யோனா 1 :1-4 

அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.

 

நாம் யோனா தீர்க்கத்தரிசன புத்தகத்தில் இருந்து சிந்தித்து வருகிறோம்.யார் இந்த யோனா? யாருடைய நாட்களில் தன்னுடைய தீர்க்கத்தரிசன ஊழியத்தை செய்து வந்தான். அவனுக்கு தேவன் எப்படிப்பட்ட  அழைப்பை கொடுத்தார். இந்த யோனா தீர்க்கத்தரிசன புத்தகத்தின் தன்மையையும், தேவனின் செய்தி எதில் வெளிப்படுகிறது என்பதையும் நாம் யோனாவின் அறிமுகம் என்கிற தலைப்பில்  சிந்தித்தோம். 

வேதத்தின் ஒரு தனித்துவம் என்னவென்றால், வேதத்தில் கூறப்பட்டிருக்கும் மனிதர்களின் வாழ்வில் உள்ள நன்மைகளை மட்டும் எடுத்துரைக்காமல், அவர்கள் வாழ்வில், அவர்கள் செய்த பாவத்தையும் பரிசுத்த ஆவியானவர் வேதத்தில் சுட்டிக்காட்டுகிறார். பழைய ஏற்பாட்டில் நாம் வாசிக்கும்போது, நோவா பொல்லாத சந்ததியில் அவன் மட்டும் தேவனுக்கு பிரியமாய் வாழ்ந்து கீழ்ப்படிந்தான் என்றும்  வெள்ளத்திற்கு பின்பு அவன் குடித்து வெறிக்கொண்டு நிர்வாணமாக கிடந்தான் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஆபிரகாமை விசுவாசத்தின் தகப்பன் என்ற அடையாளத்தை கொடுத்திருந்தாலும் அவனுடைய பலவீனமான  விசுவாசத்தினால் அவனுடைய  பாவக்கிரியைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. தாவீது தேவனுடைய இருதயத்திற்கு  ஏற்றவானாய் இருந்தாலும், பத்சேபாளிடம் அவன் செய்த பாவம், அவனையும், அவன் குடும்பத்திற்கும் எப்படிப்பட்ட விளைவுகளை கொடுத்தது என்று கூறுகிறது. புதிய ஏற்பாட்டில் பேதுரு மிகவும் தைரியசாலி என்றாலும், அவனுடைய மருதலித்தலையும் பலவீனங்களையும் வேதம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டுகிறது. அதே போன்ற ஒரு நிகழ்வை தான் இங்கு நாம் காண்கிறோம். வேதம் தொடர்ச்சியாக மனிதனுடைய பாவ நிலையை சுட்டிக்காட்டுகிறதாயிருக்கிறது. வேதத்தின் தன்மையே மனிதனுடைய பாவத்தை சுட்டிக்காட்டி அதிலிருந்து மனந்திரும்பும்படியான வழியை இயேசு கிறிஸ்துவின் மூலமாக காட்டுகிறதாய்  இருக்கிறது.

வேதம் தொடர்ச்சியாக மனிதனுடைய பாவ நிலையை சுட்டிக்காட்டுகிறதாயிருக்கிறது. வேதத்தின் தன்மையே மனிதனுடைய பாவத்தை சுட்டிக்காட்டி அதிலிருந்து மனந்திரும்பும்படியான வழியை இயேசு கிறிஸ்துவின் மூலமாக காட்டுகிறதாய்  இருக்கிறது.

யோனாவின் கீழ்ப்படியாமை

யோனா 1:3 ” அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.

யார் இந்த யோனா? இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய தீர்க்கதரிசி. ஒரு போலியான தீர்க்கத்தரிசியல்ல. யோனா கர்த்தருடைய தீர்க்கத்தரிசி. அவனுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, நேரடியாக தேவனுடைய கட்டளையை பெற்றான். அப்படி தேவனிடத்திலிருந்து நேரடியாக கட்டளையை பெற்றிருந்தாலும் அவன் தேவனுடைய கட்டளையை  முழு மனதோடு தைரியமாய்  தேவனுக்கு கீழ்ப்படியாமல் போகிறான். கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்காமல், அதை தனக்குள் வைத்துக்கொண்டு யாரிடம் இந்த செய்தியை சொல்ல வேண்டுமோ அவர்களிடம் சொல்ல ஒரு துளியளவும் விருப்பமற்றவனாய் காணப்பட்டான். தேவனுடைய வார்த்தை மிகவும் தெளிவானதாக யோனாவுக்கு கொடுக்கப்பட்டது. 

