முன்னுரை :
நாம் தொடர்ச்சியாக யோனா தீர்க்கதரிசன புத்தகத்தில் இருந்து சிந்திக்கயிருக்கிறோம். யோனா தீர்கதரிசியின் புத்தகம் வேதாகமத்தில் 32வது புத்தகம், 5 வது சிறிய தீர்க்கதரிசன புத்தகம், 4 அதிகாரங்களைக் கொண்டது. இந்த யோனாவின் வாழ்வில் நடந்த நிகழ்வு நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானது. இந்த யோனா தீர்க்கதரிசன புத்தகத்தை மேலோட்டமாக வாசிக்கும்போது, தேவன் யோனாவை அழைத்தார், அவன் கீழ்ப்படியாமல் போனான். தேவன் அவனுடைய கீழ்ப்படியாமையிலிருந்து அவனை திருத்தி, தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றினார் என்று நாம் அநேகரால் புரிந்துக்கொள்ளப்பட்ட செய்தியாக இருக்கிறது. ஆனால் இந்த யோனா தீர்கதரிசன புத்தகம் இதையும் கடந்து அநேக கரியங்களை இன்றைக்கு வாழும் நமக்கு கற்றுத்தருகிறது. நாம் வசனங்களை பார்பதற்கு முன் சில குறிப்புகளை தெரிந்துகொள்வது இது புத்தகத்தை விளங்கிக்கொள்வதற்கு உதவியாகயிருக்கும்.
யோனா தீர்க்கதரிசன புத்தகத்தைப் பற்றிய சில குறிப்புகள்:
- இந்த யோனா தீர்கதரிசன புத்தகம் உவமையோ, சொப்பனமோ அல்லது கட்டுக்கதையோ அல்ல. இது ஒரு வரலாற்று நிகழ்வு. ஒரு நிஜ மனிதனுடைய வாழ்வில் நடந்த ஒரு நிஜமான நிகழ்வாகும்.
- புத்தகத்தின் தனித்துவம் மற்ற தீர்க்கதரிசனத்தை போல தீர்க்கதரிசியின் பிரசங்கத்தில் தேவனுடைய செய்தி கொடுக்கப்படவில்லை, சொல்லப்பட வேண்டிய செய்தியானது யோனாவுடன் தேவன் எப்படி செயல்படுகிறார் என்பதில் இருக்கிறது.
- புத்தகத்தின் உட்கருத்து தேவன் இஸ்ரவேல் ஜனங்களுடைய குறுகிய எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். நம்முடைய தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு மட்டும் தேவன் அல்ல, அவர் முழு உலகத்திற்கும் தேவன். தேவனுடைய இருதயம் இஸ்ரவேல் ஜனங்களுடைய இருதயத்தை விட பெரியது என்பதே யோனா தீர்க்கதரிசன புத்தகம் அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது.
- தேவனுடைய இரக்கம் புறஜாதிகளிடத்தில் செல்வதைக் கண்டு இஸ்ரவேல் ஜனங்கள் பொறமைக் கொள்கிறார்கள். உபாகமம் 32:21 “தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, தங்கள் மாயைகளினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; ஆகையால் மதிக்கப்படாத ஜனங்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட ஜாதியினால் அவர்களைக் கோபப்படுத்துவேன்”.
இதை மனதில் வைத்துக்கொண்டு இந்த புத்தகத்தை நாம் படிக்கயிருக்கிறோம்.
தீர்க்கதரிசி ஏன் இஸ்ரவேல் யூதேயா தேசங்களில் இருக்கிறார்கள்?
தீர்க்கதரிசிகள் என்பவர்கள் இஸ்ரவேல், யூதேயா தேசம் கர்த்தருடைய தேசம் ஆகவே தீர்க்கதரிசி ஒருவர் தேவை என்று வரலாற்றில் அவர்கள் இல்லை. தீர்க்கதரிசி இருக்கிறார் என்றால், அது தேவனுடைய தொடர்ச்சியான இரக்கத்தின் வெளிப்பாடு. நான் தொடர்ச்சியாக உங்களை நேசிக்கிறேன் என்ற தேவனின் உடன்படிக்கையின் உறவின் வெளிப்பாடு. ஓவ்வொரு தீர்க்கதரிசியும் தேவனின் புதிய அன்பையும் மற்றும் புதிய இரக்கத்தின் வெளிப்பாடு. தேவன் ஒவ்வொரு தீர்க்கதரிசியையும் வரலாற்றில் நம்பிக்கையை இழந்த நிலையில் மிக முக்கியமாக தேவைப்படும் நிலையில் ஒரு தீர்க்கதரிசையை அந்த நிலையில் தேவைப்படும் செய்தியோடு குறித்த காலத்தில் தேவன் அனுப்புகிறார்.
