ஆசிரியர் : போதகர் G. மார்க்

மத்தேயு 1: 19 – 25

  1. உபத்திரவத்தை சந்திக்கும் தேவ மனிதனின் வாழ்வு (வ-19)

v- 19- “அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்துஅவளை அவமானப்படுத்த மனதில்லாமல்இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்

இங்கே மரியாளின் புருஷனாகிய யோசேப்பு தேவனுடைய மனிதன், வேதம் தெரிந்தவன், நல்ல ஆவிக்குரிய சூழ்நிலைகளை கொண்டவன். இப்பொழுது அவனுக்கு திருமணம் நிச்சயிக்கபட்டு  அவனது இல்லற வாழ்வின்  மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் எதிர்பார்த்து இருக்கிறான். ஆனால் இங்கே சுழ்நிலை தலைகீழ் ஆகிறது. அவனுக்கு நியமிக்கப்பட்ட மரியாள் கர்ப்பவதியாய் இருக்கிறாள் என்ற அதிர்ச்சியான செய்தி வருகிறது. அவனின் திட்டங்களும் ஆசைகளும் நொறுக்கபடுகிறது. தேவன் நேசிக்கும் மக்களின் வாழ்வில் இப்படிபட்ட எதிர்பாராத குழப்பங்களும் உபத்திரவங்களும் நிச்சயம் வரும். அவர்களின் வாழ்வில் இப்படிப்பட்ட உபத்திரவங்களை தேவன் தனது மகிமைக்காகவே அனுமதிக்கிறார்.

இந்த சுழ்நிலையில் யோசேப்பு உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளை எடுக்கவில்லை, அவன் தேவனிடம் முறுமுறுக்கவில்லை. மரியாளிடத்தில் நீதி செலுத்த முற்படவில்லை, மாறாக பொறுமை காக்கிறான். நிதானமான முடிவுகளை எடுக்கிறான். ஒரு விசுவாசியாக உபத்திரவத்தின் மத்தியில் நாம் எப்படி இருக்க வேண்டுமென்று யோசேப்பின் வாழ்க்கை நமக்கு  கற்றுகொடுக்கிறது. இதே நிலையை ப.ஏ. யோசேப்பின் வாழ்க்கையிலும் பார்க்கிறோம், தாவீது, தானியேல், என்னும் எவ்வளவோ தேவ மனிதர்களும் தேவனிடத்தில் காரியங்களை ஒப்புவித்து அவரின் வழிநடத்துதல்களுக்காக காத்திருப்பதை பார்க்கிறோம்.

அவன் நீதிமானாயிருந்து – வேதம் என்ன இங்கே அர்த்தபடுத்துகிறது. நீதிமான் என்று சொல்லும்போது அவன் பாவத்திற்கு விலகினவன் கிடையாது. பாவம் செய்யாதவன் என்று அர்த்தபடுத்தவில்லை. அவன் தேவ நீதியை சார்ந்தவன் என்று வேதம் கூறுகிறது. தேவனிடத்தில் இரக்கத்தையும், கிருபையையும் பெற்றவன். தேவனால் தனது பாவங்களிலிருந்து மன்னிப்பை பெற்றவன். தேவ தண்டனையிலிருந்து காக்கபட்டவன்.  தேவனுக்கு பயந்தவன். ஆபிரகாம், ஈசாக்கு, தாவீது, பேதுரு, பவுல் எல்லோரும் அப்படியே நீதிமான்களாக என்னபட்டார்கள் . யோசேப்பு தனது பாவ நிலையை உணர்ந்து தான் எவ்வாறு தேவனால் மன்னிக்கபட்டிருக்கிறேன், தேவ தன்டனையிலிருந்து எப்படி காக்கபட்டிருகிறேன் என்பதை உணர்ந்தவனாக செயல்படுகிறதை பார்க்கிறோம்.