தேவனுடைய வார்த்தை மிகவும் தெளிவானதாக யோனாவுக்கு கொடுக்கப்பட்டது. நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.” நியாயத்தீர்ப்பின்  செய்தியை அறிவிக்க வேண்டும்.நினிவேயின் பொல்லாப்புக்கு விரோதமாக பேச வேண்டும் என்பது தான் தேவனிடமிருந்து யோனா பெற்ற கட்டளை.  யோனா கீழ்ப்படியாமல் எங்கிருந்து எங்கு போகிறான் என்று பாருங்கள். யோனாவின் வாழ்ந்த இடம் நாசரேத் ஊருக்கு மிக அருகானது. நாசரேத் இஸ்ரவேல் தேசத்தின் வடதிசை எல்லை. நாசரேத் ஊரில் இருந்து நினிவே பட்டணம் மிக தொலைவு அல்ல. இஸ்ரவேலின் எல்லையை கடந்தால் அசிரியா தேசம். மிக அருகில் நினிவே பட்டணம். அதை விட்டு முற்றிலும் எதிர்திசையிலும், மிக தொலைவிலும் உள்ள தர்ஷிசுக்கு  எழுந்து போனான். தர்ஷிஸ்  என்பது இன்றைக்கு இருக்கிற ஸ்பெயின் நாட்டிலுள்ள ஒரு கடல் பகுதி. தேவனுடைய கட்டளைக்கு முழுவதும் மாறாக சென்றான். யோனா தர்ஷிசுக்கு எங்கிருந்து போகிறான்? யோப்பா பட்டணத்தை தேர்வு செய்து அங்கிருந்து தர்ஷிசுக்கு போகிறான். யோப்பா பட்டணத்தை ஏன் தேர்வு செய்தான்? யோப்பா புறஜாதி பட்டணம், அங்கே தெரிந்தவர்கள் யாருமில்லை. ஏன்? எங்கே போகிற யோனா? என்று கேட்க ஆள் கிடையாது.

வசனம்-3-ஐ பார்க்கும்போது யோனா மிக முக்கியமாக கர்த்தருடைய சமுகத்தைவிட்டு விலகி இரண்டு முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய சமுகம் என்பது, தேவன் தன்னை தொடர்ச்சியாக பிரத்தியேகமாக வெளிப்படுத்தும் இடம்.  அவர் ஏற்படுத்தின முறைகளில் தன்னை தன்னுடைய ஜனங்களுக்கு வெளிப்படுத்துவார். கர்த்தருடைய சமுகம் என்பது கர்த்தருக்கு “பிரியமான இடம்.”  இஸ்ரவேலின் ஆசரிப்புக் கூடாரத்தில் அவருடைய பிரசன்னம் இருந்தது. அதன்பின்பு தேவாலயம் அவருடைய சமுகமாயிருந்தது. அங்கே தான் அவரை ஆராதிப்பதும், ஆசாரிய முறைகளும் தொழுதுகொள்ளும் இடம். இஸ்ரவேல் தேசம் அவருடைய சமூகமும், அவருடைய பிரசன்னமுமாய் இருக்கிறது. அவருடைய சமூகம் என்றால், அவரை நினைவுகூறும் இடம். ஆசாரியன், தேவாலயம், தீர்க்கதரிசி, பலிகள் என்று கர்த்தரை நினைவுகூறும் இடம்.  யோனாவிற்கு தொடர்ச்சியாக கர்த்தரைப்பற்றிய காரியங்களை நினைவுப்படுத்தும் ஓர் இடமாக இஸ்ரவேல் தேசம் இருந்தது. தேவனுடைய முழுமையான ஆளுகையையும், திருநியமங்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும் ஓர் தேசத்தை விட்டு யோனா விலகி செல்கிறான். 

கர்த்தருடைய சமுகம் என்பது, தேவன் தன்னை தொடர்ச்சியாக பிரத்தியேகமாக வெளிப்படுத்தும் இடம்

இதை போல தான் இன்று அநேக கிறிஸ்தவர்கள்,விசுவாசிகள் என்று கூறுகிறவர்களும் கூட கர்த்தருடைய சமுகத்தை விட்டு விலகிவிடுகிறார்கள். விலகி, அதற்காக அநேக சாக்குபோக்குகளை கூறுகிறார்கள். தேவன் ஏற்படுத்தி தன்னை வெளிப்படுத்த நினைக்கும்  இடத்தை விட்டு விலகுகிறார்கள். தங்களுடைய சுய எண்ணமும், தங்கள் பாவ வழிகளையும் நடைமுறைபடுத்த கர்த்தரை விட்டு விலகுகிறார்கள். இன்று தேவன் தன்னை திருச்சபையில் வெளிப்படுத்துகிறார். சபைக்கு வருவதை விரும்பாதவர்கள். அதற்கு அநேக போலியான சாக்குபோக்குகளை கூறி, விசுவாச ஐக்கியத்தை விரும்பாதவர்களாய் காணப்படுகிறார்கள். என்னை யாரும் எந்த கேள்வியும் கேட்டுவிடக் கூடாது என்று கூறி யோனாவை போல யோப்பாவை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.    