தீர்க்கதரிசி இருக்கிறார் என்றால், அது தேவனுடைய தொடர்ச்சியான இரக்கத்தின் வெளிப்பாடு. நான் தொடர்ச்சியாக உங்களை நேசிக்கிறேன் என்ற தேவனின் உடன்படிக்கையின் உறவின் வெளிப்பாடு.
யோனாவின் அறிமுகம்
யோனா 1:1“அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:“
யார் இந்த யோனா? எங்கேயிருந்து வந்தான், எந்த பகுதியில், யாருடைய அரசாட்சியின் கீழ் தீர்க்கதரிசன ஊழியத்தை செய்து வருகிறான். மிக சிறிய அறிமுகம் மட்டுமே இந்த வசனம் நமக்கு தருகிறது. தீர்க்கதரிசன புத்தகம் எப்பொழுதுமே ஒரு முழுமையான தகவலை கொடுக்கும்.
உதாரணமாக, நாம் மீகா 1:1, “யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.” வாசிக்கும்போது மீகா தீர்க்கதரிசி என்பர் இஸ்ரவேல் மற்றும் யூதேயா தேசத்தில் தேவனுடைய வார்த்தையை ஜனங்களுக்கு சொல்லிக்கொண்டு வந்தார் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதை இன்னும் விரிவாக தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் இராஜாக்கள், நாளாகமம் புத்தகத்தை வாசித்தால் தெரிந்துக்கொள்ளலாம். அதேபோல ஏசாயா 1:1 “ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.” இந்த வசனத்தை வாசிக்கும்போது ஏசாயா தீர்க்கதரிசி யூதேயா தேசத்தில் தேவனுடைய வார்த்தையை ஜனங்களுக்கு சொல்லிக்கொண்டு வந்தார் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், யோனா 1 :1 –ல் இப்படிப்பட்ட பிண்ணனி ஏதுமில்லை. அப்படியென்றால் எங்கிருந்து யோனாவைப் பற்றி அறிந்துக்கொள்வது? 2 இராஜாக்கள் 14: 23-27 யோனவைப்பற்றி அறிந்துக்கொள்ள கொடுக்கப்பட்டுள்ள பழைய ஏற்பாட்டின் ஒரே பகுதி. இதை வாசிப்பதற்கு முன் இஸ்ரவேல் தேசத்தைப்பற்றிய ஒரு முக்கியமான காரியத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சவுலும், தாவீதும் முழு 12 கோத்திரத்தையும் ஆண்டார்கள் தங்கள் படைகளை வைத்து கானானியர்களை விரட்டி தேசத்தின் எல்லைகளை பெரிதாக்கினார்கள். சாலொமோனின் நாட்களில் முற்றிலுமாக கைப்பற்றி, சாலொமோன் ராஜா முழு இஸ்ரவேல் தேசத்தையும் அரசாண்டான். சாலொமோன் தன் வாழ்வின் கடைசியில் அவன் விக்கிரக ஆராதனைக்காரனாகி, அநேக பெண்களை மனந்து தேவனாகிய கர்த்தருடைய வழியை விட்டு விலகினான். அதற்காக தேவன் தன்னுடைய நியாயத்தீர்ப்பை கூறுகிறார் 1 இராஜாக்கள்11:11-12 “ஆகையால் கர்த்தர் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன். ஆகிலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்.” இதன் விளைவாக 12 கோத்திரமாகயிருந்த இஸ்ரவேல் தேசம் 10 கோத்திரமாகவும் ,2 கோத்திரமாகவும் (யூதா, பென்யமீன்)பிரிந்தது. 10 கோத்திரத்தை இஸ்ரவேல்என்று அழைக்கப்படும் – அதன் தலைநகரம் சமாரியா. 2 கோத்திரத்தை யூதேயா தேசம் என்றழைக்கப்படும் – அதன் தலைநகரம் எருசலேம். 10 கோத்திரம் வேகமாக வளர்ந்தது, நியாத்தீர்ப்பு, சிறையிருப்பும் முதலாவது வந்தது. ஒரு ராஜா கூட தேவனுக்கு பிரியமாய் வாழவில்லை. இதை மனதில் வைத்துக்கொண்டு நாம் யோனாவைப் பற்றி பழைய ஏற்பாட்டில் கூறின வசனத்தை வாசிப்போம்.
