ஆசிரியர் : போதகர் G. மார்க்

உலக நாடுகள் அனைத்திலும் மரண ஓலங்களும் பயங்களும் சூழ்ந்த இக்கட்டான நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருபுறம் சர்வ வல்லமையுள்ள தேவன் எல்லா மனித இனத்தினுடைய பாவத்திற்கு எதிரான தனது கோபத்தையும், நீதியையும் இந்த கொரோனா நோயின் மூலம் முழு உலகத்திற்கும் காண்பித்து வந்தாலும், மறுபுறம் தேவன் இதன் மூலம் தனது திருச்சபையும் கற்க வேண்டிய சில அடிப்படை படிப்பினைகளையும் வெளிபடுத்தி இருக்கிறார் என்பதை ஒருபோதும் நாம் மறுக்க முடியாது. இந்த கொரோனா நிகழ்வு கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு தரும் எச்சரிப்பும், காரியமும் என்ன என்பதை வேத அடிப்படையில் சுருக்கமாக பார்க்க உங்களை அழைக்கிறேன். 

சங்கீதம் – 42 : 1 – 4

வ- 1 – 3 – சபை கூடிவருதலை தடை செய்யும் தனிப்பட்ட பாவ வாழ்க்கை

சங்கீதம் 3, 42, 63 – இந்த 3 சங்கீதங்களும் ஒரே பின்னணியில் எழுதப்பட்டவை. இந்த சங்கீதத்தின் பின்னணி- தாவீது தனது முதிர்வயதில் தனது குமாரானாகிய அப்சலோமிற்கு தப்பி வனாந்திரதிற்கு கடந்து போகும்போது பாடிய சங்கீதம் (2சாமுவேல்-15,16). இங்கே தாவீது மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறார். தனது சொந்த மகனே ராஜ்ஜியபாரத்திற்காக தன்னை அழிப்பதற்கு துடிக்கின்ற நிலை, இவ்வளவு காலம் தான் ஆட்சிசெய்து பராமரித்து வந்த சுய ஜனங்களே தனக்கு எதிராக திரும்பிய நிலை, தன்கூட இருந்த தனது நம்பிக்கைக்குரிய நண்பர்களே  தனக்கு துரோகம்செய்து வஞ்சித்த நிலை, ஆக மொத்தம் எல்லாபக்கத்திலும் சுற்றிலும் நெருக்கபட்டு, தானும் தன்கூட இருக்கின்ற மனிதர்களும் முற்றிலும் சங்கரிக்கபடவுள்ள சூழ்நிலையில் தாவீது இந்த சங்கீதத்தை இயற்றுகிறார்.

மரணத்திற்கு ஏதுவான அழிவில் நின்றுகொண்டு தாவீது இப்படியாக கூறுகிறார் மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோலதேவனேஎன் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.” 

வனாந்திரத்திலே இருக்கிற தாவீது பல்வேறு வனவிலங்குகளை பார்க்ககூடிய சூழ்நிலையில் இருக்கிறார். அங்கே தண்ணீர் தடங்களை தேடி ஓடுகிற மானை பார்க்கிறார். பொதுவாக மான்கள் சிங்கத்தின் பிடியில் சிக்கும்போழுது கதறுவதை காட்டிலும், தண்ணீர் உள்ள இடத்தை தேடி வெகுதூரம் கதறி ஓடும். அப்படிப்பட்ட ஒரு  மானின் கதறுதலை தாவீது கவனிக்கிறார். அந்த மானை பார்க்கும்பொழுது தனது நிலையும் அந்த மானைப்போல இருப்பதாக உணருகிறார். இங்கே தாவீது தேவனுக்குள்ளான தனது ஆவிக்குரிய நிலையை ஆராய்ந்து பார்க்கிறார். கடவுளுடைய சமூகத்தை உணர முடியாமல், கடவுளுடைய உறவிலிருந்து முற்றிலும் பிரிக்கப்பட்டவராக தாவீது தன்னை உணருகிறார். மான் தண்ணீருக்காக கதறுவது போல இங்கே தாவீது தேவனுடைய உறவுக்காக அவருடைய பிரசன்னதிற்காக கதறுகிறார். தேவன் தன்னோடு இருக்கிறார் என்கிற நம்பிக்கையற்ற நிலையில் ஆவிக்குரிய நிலையில் வெறுமையாய் இருப்பதை போல உணருகிறார். 

