தனித்துவமும் சத்தியமும் நிறைந்த வேத கொள்கைகளை பற்றுறுதியுடன் விசுவாசிப்பதினால் சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள் மற்ற திருச்சபைகளில் இருந்து வேறுபட்டு தனிசிறப்புடன் செயல்படுகிறது. பின்வரும் வேத கொள்கைகளை சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள் விசுவாசிக்கின்றன.
கர்த்தருடைய வார்த்தை போதுமானது, அதிகாரமுடையது:
சகல மெய் கிறிஸ்தவ விசுவாசிகளும் கர்த்தருடைய வார்த்தையின் அகத்தூண்டுதலையும், தவறின்மையையும் விசுவாசித்தாலும், வேதம் போதுமானது என நம்புவதில்லை. வேதம் கர்த்தருடைய ஆவியானால் அருளப்பட்டதினால், அதில் எங்கும் பிழையோ தவறோ இல்லை என்று அனைத்து மெய் கிறிஸ்தவர்களும் விசுவாசிப்பதுண்டு. இதை மறுக்கிறவன் தேவனை பொய்யராக்கி தன் ஆத்துமாவை அழித்துப் போடுகிறான். இதை விசுவாசித்தபோதிலும், தங்களுடைய தனிப்பட்ட மற்றும் திருச்சபை வாழ்வின் எல்லா நிலைகளிலும் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் அனைவரும் வாழ்வதில்லை. இந்த நவீன மற்றும் பின் நவீன காலங்களில, வேதம் எல்லா தரப்பு மக்களின் அனைத்துத் தேவைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் குழப்பங்களுக்கும் போதுமான வழிகாட்டியாக இல்லை என்பதே பெரும்பாலான கிறிஸ்தவர்கள் மற்றும் போதகர்களின் குற்றச்சாட்டு. ஆனால் உண்மை அதுவல்ல. வேதம் எக்காலத்திற்கும், அணைத்து தரப்பினருக்கும், எல்லா காலகட்டங்களிலும் போதுமானதாகவே இருக்கிறது. அதற்குத் தங்களை உட்படுத்தி வாழ ஜனங்களுக்கு விருப்பம் இல்லை. எனவே, கிறிஸ்துவினால் நியமிக்கப்பட்ட மந்தைகளின் மேய்ப்பராகிய போதகர்கள் ஏசாயா தீர்க்கதரிசியைப் போல வேதத்தை எடுத்துரைக்க வேண்டும். வேதத்தையும், சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும். இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
எது திருச்சபை என வேதம் மட்டுமே போதிக்கிறது:
தேவ ஜனங்களுக்கு கிருபையின் சத்தியத்தை எடுத்துரைக்கின்ற ஸ்தலமாகிய திருச்சபை எவ்வாறிருக்க வேண்டுமென்றும், அதன் பணிகள் என்னவென்றும் வேதம் மட்டுமே போதிக்கிறது. மூப்பர்கள் மற்றும் உதவிக்கரர்கள் எனும் இரண்டு மகத்தான பணிகளையும், அவர்களுடைய தகுதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் வேதம் போதிக்கிறது. திருச்சபையில் ஆராதனை எவ்வாறிருக்கவேண்டும் என்றும், யார் திருச்சபையின் அங்கத்தவர்களாக முடியும் என்றும் அவர்களுடைய சிறப்புரிமைகள் மற்றும் வேதம் அவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறதென்றும் வேதம் தெளிவாகக் கூறுகிறது. மேலும், திருச்சபை என்ன செய்ய வேண்டும் எதனடிப்படையில் பிற திருச்சபைகளோடு ஐக்கியம் கொள்ள வேண்டும். சுவிசேஷம் அறிவிப்பதற்கு மிஷெனரிகளை எவ்வாறு அனுப்ப வேண்டும். ஊழியத்திற்கென்று மனுஷரை எப்படி பயிற்சிக்க வேண்டும் மற்றும் தனது ஜனங்களுக்கான தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவது தொடர்பான காரியங்கள் அனைத்திற்கும் வேதம் மட்டுமே போதுமானது.
தேவ மகிமைக்கென்று திருச்சபை ஜீவிக்கிறது:
இது சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகளின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். திருச்சபை தேவ மகிமைக்கென்று ஜீவிக்கிறபடியால், தேவனுடைய ஆராதனையும், கர்த்தருடைய வார்த்தையும் அதன் ஜீவதாரமாய் இருக்கிறது. திருச்சபை தேவனுடைய வீடேயல்லாமல், மனுஷருடையது அல்ல. அங்கே அவர் தனது ஜனங்களோடு விஷேசித்த முறையில் சந்தித்து உறவாடுகிறார். தேவன் வாசம் செய்கிற ஸ்தலமே பரிசுத்தவானுக்கு பூமியிலே ஆதி உன்னதமான ஸ்தலமாகவும் தேவகிருபையை நாடுகின்ற பாவியினுடைய ஆத்மீகத் தாகத்தை தீர்க்கின்ற நீரோடையாகவும் இருக்கிறது. அது பயபக்தியும், பரிசுத்தமும் நிறைந்த இடம். அதுவே தேவன் சஞ்சரிக்கும் வீடும், பரலோகத்தின் வாசலுமாய் இருக்கிறது. இந்த நம்பிக்கையே சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகளின் தேவ ஆராதனையில் காணப்படுகின்ற பயபக்திக்கும் கனத்திற்கும் கரரணம்.