2 இராஜாக்கள் 14: 23-27 “யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியாவின் பதினைந்தாம் வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் யெரொபெயாம் ராஜாவாகி சமாரியாவில் நாற்பத்தொரு வருஷம் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்கள் ஒன்றையும் அவன் விட்டு விலகவில்லை. காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான். இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் கர்த்தர் பார்த்தார். இஸ்ரவேலின் பேரை வானத்தின் கீழிருந்து குலைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல், யோவாசின் குமாரனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை ரட்சித்தார்.“
யோனாவின் ஊழியம் இஸ்ரவேல் தேசத்தில், தேசமும் இராஜாவும் தேவனுக்கு பொல்லாத கிரியைகளை செய்யும்போது யோனா தீர்க்கதரிசி தன்னுடைய ஊழியத்தை செய்கிறான். அவனுடைய செய்தி என்ன? வசனம் 25 ” காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான்“. தேசம் தேவனுக்கு விரோதமாய் இருக்கும் காலத்தில் எலியா எலிசாவை போல மனந்திரும்புதலை குறித்து பேசாமல் ஆசீர்வாதத்தைக் குறித்து பேசுகிறான். நியாத்தீர்ப்புக்கு மட்டுமே தகுதியாய் இருந்த ஜனத்திற்கு ஆசீர்வாதத்தை பேசுகிறான். யோனாவின் செய்தி மனந்திரும்புதலின் அழுகையாக இருந்திருக்க வேண்டும், செய்தி அதற்கு மாறாக இருந்தது. நியாத்தீர்ப்புக்கு மட்டுமே தகுதியாய் இருந்த ஜனத்திற்கு தேவன் கிருபையை அளித்து, தேசத்தை பெருக செய்கிறார். தேவன் தன்னுடைய இரக்கத்தை பொழிந்தார். தேவன் தன் இரக்கத்தின் ஐஸ்வரியத்தை காண்பிக்க யோனாவின் தீர்கதரிசனத்தை நிறைவேற்றினார். பொல்லாத நாட்களில் இஸ்ரவேலுக்கு இரக்கம் கிடைத்தது.
தேவனுடைய ராஜ்ஜியத்தில் பயனுள்ளவனாய் இருப்பது இரட்சிப்பின் அடையாளம் அல்ல. இருதயத்தில் தேவனுடைய இரக்கத்தையும் கிருபையையும் பெற்றிருக்க வேண்டும் அதுவே இரட்சிப்பின் அடையாளம். பாவத்தின் மோசமான நிலையில் இருக்கிற தேசத்திற்கு நியாத்தீர்ப்பு மட்டுமே கிடைக்க வேண்டிய தேசத்திற்கு தேவன் இரக்கத்தை காண்பித்தார் என்பதை யோனா தன் வாழ்வில் நினிவேவுக்கு போக அழைப்பை பெருவதற்கு முன்பாகவே அனுபவித்திருந்தான். யோனா ஆயத்தம் இல்லாமல் இந்த அழைப்பை பெறவில்லை. தேவன் இதற்கு முன்பே ஒரு அனுபவத்தை கொடுத்திருந்தார்.
இஸ்ரவேல் மனநிலையானது, ஆவிக்குரிய வாழ்வில் சரியாக இருக்கும் போது அவர்களுக்கு தேவனுடைய இரக்கம் புறஜாதி மக்களுக்கு சென்றடைவது தடையாக இருந்ததில்லை. சங்கீதம் 67:1-3வசனங்களை வாசிக்கும்போது, “தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய், தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும் தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.” தேவனுடைய மகிமையும் கீர்த்தியும், இரட்சிப்பும் எல்லா தேசங்களிலும் சென்றடைவது அவர்களுக்கு மகிமையாக இருந்தது. அதேவேளையில் இஸ்ரவேலுடைய ஆவிக்குரிய வாழ்வு பின்வாங்கும் போது, உலக சிந்தைகளால் அகப்பட்டு இருக்கும் போது, தேவன் எங்களுக்கு மட்டும் தான், நாங்கள் தான் தேவனுடைய ஜனம். புறஜாதிகளுக்கு தேவனுடைய இரக்கம் அவசியம் இல்லை என்ற குறுகிய எண்ணம், தேவனுடைய கிருபையை எண்ணி பார்க்க தவறிவிடுகிறார்கள். இது நமக்கும் ஒரு எச்சரிப்பு. உலக பிரகாரமாக நாம் வாழும் போது, மற்றவர்களை பற்றி குறுகிய எண்ணம் ஏற்படுகிறது. சுவிசேஷம் அவர்களுக்கு தேவையில்லை, அவர்கள் எல்லாம் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்று தேவனுடைய கிருபையையும், இரக்கத்தையும் குறைத்து மதிப்பீடுகிறோம். இது தான் இப்பொழுது யோனாவின் நிலை.