இரண்டாவது வசனத்தில் நாம் பார்க்கும் போது என் “ஆத்துமா தேவன்மேல்ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது” ஆவிக்குரிய வெறுமையில் உள்ள தாவீது இங்கே தனது ஆவிக்குரிய தாகத்தை வெளிப்படுத்துகிறார். தனது ஆத்துமா நிம்மதியற்று பலவீனப்பட்டு இருக்கிறது என்கிறார். தனது வாழ்வில் கடவுளுடைய வழிநடத்துதலை உணர முடியவில்லை. தேவனை விட்டு தான் வெகுதூரம் பிரிக்கப்பட்டதாக தாவீது உணர்கிறார். 

ஏன் தேவனுடைய உறவில் வெறுமையையும், நிம்மதியற்ற நிலையையும் இவ்வாறு உணர்கிறார்? 2 வது வசனத்தின் பின்பகுதியில் தாவீது சொல்கிறார் “நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?” 

தாவீது தேவனுடைய பிரசன்னத்தை உணராததற்கும், உள்ளான வாழ்வின் வெறுமைக்கும், நிம்மதியற்ற நிலைக்கும் காராணம் தான் தேவனுடைய சந்நிதியிலிருந்து விலக்கப்பட்டிருகிறேன் என்றும் தான் தேவனுடைய வாசஸ்தலத்திலிருந்து துரத்தபட்டிருக்கிறேன் என்று உணர்ந்ததினால்தான். தாவீதை சுற்றி பல்வேறு ஆபத்து நிறைந்த பிரச்சனைகள் இருந்தாலும், தாவீது தான் தேவ சந்நிதியிலிருந்து விலக்கப்பட்டதற்காகவும் தேவனுடைய ஆராதனையிலிருந்து புறம்பாக்கப் பட்டதற்காகவும் துக்கமும் மன வேதனையும்  அடைகிறதை இங்கு பார்க்கிறோம். தாவீது இங்கு ஏன் தேவனுடைய சந்நிதியிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்? ஏன் ஆவிக்குரிய வெறுமையில் உள்ளார்? ஏன் அவருக்கு தேவனுடைய உறவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது? வசனம் மூன்றிலே அதற்ககான காரணத்தை கூறுகிறார்.

வ-3- உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால்இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.  

தாவீது அப்சலோமுக்கு பயந்து வனாந்தரத்தில் நடந்து வரும்போது அங்கே சிமேயி என்னும் ஒருவன் தாவீதை தூஷிக்கிறதை நாம் பார்க்கிறோம் (2சாமுவேல்- 16). இஸ்ரவேலின் தேவன் உன்னை கைவிட்டு விட்டார் என்று தாவீதைப் பார்த்து சிமேயி கூறுகிறான். நீ சிந்தின இரத்த பழிகளுக்கு தக்கதாக தேவன் உனக்கு நீதி செய்தார். தேவன் உன்னை விட்டு விலகினார். உன் அக்கிரமத்தை உன்மேல் தேவன் திரும்ப பண்ணினார், உன் வாழ்க்கையில் தேவன் இல்லையென்று என்று கூறுகிறான். தாவீது சிமேயின் வார்த்தைகளை மறுத்து பேசவில்லை. அவனை எதிர்க்கவில்லை. மாறாக அங்கு அமைதி காக்கிறார். தாவீதின் சேவகன் அபிசாய் சிமேயின் வார்த்தைகளினால் அவனை கொல்ல எத்தனித்திருந்தும் தாவீது அபிசாயை தடை செய்கிறார். தேவன் தன்னை சிமேயி தூஷிக்கும்படியாக கட்டளையிட்டுருக்கிறார் என்று தாவீது கூறுவதைப் பார்க்கிறோம். 