விசுவாச வாழ்வு என்பது “அது தேவனோடு வாழும் வாழ்வை எதிர்பார்க்கிறது.” “கர்த்தருடைய கட்டளையை விருப்பமுடன் கைக்கொள்ளாத யாவரும் தேவனுடைய சமுகத்தை விட்டு விலகுகிறவன்.” கர்த்தருடைய கட்டளை என்பது தேவன் சொன்ன அனைத்தும் விசுவாச வாழ்வு,பரிசுத்த வாழ்வு, சக மனித ஐக்கியம், வேதவாசிப்பு, ஜெபம், ஆராதனை,விசுவாசியின் பொறுப்பு போன்ற அனைத்தும் அடங்கும். தனிப்பட்ட விசுவாச வாழ்வு மட்டுமே ஒரு மனிதனின் விசுவாசத்தை ஊர்ஜிதம் செய்கிறது. யோனா தர்ஷிசுவில் தன்னுடைய நாட்களை கழிக்க சென்றுவிடுகிறான். யோனா, தேவன் தனக்கு கொடுத்த ஆசீர்வாதத்திற்கு எதிராக பாவம் செய்தான். என்ன ஆசீர்வாதத்தை யோனா பெற்றிருந்தான்.

  • தேவனுடைய தீர்க்கத்தரிசி
  • பரலோக தேவனிடத்தில் இருந்து நேரடியாக வெளிப்பாடை பெறுகிறவன்.
  • தேவன் இருக்கும் நிலத்தில் இருப்பவன்.
  • தேவாலயத்தில் தங்கும் உரிமையை பெற்றிருந்தவன்.

ஆசீர்வாதங்கள் நமக்கு பொறுப்பை வளர்க்கிறது. பொறுப்பை மீறுகிறவன் பாவத்தை அதிகரிக்கிறான். நாம் பெற்ற கிருபை மற்றும் இரக்கத்தின்படியே நம்முடைய பாவத்தின் அளவும் கூடுகிறது. பாவம் எப்பொழுதுமே காரணமற்றது. பாவம் எப்பொழுதுமே கடவுளை குறித்ததான ஏதோ ஒரு காரியத்தை மறுதலிக்கிறது. பாவம் கடவுளின் குணாதிசயத்தை மறுதலிக்கிறதாகவே  இருக்கிறது. பாவம் எப்பொழுதுமே கடவுளை விட்டு விலகி செல்ல செய்கிறது. பாவம் தேவனுடைய கிருபையையும் இரக்கத்தையும் விட்டு விலக்கி தேவனின் கோபத்தை வழிவகுக்கிறது. ஒரு மனிதன் தன் வீட்டை விட்டு விலகி, கிறிஸ்தவ சபை, விசுவாச ஐக்கியத்தை விட்டு விலக செல்லலாம். ஆனால் தேவனுக்கு மறைவாக எங்கும் செல்ல முடியாது, என்பதை நினைவில் கொள்ள வேண்டும் சங்கீதம் 139 ஐ வாசிக்கவும். 

யோனா கீழ்ப்படியாமல் போவதற்கான காரணம் என்ன?

யோனாவின் கீழ்ப்படியாமைக்கு காரணம் பயமா? 

யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.