தேவனின் கட்டளை
இப்படிப்பட்ட நிலையில் தேவன் யோனாவுக்கு ஒரு கட்டளையை கொடுக்கிறார். வசனம்-2
“நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.”
நினிவே எப்படிப்பட்ட நகரமாயிருந்தது: நினிவே பட்டணம் அசரியா தேசத்தின் தலைநகரம். பழைய ஏற்பாட்டை வசிக்கும்போது தேவன், இந்த தேசத்தை பாவம் செய்த இஸ்ரவேலரை சிறைபிடித்து போகும்படியாய் நியமித்திருந்தார்.
வசனம் 3 கூறுகிறது நினிவே மகா பெரிய நகரம்.
எந்த விதத்தில் பெரியது -> அளவு – பாபிலோனைவிட பெரியது.
- (யோனா 3:3) 3 நாள் ஆகும் நகரத்தை சுற்றிவர.
- ஜனத்தொகை.
- கட்டிடங்கள் பெரியது.
- அரசு அலுவலகம்.
வசனம் 2 தேவன் யோனாவுக்கு கொடுத்த கட்டளையின் தன்மையை விளக்குகிறது
தேவன் கொடுத்த கட்டளையின் தன்மை:
தேவன் தன்னுடைய முழு சர்வ அதிகாரத்தையும் இந்த கட்டளையில் வெளிப்படுத்துகிறார். எந்தவொரு விஷயத்தை முன் பேசாமால் நேரடியாக யோனாவே நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். வீரியமுள்ள தேவனுடைய அதிகாரம் இந்த கட்டளையில் வெளிப்படுகோறது. தேவன் தன்னுடைய ராஜரீக அதிகாரத்தை பயன்படுத்துகிறார். ஏசாயாவை தேவன் தயார் செய்தார், ஒரு தரிசனத்தை கொடுத்து பிரசங்கி. ஒரு கடினமான வேலைக்கு தயார் செய்தார். ஏரேமியாவிடம் தனிப்பட்ட முறையில் நெருக்கமாக பேசி ஆயத்தப்படுத்தினார். ஆனால், யோனாவிடம் தேவன் அப்படி செயல்படவில்லை. அதேபோல எந்த தீர்க்கதரிசிக்கு கொடுக்கப்படாத ஒரு கட்டளை. இஸ்ரவேல் தேசத்தைவிட்டு வெளியே போய் தீர்க்கதரிசனம் கூறு என்று தேவன் யோனாவிடம் கூறுகிறார்.எந்தவொரு தீர்க்கதரிசியும் புறஜாதியிடம் போகவில்லை நீ போ! நான் கர்த்தர். யோனாவே நான் கர்த்தர், நான் என் சர்வ அதிகாரத்தை பயன்படுத்துகிறேன் நீ எழுந்து போ என்றார். யோனாவின் தேவன் இன்று என்னுடைய நம்முடைய தேவன். தேவன் பேசும் போது தன்னுடைய முழு அதிகாரத்தோடு பேசும் போது கீழ்ப்படிய வேண்டும்.
தேவன் பேசும் போது தன்னுடைய முழு அதிகாரத்தோடு பேசும் போது கீழ்ப்படிய வேண்டும்.
வேதத்திலுள்ள ஒவ்வொரு வாக்கியமும் தேவனுடைய முழு அதிகாரமுடைய வாக்கியம். அதை நாம் வாசிக்கும் போது கீழ்ப்படிய வேண்டும்.