அவளை அவமானப்படுத்த மனதில்லாமல் – நீதியான தண்டனையை மரியளாடத்தில் செலுத்த பிரியப்படாமல், அவள் செய்த துரோகத்திற்கு தக்கதாக, பழிக்குபழி வாங்காமல் அவளை மன்னிப்பதற்கு தயாராக இருக்கிறான். நீதிமானுடைய குணாதிசயம் இதுதான். (யோசேப்பு, தாவீது,)

இரகசியமாய் அவளை தள்ளிவிட யோசனையாயிருந்தான் – அவளுடைய பாவத்தை மூடுவதற்கு, அதை சகித்துக்கொள்ள தயாராயிருந்தான். தனது பிரச்சனையில் தேவனது சித்தத்திற்கு தன்னை ஒப்புகொடுத்து தேவனின் வழிநடத்துதலுக்கு காத்திருக்கிற நிலையை இங்கு பார்க்கிறோம் ( நீதிமானின்  மற்றுமொரு குணாதிசயம்).

அவன் தீமையை நன்மையினால் வெல்வதற்கு தயாராயிருக்கிறான். இந்த ஒரு உன்னதமான குணாதிசயம் இயேசுகிறிஸ்துவின் வாழ்வில் பூரணமாய் காணப்பட்டதை பார்க்கிறோம். அவரின் பிறப்பிலிருந்து மரணம் வரை உபத்திரவங்கள், வேதனைகள் சூழ்ந்து காணப்பட்ட போதிலும் தேவ சித்ததிற்காக தொடர்ந்து காத்திருந்து தன்னை சுற்றியுள்ள எல்லா பாவிகளுக்கும், துரோகிகளுக்கும் மரணம்வரை பாவ மன்னிப்பையும் தனது மேலான அன்பையும் சிலுவையில் தொங்கி கொண்டிருந்த நிலையிலும் வெளிபடுத்தினார்.

நமது வாழ்கையில் தேவன் உபத்திரவங்களை அனுமதிக்கும்போது நாம் எவ்வாறு செயல்படுகிறோம்? பாவத்தை சகித்து தேவனுக்கு காத்திருக்கிற நிலையை கொண்டிருகிறோமா? பிறரை மன்னிக்கும் இருதயத்தை கொண்டிருக்கிறோமா? அல்லது மனித முயற்சிகளை, ஞானத்தை சார்ந்து சுய வழிகளை பின்பற்றுகிறோமா?

  • உபத்திரவத்தின் மத்தியில் தேவனின் செயல்பாடு (வ-2௦-21)

வ- 2௦ – அவன் இப்படி சிந்தித்துக்கொண்டிருக்கையில் – தனது பிரச்சனையின் விடுதலைக்காக ஏங்கிகொண்டிருக்கையில்,

கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: – தேவன் அவனது வாழ்கையில் இடைபடுகிறார்.தேவன் தனது மக்களை உபத்திரவத்திலே விட்டுவிடுபவர் அல்ல.அவர் அவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார். உபத்திரவப்படுகிற தேவ ஜனத்திற்கு நிச்சயம் விடுதலை உண்டு. தேவன் தனது செய்தியை அவனுக்கு அனுப்புகிறார்.

தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, – இங்கே தேவ தூதன் வெறுமனே யோசேப்பே என்று அழைக்கவில்லை, தாவீதின் குமாரானாகிய யோசேப்பே என்று அழைப்பதற்கான காரணம் என்ன? தேவனுக்கும் அவனுக்குமான உறவு இங்கு கூறப்படுகிறது. அவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்தின் புத்திரன், அவனின் முற்பிதா தேவனது நேசத்திற்குரிய தாவீது ராஜா. ஒருவேளை அது அவனுக்கு தெரிந்திருந்தாலும் இங்கே மறுபடியும் தேவன் அவனது முற்பிதாக்களின் வாழ்வில் தான் எப்படிபட்ட தேவனாக இருந்தார் என்று அவனுக்கு நினைவுபடுத்துகிறார். அவனின் தேவன் யார், கடந்த காலங்களில் இந்த தேவன் எப்படி செயல்பட்டார் என்று அவனுக்கு சொல்லபடுகிறது. உபத்திரவத்தின் மத்தியில் விசுவாசி தேவனுக்குள்ளான தனது நிலை என்ன, கடந்த காலங்களில் இந்த தேவன் தன்னிடத்திலே எவ்வாறு செயல்பட்டார் என்று நோக்கிபார்க்க அழைக்கபடுகிறான்.

உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; – இங்கே தேவன் யோசேப்பின் விருப்பங்களையும், வழிகளையும் நிர்மூலமாக்குகிறார். அவன் அவளை தள்ளிவிட முடிவெடுத்து தேவனது சித்தத்திற்கு காத்திருக்கிறான், தேவன் அவனது சித்தப்படி காரியங்களை செயல்படுத்தி தன்னை இந்த உபத்திரவத்திலிருந்து காப்பாறுவார் என்று எண்ணிகொண்டிருக்கிறான். அவன் எடுத்த முடிவு சரி என்று அதையே தேவனும் செய்வார் என்றுகூட அவன் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இங்கு தேவன் உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல, உங்களது வழிகள் என் வழிகள் அல்ல என்ற வார்த்தைக்கேற்ப தேவன் அவன் விரும்பியதற்கு மாறாக செயல்படுகிறார். அவன் எதை விரும்பவில்லையோ தேவன் இங்கு அவனை அதை செய்ய வைத்து தனது திட்டத்தை நிறைவேற்றுகிறார். அவனுக்கு அது கடினனமானதாக, அவனது  விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும் அவன் அதற்கு கீழ்படிவதையே தேவன் விரும்புகிறார். பிரச்சனையின் போது நமது விருப்பதை, நமது வழிகளில் தேவன் தீர்க்க வேண்டுமென்று எதிர்பார்க்காமல் தேவன் எதை விரும்புகிறாரோ, அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், எப்படிப்பட்ட விளைவுகளை கொண்டு வந்தாலும் அதற்கு கீழ்படிந்து வாழ்ந்தால் மாத்திரமே நமக்கு விடுதலை, இல்லையென்றால் நமது சுய வழிகள் தேவனின் கோபத்துக்கும் அவரது ஆக்கினைக்கு நேராகவே மட்டுமே நம்மை இட்டு செல்லும்.

அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது –

மரியாளின் கர்ப்பத்திற்கு காரணம் அவள் விபசாரம் செய்து, துன்மார்க்கமாய் வாழ்ந்ததினால் அல்ல. அவள் தேவனது உன்னதமான திட்டத்திற்காக தெரிந்துகொள்ளபட்டவளாயிருக்கிறாள் என்று அவனுக்கு கூறப்படுகிறது. மரியாள் தேவனால் பயன்படுத்தபடுகிற பாத்திரமாய் இருக்கிறாள் என்று அறிவிக்கபடுகிறது.

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாகஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். – அவனுடைய உபத்திரவத்தின் மூலம் தேவன் அவனுக்காக வைத்திருக்கும் மேலான ஆசீர்வாதத்தை வெளிபடுத்துகிறார். ஒரு யூதனாக மேசியாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் அவனது வாழ்வில் அவனது மனைவியினிடத்திலிருந்து அந்த உன்னதமான மேசியா வரப்போகிறார் என்கிற மகிமையான சத்தியம் அறிவிக்கபடுகிறது. நீதிமானாக பாவத்தோடு போராடுகிற யோசேப்புக்கு அந்த பாவத்திலிருந்து விடுதலை தரக்கூடிய தேவ குமாரன் அவனது குடும்பத்தில் பிறக்க போகிறார் என்ற மீட்பின் சுவிஷேசம் அவனுக்கு அறிவிக்கபடுகிறது. தேவனுடைய மேன்மையான இரட்சிப்பின் திட்டத்தில் மேலான பாத்திரமாக நீ பயன்படுத்தப்பட போகிறாய் என்கிற உன்னத அழைப்பு யோசேப்புக்கு  கொடுக்கபடுகிறது. பரிசுத்தமான தேவ குமாரனுக்கு பெயர் வைக்கும்படியான மாபெரும் சிலாக்கியத்தை நீ பெறுகிறாய் என்று கூறபடுகிறது. திரளான ஜனங்கள் வரப்போகிற கிறிஸ்து மூலமாக பாவத்திலிருந்து மீட்கப்பட நீயும் ஒரு கருவியாக பயன்படுத்தபட போகிறாய் என்கிற உன்னத ஆசீர்வாதம் கொடுக்கபடுகிறது.