தேவனுடைய நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதற்கான மையம் உள்ளூர் திருச்சபை:
இக்காலகட்டத்தில், திருச்சபை சாரா அமைப்புகளும், ஸ்தாபனங்களும் அதிகமாய் பெருகி வருவதையும், எந்த திருச்சபையிலும் அங்கமாயிராத சுயாதின சிந்தையுள்ள கிறிஸ்தவர்கள் அங்குமிங்கும் அலைந்து திரிவதையும் நாம் காண்கிறோம். இக்காரியம் ஆவிக்குரிய ஆபத்தாய் மட்டுமின்றி வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சிந்தைக்கு முற்றிலும் முரணானதாய் இருக்கிறது. திருச்சபை மட்டுமே பூமியிலே தேவன் வாசஞ்செய்கிற விஷேசித்த கூடாரமாயிருக்கிறது. மனமாற்றம், ஞானஸ்நானம் மற்றும் சீஷத்துவத்தின் வாயிலாக புதிய திருச்சபைகளை ஸ்தாபிக்கும்படி உள்ளூர் திருச்சபைகளினால் அனுப்பப்படுகின்ற சுவிசேஷ பிரசங்கியாளர்களினாலே திருச்சபைக்கு தேவன் நியமித்த பிரதான கட்டளை நிறைவேற்றப்படுகிறது. ஜீவனுள்ள தேவன் திருச்சபைக்கென்று நியமித்த பிரதான பணியை அநேக கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் தங்கள் கைகளில் எடுத்து செயலாற்ற முயற்சிக்கின்றன. மிஷெனரி பணியை தேவன் யாரிடத்தில் ஒப்புவித்தார்? விசுவாசிகளை சீஷராக்கி, உற்சாகப்படுத்தி, போதிக்கும்படி தேவன் யாருக்குக் கட்டளையிட்டார்? அடுத்தடுத்தத் தலைமுறையினரை வேத சத்தியத்திற்குள்ளாக வழிநடத்தும்படி பரிசுத்தவான்களைத் தகுதிப்படுதவும் ஆவிக்குரிய வரம் பெற்ற புருஷரை பயிற்றுவிக்கவும், தேவன் யாருக்குக் கட்டளையிட்டார்? இவ்வனைத்திற்க்கும் உள்ளூர் திருச்சபையே பொறுப்பு என எக்காலத்திற்கும் போதுமான வேதம் கூறுகிறது. இதை உறுதியாக விசுவாசித்து நடைமுறைப்படுத்துவதினாலேயே சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபை பிற திருச்சபைகளிடமிருந்து வேறுபடுகிறது.
- பிரசங்கமே திருச்சபை வாழ்வின் அஸ்திபாரம்: பாவிகளை இரட்சிக்கவும், தன்னுடைய பரிசுத்தவான்களை பலப்படுத்தவும் தன்னுடைய ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பவும், ஜனங்களை இருதயத்திலே கிறிஸ்து வல்லமையாய் உயர்த்தப்படவும் தேவன் எதை பயன்படுத்துகிறார்? கர்த்தருடைய வார்த்தையை பிரசங்கிப்பதின் மூலாமகவே தேவன் இவை அனைத்தையும் நிறைவேற்றுகிறார். ஆகையால், இந்நாட்களில் திருச்சபைகளில் காணப்படுகின்ற ஆழமற்ற போதனைகள், ஆராதனையில் பிரசங்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் சாட்சிகள், சினிமாக்கள், நாடகம், நடனம் மற்றும் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்ற வேத விரோத காரியங்களை சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள் நிராகரிக்கின்றன. கர்த்தருடைய ஆராதனையில் வேதத்திற்கும், பிரசங்கத்திற்குமே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பிரசங்கமே ஆராதனையின் மையமாய் இருக்க வேண்டும்.
திருச்சபையில் ஆணின் தலைமைத்துவம் இருக்க வேண்டும்:
நவீன மற்றும் பின் நவீனத்துவ கோட்பாடுகள், சுயாதீன முற்போக்குச் சிந்தனைகளின் விளைவாக, இன்று கிறிஸ்தவம் பெண்ணியமாக்கப்பட்டு வருகிறது. தேவன் ஆணையும், பெண்ணையும் படைத்து, அவர்களுக்கு வெவ்வேறான பணியையும், பங்கையும் கொடுத்தார். படைப்பு, வீழ்ச்சி மற்றும் மீட்பில் இவர்களிருவரும் சமமாய் இருந்தாலும், வீட்டிலும், நாட்டிலும், திருச்சபையிலும் ஆணே தலைமை வகிக்கும்படி தேவன் தனது சர்வ ஏகாதிபத்ய திட்டத்திலே தீர்மானித்திருக்கிறார். குடும்பத்தை கணவனும், தகப்பனுமே ஆழ வேண்டும். திருச்சபை ஆராதனைகளில் ஆராதனையை வழிநடத்தவும், ஜெபிக்கவும், போதிக்கவும், பிரசங்கிக்கவும், மூப்பராகவும், உதவிக்காரராகவும், செயலாற்றவும் தேவன் ஆண்களையே நியமித்திருக்கிறார். அதற்கு திருச்சபையும், விசுவாசிகளும் தாழ்மையுள்ள இருதயத்தோடு தலைவணங்கிக் கீழ்ப்படிய வேண்டும். இப்படிப்பட்ட ஆராதனைகளையும், தலைமைத்துவத்தையும் குடும்ப அமைப்பையும் சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள் பின்பற்றுவது தேவனுக்கு பிரியமாயிருக்கிறது.