தாவீது இங்கு தனது பாவ நிலையை ஆராய்ந்து பார்க்கிறார். தேவனுக்கு விரோதமாக வாழ்ந்த பாவ வாழ்க்கையை குறித்து துக்கப்படுகிறார். இங்கு தேவனுடைய வாசஸ்தலத்திலிருந்தும், அவரை ஆராதிப்பதிலிருந்தும் துரத்தப்பட்டதற்கு தனது தனிப்பட்ட பாவ வாழ்க்கையே காரணம் என்று உணருகிறார். பத்சேபாளினிடத்தில் துணிகரமான விபச்சாரம், உரியாவை வஞ்சகமாக கொலை செய்தல், தனது பிள்ளைகளை தேவ பயத்தில் வழிநடத்தாமை இப்படிப்பட்ட தனது பல்வேறு பாவ வாழ்க்கையின் நிமித்தம் தேவ சமுகத்திலிருந்து தான் துரத்தப்பட்டிருக்கிறேன் என்று உணருகிறார். எனது தனிப்பட்ட பாவமே மக்கள் மத்தியில் தேவனுடைய நாமம் தூஷிக்கும் படியாக இருக்கிறது என்று அறிக்கையிடுகிறார். தனது தேசமும், தனது சொந்த மகனும் தன்னை அழிக்க தேடுகிற நிலையில், தான் முதலாவது தேவ சந்நிதியிலிருந்து, அவருடைய வாசஸ்தலத்திலிருந்து பிரிக்கப்பட்டதை தாங்க முடியாததாக வலியாக உணருகிறார். தனது தனிபட்ட பாவ வாழ்க்கையே தன்னை தேவனுடைய உறவிலிருந்தும், அவருடைய ஆராதனையிருந்தும், பிரித்திரிக்கிறது என்று அறிக்கையிடுகிறார். 

இன்றைக்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற கிறிஸ்தவ சூழ்நிலையும் இவ்வாறு தான் உள்ளது. உலகம் முழுவது தேவன் திருச்சபை ஆராதனையை நிறுத்தி வைத்திருக்கிறார். விசுவாசிகளாகிய நீங்களும் நானும் திருச்சபை கூடி வருதலை விட்டு விட்டோம். தேவன் நம்மை அவரை ஆராதிக்க வராதபடி தடை செய்திருக்கிறார். இதற்கு காரணம் என்ன? கொரோனா வைரஸ் என்று நீங்கள் சொல்லலாம். ஒரு வகையில் இந்த கொரோனா என்னும் கொள்ளை நோய், தேவனை அறியாத, விசுவாசிக்காத ஜனங்களுக்கு அவருடைய நியாயத்தீர்ப்பை வெளிப்படுத்துகிறதாய் இருந்தாலும் பாவத்தை தண்டிக்கிற தேவன் ஒருவர் உண்டு என்று கூறினாலும் மறுபுறம் திருச்சபை மக்களின்  மீதான தேவனது கோபத்தையும் இது காட்டுகிறது. 

ஆறு நாளும் தனது இஷ்டத்திற்கு வாழ்ந்துவிட்டு எல்லா அக்கிரமங்களையும், அநியாயங்களையும் செய்துவிட்டு ஏழாவது நாள் பக்திமான் மாதிரி ஆலயத்திற்கு வந்து தேவன் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கனும்னு எவ்வளவுபேர் வருகிறீர்கள்? பல வருடங்களா பல மாதங்களா கடவுளுடைய வார்த்தையை கேட்டும் தொடர்ச்சியாக உங்கள் இருதயத்தை கடினபடுத்தி அவருடைய வார்த்தையை அசட்டை செய்கிற உங்கள ஏன் அவர் இன்னும் தமது திருச்சபையில் அனுமதிக்கனும்? திருச்சபை கூடிவருதல் தடைபட்டு போனதற்கு உங்களுடைய தனிபட்ட பாவ வாழ்க்கைதான் முதல் காரணம். தேவனுடைய பிள்ளையென்று சொல்லிக்கொண்டு துன்மார்க்கனைபோல இந்த உலகத்துக்கு ஒத்து வாழக்கூடிய உன்னை ஏன் தேவன் தனது திருச்சபையில் வைத்து இருக்கனும்? தேவன் மறுபடியும் திருச்சபைகளை திறக்க வேண்டுமென்றால் முதலாவதாக தேவனுக்கு எதிரான உங்கள் தனிப்பட்ட பாவ வாழ்க்கையை விட்டு மனந்திரும்பி தாவீதைப்போல அவரிடம் இரக்கத்திற்காக மன்றாடுங்கள்.