இந்த கட்டளை எதற்கு என்றால் நினிவே நகரத்திற்கு தேவன் தன்னுடைய இரக்கத்தை வெளிப்படுத்த. இரக்கம் என்பது அப்படியே எங்கிருந்தோ வராது. இரக்கம் எப்பொழுதுமே கர்த்தருடைய வார்த்தையை பிரசங்கிப்பதில் இருந்தே வரும். தேவன் உடனடியாக தன்னுடைய இரக்கத்தையும் கிருபையையும் காட்ட நினைக்கும்போது, அதை செய்யாமல் இருக்க கர்த்தருடைய பிள்ளைக்கு இது எவ்வளவு பெரிய அவமானம். நாம் சபையாக ஏன் இருக்கிறோம், சபையினுடைய அடிப்படையான வேலை என்ன? சபையின் வேலை இங்கு இருக்கிற மக்களை சந்தோஷமாகவும், பாதுகாப்பதும், உயர்வான நிலையை கொடுப்பதுமில்ல. சபையின் அடிப்படையான் வேலை சபை இந்த சமுதாயத்திற்குள் சுவிசேஷ செய்தியை கொண்டு செல்ல வேண்டும். தேசத்திற்கு இரட்சிப்பை கொண்டு வர தான் தேவன் நம்மை வைத்திருக்கிறார். மத்தேயு 28:18-20 வாசிக்கவும். தேவன் கிருபை என்ற ஈவை ஏன் கொடுத்திருக்கிறார் அதை தேசத்திற்கு கொடுக்க, நீ எழுந்து போ !
இரக்கம் எப்பொழுதுமே கர்த்தருடைய வார்த்தையை பிரசங்கிப்பதில் இருந்தே வரும்.
கட்டளையின் மற்றொரு தன்னை என்னவென்று பார்க்கும்போது,
அது நீதியுள்ளது. வசனம்-2 அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார் . அந்த நகரம் தேவனுடைய நீதியான நியாத்தீர்ப்புக்கு முன்பாக நிற்கிறது. மனிதன் பாவம் செய்து விட்டு, அவன் யோசிப்பது என்னுடைய பாவம் யாருக்கும் தெரியாது, அவர்களுடைய இருதயத்தில் பாவம் என்று ஒன்று இல்லாதது போல வாழ்வார்கள்.
சங்கீதம் 50:21, 22 ” இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை. ”
மனிதனுடைய எல்லா செயல்களும் தேவனுடைய கணக்கில் உள்ளது. அதேபோல, தேவன் இஸ்ரவேலோடு உடன்படிக்கை உறவில் இருக்கும் போது,மற்ற எல்லாஜனங்களையும் தேவன் மறக்கவில்லை. அவரே முழு உலகத்தையும் ஆளுகிறவர். அவரே நீதியுள்ள நியாயதிபதி. அவர் ஒருவரே இரக்கத்தையும், நீதியையும் காட்டுகிறவர். பிதாவான தேவன் சிலுவையில் தன்னுடைய ஒரே நேச குமாரனை மரிக்க செய்து தன்னுடைய நீதியையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தினார். தேவனுடைய இரக்கம் என்பது எனக்கு உன் பாவம் தெரியும் இயேசு கிறிஸ்துவின் முலம் மன்னிப்பு உண்டு, தேவனுடைய நீதி என்பது நான் உன்மேல் கோபமாய் இருக்கிறேன், தண்டனை உண்டு. சிலுவையில் இயேசு கிறிஸ்து மீது தன்னுடைய நீதியை காண்பித்து, அவரை விசுவாசிக்கிற மனிதர்கள் மீது தன்னுடைய கிருபையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தினார்.
எல்லாருடைய பாவத்தை அறிந்திருக்கிறார். நினிவே பாவத்தை போல நம்முடைய பாவமும் அவருடைய சமுகத்தை எட்டியது. எல்லாரிடத்திலும் பாவம் செய்திருக்கிறோம். இன்று வரை அவருடைய ஒரு நியாத்தீர்ப்பும் வரவில்லை இது அவருடைய இரக்கம். இரக்கத்தின் காலத்தில் எழுந்து சுவிசேஷத்தை பிரசங்கிக்க செல்லவேண்டும். இந்து தான் சபையின் பொறுப்பு. யோனா இந்த பொறுப்பை உணராமல் கீழ்ப்படியாமல் போனான். சபையின் வேலை மத்தேயு 28:18-20. விசுவாசியே மனந்திரும்பி பொறுப்பு உணர்ந்து செயல்பட தேவன் அழைக்கிறார்.