திருச்சபை அங்கத்துவத்தின் நன்மை:
சபை அங்கத்தவர்கள் கூடிவருதலையும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும், ஏவப்படவும், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லவும், வேண்டுமென எபிரயேர் 10ஂ24-25 -ல் சொல்லப்பட்டுள்ளதை சீர்திருத்த திருச்சபை தவறாமல் பின்பற்றுகிறது. சபை அங்கத்தவர்களின் கடமைகளையும், பொறுப்புகளையும் தெளிவுற விளக்கி, அவற்றை தேவ மகிமைக்கென்று நிறைவேற்ற அயராது பாடுபடுகிறது. ஞாயிறு காலை – மாலை ஆராதனைகளில் பங்குபெறுகின்ற சபை அங்கத்தவர்களுடைய எண்ணிக்கையில் அதிகமான வித்தியாசம் காணப்படாதிருந்தால் அத்திருச்சபையின் ஆவிக்குரிய வளர்ச்சியும் முதிர்ச்சியும் அதிகரிக்கும்.
8. இரட்சிப்பில் திருத்துவ தேவனின் செயல்:
தேவன் சர்வ ஏகாதிபத்யமுள்ள ஆண்டவர், அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னதாகவே, இரட்சிப்பிற்கென்று குறிப்பிட்ட பாவிகளை முன்குறித்து, தெரிந்து கொண்டார் என்பது அவருடைய புகழ்ச்சிக்கும் மகிமைக்கும் ஏற்றதாயிருக்கிறது. காலம் நிறைவேறினபோது, கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து, பிதாவாகிய தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுடைய பாவங்களுக்காக மரித்ததினாலே, அவர் இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றினார். பரிசுத்த ஆவியாகிய தேவனும், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒவ்வொரு ஜனங்களினுடைய இருதயத்திலும் கிறிஸ்து நிறைவேற்றின மீட்பின் பணியை அவர்களுடைய மனமாற்றத்திருக்கு நேராக வழிநடத்தும்படி வல்லமையாக செயலாற்றுகிறார்.இப்படியாக, ஒரு மனிதனுடைய இரட்சிப்பில் திருத்துவ தேவனின் செயல் இருப்பதை சீர்திருத்த விசுவாசம் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. மேலும், மனிதனுடைய முழுமையான வீழ்ச்சி, தேவனுடைய நிபந்தனையற்ற தெரிவு, குறிப்பிட்டோறுக்கான கிறிஸ்துவின் பாவபரிகாரபலி, நிராகரிக்கப்பட முடியாத வல்லமையான அழைப்பு மற்றும் பரிசுத்தவான்களுடைய விடாமுயற்சியும், பாதுகாப்பும் ஆகிய வேத சத்தியங்கள் அடங்கிய கிருபையின் போதனைகளை சீர்திருத்த விசுவாசம் பறைசாற்றுகின்றது. இவை மட்டுமின்றி, தேவனுடைய நியாயப்பிரமாணம் மற்றும் திருச்சபையைக் குறித்து உயர்வான சிந்தையை சீர்திருத்த விசுவாசம் கொண்டுள்ளது.
இத்தகைய மேன்மையும், கனமும் மகத்துவமும் நிறைந்த வேத சத்தியங்களின் தாக்கமும், பயிற்சியும் உங்களுடைய தனிப்பட்ட, குடும்ப மற்றும் திருச்சபை வாழ்வில் காணப்படுகிறதா? என உங்களை நீங்களே சோதித்து பாருங்கள்! இதனடிப்டையில் உங்கள் வாழ்கையை சீரமைக்க விரும்புவீர்களேயானால், உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்து செய்து முடித்த இரட்சிப்பின் பணியை விசுவாசித்து, வேதம் போதிக்கின்ற சத்தியங்களுக்கு முழு மனதோடு கீழ்ப்படியுங்கள். தேவன் உங்கள் இருதயத்தை மாற்றி, புதிதான ஆவியைத் தந்து, அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிகின்ற விருப்பத்தையும் ஆசீர்வாதங்களையும் அருளி உங்களை ஆசீர்வதிப்பாராக! சீர்திருத்த விசுவாசத்தையும் கிருபையின் போதனைகளையும் என்றென்றும் காத்து, அதை உறுதியாய் பற்றிக் கொள்ளுங்கள்! தேவன் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக! ஆமென்!