வ- 4 – சபை கூடிவருதலை தடை செய்யும் திருச்சபையின் பாவ வாழ்க்கை

முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்துகூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனேஇவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது

தனது பாவத்தின் நிமித்தமாக தேவனது சமுகத்திலிருந்தும், அவரது ஆசரிப்புக்கூடார ஆராதனையிலிருந்தும் துரத்தப்பட்ட தாவீது அதற்காக துக்கப்பட்டு தனது பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்புகிறான்.  இங்கே 4 வது வசனத்தில், தாவீது தான் கடந்தகால சபையாகக்கூடி ஆராதித்த ஆராதனையின் ஆசீர்வாதங்களையும், தேவ ஜனங்களாக சபைகூடி அனுசரித்த பண்டிகைகளையும் நினைவுகூறுகிறார்.

தேவாலயத்திற்குப் போய்வருவேனே– பழைய ஏற்பாட்டில் ஆசரிப்புக்கூடாரம் என்பது தேவ மக்கள் தேவனுக்காக ஆராதனையையும் பண்டிகையையும்  ஆசரிக்கிற இடம். அங்கே பரிசுத்த தேவன் வாசம்செய்து தனது மகிமையை வெளிப்படுத்தி வந்தார். ஆசாரிப்பு கூடாரம் தேவனுடைய வார்த்தையான அவரது நியாயப்பிரமாணம் மகிமையாய் உயர்த்தபடுகிற இடம். மேலும் பலிகளும், சடங்குகளும் தேவனது மன்னிப்பையும் இரக்கத்தையும் பெறுகிற இடம் மற்றும் தேவனுகுள்ளான மகிழ்ச்சியையும், ஆறுதலையும் அவருடைய ஜனங்களோடு கூடி பெறக்கூடிய இடம் இந்த ஆசரிப்புக்கூடாரம். தேவன் கிருபையாய் தந்த இவையெல்லாவற்றையும் இப்போது தாவீது நினைத்து பார்த்து எவ்வளவு உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதங்களை இழந்து விட்டேன் என்று துக்கப்படுகிறார். 

 இன்று நமது கிறிஸ்தவ திருச்சபைகளின் நிலை இதுதான். சர்வ வல்லமையுள்ள தேவனே உலகம் முழுவதும் திருச்சபை கூடிவருதலையும், ஆராதனையையும் தடை செய்திருக்கிறார். சபைகூடிவருதல் இல்லாமல் நாம் எத்தகைய நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் இழந்திருக்கிறோம்.   

புதிய ஏற்பாட்டில் பார்க்கும்பொழுது கிறிஸ்துவின் மகிமை நிறைந்த மற்றும்  கிறிஸ்து மகிமைப்படுகிற இடம் திருச்சபை மட்டுமே (எபே.3:21). தேவனுடைய வார்த்தை வல்லமையோடும், அதிகாரத்தோடும் பிரசங்கிக்கபடுகிற இடம் திருச்சபை மட்டுமே (1தீமோ.3:15). இயேசுகிறிஸ்துவின் பாவ மன்னிப்பும், கிருபையும் உயர்த்தபடுகின்ற இடம் திருச்சபை மட்டுமே. கிறிஸ்துவின் மரணத்தையும், உயிர்த்தெலுதலையும் உன்னதமாக நினைவு கூறி திருவிருந்தில் அவரோடு இணைத்து நம்மை அடையாளபடுத்துகிற இடம் திருச்சபை மட்டுமே. மொத்தத்தில் திரியேக தேவனின் மகிமையை காண்கிற இடம் திருச்சபை மட்டுமே. இவையெல்லாவற்றையும் தேவன் இப்பொழுது தடை செய்திருக்கிறார். நிறுத்தி வைத்திருக்கிறார். ஏன்? எதினால்?