வேதத்தில் உபத்திரவங்களை சந்தித்த ஒவ்வொரு தேவ மனிதர்களுக்கு பின்பாக இப்படிப்பட்ட மேலான தேவ திட்டமும், நோக்கமும் இருந்ததை பார்க்கலாம் ( ஆபிரகாம், யோசேப்பு, தாவீது, தானியேல், மோசே).

நமது ஆண்டராகிய இயேசுகிறிஸ்துவின் வாழ்விலும் தனது ஒவ்வொரு இக்கட்டான நிலைகளில் பிதாவாகிய தேவனுக்குள்ளான தனது உறவில் தன்னை திடப்படுத்திகொண்டு தேவன் தனக்குமுன் வைத்திருந்த உன்னதமான இரட்சிப்பின் திட்டத்திற்கு தன்னை ஒப்புகொடுத்தார்.

தேவ ஜனங்கள் சந்திக்கின்ற ஒவ்வொரு உபத்திரவங்களுக்கும், இக்கட்டான நிலைகளுக்கும் மத்தியில் தேவன் தனது இரட்சிப்பின் மேன்மையான திட்டங்களையும், செயல்பாடுகளையும் வைத்து இருக்கிறார். ஒரு விசுவாசியாக நீ இப்பொழுது உன் வாழ்கையில் கடினமான, பயம் நிறைந்த சூழ்நிலையில் காணப்படுவாயானால் அதின் மூலம் தேவன் உனக்கு அநேக ஆவிக்குரிய பாடங்களை கற்பிக்க இருக்கிறார் என்பதை மறவாதே. கிறிஸ்துவிற்குள்ளான உனது நிலையை அறிந்து அவர் ஒருவருக்கே உன்னை அர்ப்பணித்து வாழ்.  நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லதுஅதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன் (சங். 119:71)

3. உபத்திரவத்தின் மத்தியில் தேவ மனிதனின் கீழ்படிதல் (வ- 24-25)

வ. 24-   யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்துகர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;

தேவன் யோசேப்புக்கு தனது வார்த்தையை அனுப்பி அவனது பிரச்சனைக்கான தீர்வை கூறி, அவரது சித்தத்தையும் நோக்கத்தையும், தனது மேலான ஆசீர்வாதத்தையும் அறிவிக்கிறார். தேவ வார்த்தைக்கு கீழ்படியும்படியான மாபெரும் கட்டளையும் அவனுக்கு தரப்படுகிறது. யோசேப்பு இப்பொழுது எதை செய்ய வேண்டும்? அவனது சுய சித்தம் மரியாளை தள்ளிவிட சொல்கிறது. தேவனுடைய வார்த்தை அவளை சேர்த்துக்கொண்டு வாழ சொல்கிறது. மரியாளை சேர்த்துக்கொண்டு வாழ்வது என்பது யோசேப்புக்கு அவ்வளவு சுலபமான காரியமா? ஒருபோதும் இல்லை. யோசேப்புக்கு மரியாளை சேர்த்து கொண்டு வாழ்வது என்பது எவ்வளவு அவமானமான காரியமாக இருந்திருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். அவன் தனது பெற்றோர்களிடத்தில், தனது நண்பர்களிடத்தில், உறவினர்களிடத்தில் இதை கூறும்போது எப்படி செயல்பட்டிருப்பார்கள். எவ்வளவு எதிர்ப்புகளை அவன் சந்தித்து இருக்க வேண்டும். எவ்வளவுபேர் அவனை ஏளனம் செய்திருப்பார்கள், எவ்வளவுபேர் அவனை தூஷித்திருப்பார்கள். எல்லாவற்றையும் எதிர்கொண்டு அவனது உணர்வுகள் எவ்வளவு பாதிக்கபட்டாலும் தேவனது வார்த்தைக்கு கீழ்படிகிறான். அவனது முழு சமுதாயாமும் அவனை எதிர்த்தாலும் தேவ சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுக்க யோசேப்பு துணிகிறதை பார்க்கிறோம்.

“பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ நீங்களே நிதானித்துப்பாருங்கள்.” அப்.4:19

வ-25 “அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்துஅவருக்கு இயேசு என்று பேரிட்டான்.”

