சபை மக்களை சத்தியத்தில் வளர்க்க முடியும். வினா விடைப் போதனையும் (Catechism) இதே வகையில் உதவும்.
5. சபையில் ஒழுங்கை நிலைநாட்டி தேவையானபோது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விசுவாச அறிக்கை துணை செய்கிறது. சத்தியத்தை விட்டு விலகிப்போகிறவர்களை இனங்கண்டு அவர்களைத் திருத்தவும், சபையைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
6. சத்தியத்தின் அடிப்படையில் அமையாத சபைக்கூட்டும். ஐக்கியமும், ஆத்மீக வளர்ச்சிக்கு உதவாது. விசுவாச அறிக்கை நாம் எதை விசுவாசிக்கிறோம் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளவும், அவற்றை விசுவாசிப்பவர்களோடு சேர்ந்து நாம் ஐக்கியத்தில் வரவும். வளரவும் துணை புரியும்.
7. இறுதியாக நமது சபைகளுக்கு வரலாற்று ரீதியிலான ஒரு தொடர்ச்சியை (Historical Continuity) விசுவாச அறிக்கை அளிக்கிறது. நாம் காளான்கள் போல இன்று முளைத்து நாளை அழியப்போகிறவர்கள் அல்ல. நமக்கு ஒரு வரலாறு இருக்கிறது, என்ற ஒரு நம்பிக்கையையும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு புத்துணர்ச்சியையும் விசுவாச அறிக்கை அளிக்கிறது. நமது சீர்திருத்தத் தந்தையரும், பியூரிட்டன் பெரியவர்களும் வேதம் வெளிப்படுத்தும் இச்சத்தியங்களையே நம்பிப்போதித்து சபையை வளர்த்துள்ளார்கள், வளர்ச்சியும் கண்டார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து ஊக்கத்தோடு ஊழியம் செய்ய விசுவாச அறிக்கை உதவும். நமது சந்ததியினருக்கு நமது பிதாக்களின் விசுவாசத்தை விட்டுச் செல்லும் பாக்கியத்தை இது நமக்கு அளிக்கிறது.
முடிவுரை
இன்றைக்கு உலகத்தில் எல்லா காரியங்களும் மாறிக்கொண்டிருக்கிறது. மாற்றம் நிறைந்த உலகத்திற்கு மாறாத சத்தியம் அவசியம், அந்த மாறாத சத்தியத்தை பிடித்துக் கொண்டு விசுவாசத்தில் வாழ தேவன் கிருபை செய்வாராக. ஆமென்!
No Comments