யோனாவின் கீழ்ப்படியாமைக்கு காரணம் பயம் அல்ல. அவர்கள் மீதான வெறுப்பு. அவன் அங்கே போய் பிரசங்கிக்க விருப்பமற்றவனாய் தேவனுடைய கட்டளைக்கு கைக்கொள்ள விருப்பமற்றவனாகவும் மாறினான். யோனா தேவனுடைய வல்லமையை நம்பியிருந்தான் யோனா 4:2. அவனுக்கு பிடிக்காதவர்களுக்கு / எதிரிக்கு சுவிசேஷத்தை  கூறு என்கிற தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தான். அதற்கான காரணம் வெறுப்புணர்வு.  யோனா தன் இருதயத்தை காத்துக்கொள்ள தவறினான். கடுங்கோபமும்,மனகசப்பும் மிகுந்து தங்களுக்கு ஏற்பட்ட காயங்களை மன்னிக்காத ஒவ்வொரு விசுவாசியும் யோனாவை போலவே பாவம் செய்கிறவன். தன் மனதில் கோபத்தையும் கசப்பையும் வளர்ப்பவன், ஒரு தோட்டக்காரன் தனக்கு பிடித்த மரத்தையும் மட்டுமே பாதுகாத்து வளர்த்து மற்ற மரங்களை பராமரிக்காமல் விட்டு வைத்தால் பாதிப்பு மரத்திற்கு அல்ல, தொட்டக்காரனுக்கே. உன்னை நீயே காயப்படுத்திக்கொள்கிறாய். கொலோசெயர் 3:13 கூறுகிறது போல இயேசு கிறிஸ்து பாவ விடுதலையை உங்களுடைய பாவத்திற்கு மட்டும் கொடுக்கவில்லை அவரை விசுவாசிக்கிற, நீங்கள் பகைக்கிற மனிதனுக்கும் கொடுத்து மன்னித்திருக்கிறார். சிலுவையை நினைத்து பார்த்தால்  நாம் நிச்சயமாக மற்றவர்களை மன்னிப்போம்.

ஒரு மனிதன் பாவம் செய்ய முன்வரும்போது அவனுக்கான அனைத்து வசதிகளையும் சாத்தான் செய்து கொடுப்பான். பாவம் செய்யும் போது அனைத்து காரியமும் கூடி வருவது அது தேவனுடைய சித்தமல்ல. சூழ்நிலைகள் தேவனுடைய சித்தத்தை நிருபிக்காது. தேவனுடைய சித்தத்தை நிரூபிப்பது எப்பொழுதுமே கர்த்தருடைய வார்த்தையே. பாவம் எப்பொழுதுமே நாம் நினைத்து பார்க்காத அளவுக்கு ஆழமாக கொண்டு செல்லும்.  

தேவனுடைய இரக்கமும்,கிருபையும்   

வசனம் – 4 “கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.”

யோனாவின் எண்ணம்: தேவனுடைய தீர்க்கத்தரிசி என்ற ஊழியத்திலிருந்து தேவன் என்னை நீக்கிவிடுவார் என்று எண்ணியிருந்தான். கப்பலில் தர்ஷீசுக்கு தான் போறோம் என்று எண்ணியிருப்பான். நினிவேக்கு நான் போய் பிரசங்கம் பண்ணுவதில்லை. தேவன் யோனாவை அப்படியே விட்டு விடுவதில்லை எரேமியா 31 :35 “சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர்”.  தெய்வீக சிட்சைக்கான ஒரு உதாரணம் யோனா. எபிரேயர் 12 :6 வாசிக்கவும். தேவன் நிச்சயமாய் தன்னுடைய பிள்ளைகளை சிட்சிக்கிறார். சிட்சை உடனடியாகவும் வராது. தேவன் சில நேரங்களில் உங்களுடைய பாவத்தை கண்டுக்கொள்ளாதது  போல இருக்கலாம், ஆனால் அதற்கான தக்க சிட்சை நிச்சயம் உண்டு. உண்மையாக விசுவாசி தேவனுடைய சமூகத்தை விட்டு விலகி செல்லவே முடியாது. அவருடைய பிள்ளைகளோ அவர் சித்தத்திற்கு கீழ்படியாமல் போகும்போது அவர் கோபம் கொள்வதில்லை அதற்கு பதிலாக தேவன் தன் இரக்கத்தை வெளிப்படுத்துகிறார். இன்றைக்கு நாம் இருக்கிறோம் என்றால் அவருடைய அன்பும் கிருபையும் இரக்கம் மட்டுமே. தம் பக்கமாக மறுபடியும் இழுத்துக்கொள்ள விருப்பமுள்ளவராய் இருக்கிறார். ஒரு விசுவாசிக்கு எவ்வளவு பெரிய பாதுகாப்பு. இயேசு கிறிஸ்துவின் சிலுவை இன்றும் உங்களை தம் பக்கமாக சேர்த்துக்கொள்ளுகிறது. பின்வாங்கி போன விசுவாசியே மனந்திரும்பு. தேவனுடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே. தேவன் யோனாவின் வாழ்வில் செயல்பட்டார். அதேபோல உங்களுடைய வாழ்வில் செயல்பட தேவன் கிருபையும் இரக்கமும் பாராட்டுவாராக. ஆமென்.