இங்கே யோசேப்பின் கீழ்படிதல் பாரபட்சமாக, அரைகுறை மனதோடு அல்ல. தன்னை முற்றிலும் தேவ வார்த்தைக்கு எவ்வாறு ஒப்புக்கொடுத்தான் என்று இப்பகுதி விவரிக்கிறது. அவன் மரியாளை மனைவியாக சேர்த்துகொண்டது மாத்திரமல்ல, தனது திருமண உறவின் எல்லாவிதமான மகிழ்ச்சிகளையும், ஆசைகளையும் தேவ வார்த்தையின் நிறைவேறுதலுக்காக முழு இருதயத்தோடு தன்னை அர்பணித்தான் என்று பார்க்கிறோம். தனக்கான எந்தவொரு சுய விருப்பங்களையும் வழிகளையும் செயல்படுத்த பிரயாசப்படாமல் தனது எல்லாவித உணர்வுகளையும் கட்டுபடுத்தி, கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்படும்வரை அனுதினமும் தனது சரீர சோதனைகளை தேவனது வார்த்தையினால் மேற்கொண்டான் என்று பார்க்கிறோம். வரப்போகிற கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தின் மேன்மைக்காக, அநேக ஜனங்களின் பாவ விடுதலைக்காக இங்கே யோசேப்பு தன்னை முற்றிலும் ஜீவ பலியாக தேவனுக்கு ஒப்புகொடுத்தான். சுயத்தை முற்றிலும் அழிப்பதே தேவ வார்த்தைக்கு கீழ்படிவதற்கான அஸ்திபாரம். “அப்படியிருக்கசகோதரரேநீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்றுதேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.” ரோமர். 12:1

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் பிதா தனக்கு நியமித்த இரட்சிப்பின் பணியை செயல்படுத்துவதற்கு முழு உலகமும் அவரை எதிர்த்த நிலையிலும் பிதாவின் நோக்கத்தை நிறைவேற்ற தனது சுயத்தை முற்றிலும் அழித்து, தனது பரலோக மேன்மையை இழந்து அடிமையாக தன்னை பிதாவின் சமூகத்திற்கு ஒப்புகொடுத்தார். (பிலி. 2: 6-8)

நமது விசுவாச வாழ்வு எப்படி? உபத்திரவங்கள், எதிர்ப்புகள் மத்தியில் தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிவதற்கு நம்மை முழுமையாக அர்பணிக்கிறோமா? அல்லது நமது சித்தபடி வாழ்கிறோமா? ஒரு விசுவாசியினுடைய வாழ்வில் அவன் விரும்பாத நிலையிலும் தேவன் தனது சித்தத்தை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். அழைக்கிற தேவன் தான் அழைக்கிற மனிதனின் வாழ்வில் அழைப்பின் நோக்கத்தை நிறைவேற்றாமல் ஒருபோதும் போவதில்லை. அவரின் வார்த்தை ஒருபோதும் வெறுமையாய் திரும்புவதில்லை, தேவன் செய்ய நினைப்பது ஒருபோதும் எந்த சூழ்நிலையிலும் தவறாது, அவர் தனது சித்தப்படி தனது ராஜ்ஜியத்தை கட்டுகிறார். எல்லா மனிதனும் அதற்கு கீழ்படிந்து தன்னை அர்பணிப்பதே அவசியமானதும், நன்மையானதும் கூட. உங்களை தமது பரம் இராஜ்ஜியதிற்கு அழைத்த தேவனின் வார்த்தைக்கு முற்றிலும் உங்களை அர்பணிக்காமல், உங்கள் சுயத்தை இழக்காமல் ஒருபோதும் தேவனின் மகிமையை உங்கள் வாழ்வில் காண முடியாது. மனந்திரும்பி உபத்திரவங்கள் மத்தியில் பொறுமையோடு காத்திருந்து தேவ வார்த்தைக்கு கீழ்படிந்து முற்றிலும் உங்களை அர்ப்பணியுங்கள் அப்பொழுது தேவன் யோசேப்பின் வாழ்க்கையைபோல உங்கள் வாழ்கையிலும் மகிமைப்படுவார். ஆமென்!.