உலகளாவிய திருச்சபைகளின் பின்மாற்றத்தை இவை வெளிப்படுதவில்லையா? கிறிஸ்துவின் சபையானது அவருக்கு பாத்திரமாக செயல்படவில்லை என்பதே இதின் மிக அடிப்படையான காரணம். தனது திருச்சபையின் மனந்திரும்புதலுக்கான பெரிய எச்சரிப்பையும் தேவன் இதின் மூலம் தந்திருக்கிறார். வேதத்தில் இதற்கான எச்சரிப்புகளை பல்வேறு இடங்களில் பார்க்கிறோம். ஏசாயா 1:14, 13- “உங்கள் மாதப்பிறப்புகளையும்உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறதுஅவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறதுஅவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறதுநீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும்ஓய்வுநாளையும்சபைக்கூட்டத்தையும் நான் இனிச் சகிக்கமாட்டேன்.”  புலம்பல் 2: 6, 7 – “தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாய்ப் பிடுங்கிப்போட்டார்சபைகூடுகிற தம்முடைய ஸ்தலங்களை அழித்தார்கர்த்தர்சீயோனிலே பண்டிகையையும் ஓய்வுநாளையும் மறக்கப்பண்ணிதமது உக்கிரமான கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் புறக்கணித்துவிட்டார். ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்;

தேவனது மக்கள் தொடர்ந்து அவரை அசட்டைபண்ணி அவரது ஆலயத்தை பரிசுத்த குளைச்சலாக்கும்போது பரிசுத்த தேவன் அவர்களை வெறுத்து தமது சமூகத்தினின்று துரத்தி விடுகிறார்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தனது வாழ்வில் ஆலய ஆராதனையை எவ்வளவு கனத்தோடு கடைபிடித்தார் என்பதை சுவிசேஷங்களில் பார்க்கிறோம் (லூக்கா- 4:16, 21:37). அவர் தேவனாக இருந்தும் பாவியான மனிதன் நடத்திய ஆராதனையில் அவர் பங்குபெற்றார். அப்போஸ்தலர்களுடைய வாழ்வில் சபை கூடிவருதலும் ஆராதனையும் மிக முக்கியமான இடத்தில் இருந்தது (அப்.- 2,4,5). அவர்கள் திருச்சபையாக கூடி ஆராதிக்கும் போதே திருச்சபையில் அசாதாரண செயல்களை தேவன் நடபித்தார். அப்.பவுலின் ஊழியங்கள் முழுவதும் ஜெப ஆலயத்தை சார்ந்தும், சபைகூடுதலை சார்திருந்ததை பார்க்கிறோம். நிருபங்கள் முழுவதும் திருச்சபை கூடிவருதலின் மேன்மைகளை பார்க்கிறோம். 

எபி.- 10:25-ல் திருச்சபை கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள் என்ற மாபெரும் எச்சரிப்பை பார்க்கிறோம். 

கடந்தகால திருச்சபை வரலாற்றை நாம் கவனித்து பார்க்கும்போது இப்படிபட்ட உலகம் முழுவதுமாக கூடிவருதலும் ஆராதனையும் தடை செய்யப்பட்ட ஒரு நிகழ்வை நாம் எங்கும் பார்க்க முடியாது. ஆதி திருச்சபையின் நாட்களிலிருந்து வரலாறு முழுவதுமாக உற்று பார்க்கும்போது ஏதோ ஒரு சில நாடுகளில் திருச்சபையானது உபத்திரவத்திற்குள்ளாக தள்ளப்படும் போது அங்கே ஆராதிப்பதற்கான தடைகளை நாம் பார்க்கிறோம். ஒரு சில பகுதிகளில் திருச்சபைகள் மூடப்பட்டாலும் மறுபுறம் திருச்சபை ஆராதனையும், சபை கூடிவருதலும் தொடர்ந்து நடந்து வந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. ஆனால் நாம் பார்க்ககூடிய இன்றைய சூழ்நிலை உலகம் முழுவதும் ஆராதனைகளும், சபை கூடிவருதலும் நிறுத்தப்படிருக்கிறது. சர்வ வல்லமையுள்ள தேவனே அதை செய்திருக்கிறார். தேவனே திருச்சபையை பூட்டி வைத்திருக்கிறார். ஏன்? 

அவரை ஆராதிக்க வருகின்ற உங்களுடைய என்னுடைய பாவ வாழ்க்கையின் நிமித்தமாகத்தான் என்பதாக இல்லையா? இன்றைக்கு நம் கிறிஸ்தவ சமுதாயத்தில் ஆராதனை என்கிற பெயரில் நடக்கின்ற அட்டுழியங்களை எவ்வளவு நாள் தேவன் பொறுத்துக்கொண்டு இருப்பார்? வெறும் சத்தமும், ஆட்டம், பாட்டம், கும்மாளமும் தானே இன்றைய ஆலய ஆராதனைகளில் மலிந்து காணப்படுகிறது. கடவுளுடைய பெயரை சொல்லிக்கொண்டு தான் மனம்போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும்  மக்களை எவ்வளவு காலத்துக்கு தேவன் சகித்துக்கொண்டிருப்பார்? தேவனுடைய சபையாக அவரை கூடி ஆராதிப்பதற்கு தடையாக இருப்பது அவருடைய திருச்சபை மக்களின் பாவ வாழ்க்கையும் மிக முக்கிய காரணம். 

உங்களது திருச்சபை கடவுளுடைய ஆராதனைக்கு கொடுக்க வேண்டிய கனத்தையும், மரியாதையையும் எவ்வளவு தூரம் கொடுக்கிறது? சபைகூடிவருதலையும், ஆராதனையையும் எவ்வளவு அலட்சியமாக நீங்கள் எண்ணுனீர்கள்? சபைகூடிவருதலையும், ஆராதனையையும் ஒரு பொருட்டாவே நீங்கள் எண்ணவில்லையே. உங்கள் சௌகரியத்திற்கு ஏற்றாற்போல் நினைச்சா ஆலயத்திற்கு போறது இல்லைனா போகாம இருந்து கொள்வதென்று நீங்கள் நடந்து கொள்ளவில்லையா? 10 மணிக்கு ஆராதனை என்றால் நாம நெனைச்ச நேரத்திற்கு போகிறதில்லையா? ஆலயஆராதனையில் உட்கார்ந்து கொண்டு தேவ பயமில்லாமல் மனம்போன போக்கில் எதையாவது சிந்தித்துகொண்டு இருக்கவில்லையா? தேவனுடைய வார்த்தை பிரசங்கிக்கபடுகிற வேளையில் எவ்வளவு கனவீனமாக தூங்கிக்கொண்டிருந்தீர்கள் எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்தீர்கள்? திருச்சபை ஜெபகூட்டத்தை எந்த அளவுக்கு புறம் தள்ளுனீர்கள்? 

இப்படி எல்லாவழியிலும் தேவனுடைய வீட்டை அசுத்தபடுத்திய உங்களை எதற்கு தேவன் தமது திருச்சபையில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்? தேவனை ஆராதிக்க முடியவில்லையே என்கிற துக்கமும், வருத்தமும் உங்களுக்கு வருகிறதா? எவ்வளவுபேர் சபைகூடிவருதலும், ஆராதனையும் நடைபெறாததை குறித்து தாவீதைப்போல கண்ணீரோடு தேவ சமூகத்தில் ஜெபித்து இருக்கிறீர்கள்? அதைக்குறித்த பாரமும், துக்கமும் உங்களுக்கு இருக்கிறதா? திருச்சபையாக தேவனுக்கு எதிராக செய்த பாவங்களை விட்டு மனந்திரும்பி தேவ சமூகத்தில் இரக்கத்திற்காக அவரிடம் கெஞ்சுங்கள். முதலாவது உங்களது தனிப்பட்ட, குடும்பமாக நீங்கள் செய்த பாவங்களை தேவ சமூகத்தில் இருதய சுத்தத்தோடு அறிக்கையிட்டு தேவனிடம் மனந்திரும்புங்கள்!. அடுத்ததாக திருச்சபையாக எவ்வளவு துரம் தேவனை உதாசீனப்படுத்தி அவருடைய கடிந்து கொள்ளுதலை அசட்டைசெய்து, அவருடைய நாமத்திற்கு அவகீர்த்தி உண்டுபண்ணும்படி வாழ்ந்தீர்கள் என்று உணர்ந்து உங்கள் வாழ்க்கையை தேவனுக்கு முன்பாக சீர்படுத்துங்கள்!!. கிருபையுள்ள தேவன் தாமே தயவாய்  நம்மை மன்னித்து, அவருடைய திருச்சபையை திறந்து மறுபடியும் ஆராதனையும் சபைகூடிவருதலும் நடக்கும்படி அநுக்கிரகம் செய்வாவாராக. ஆமென்!.