மறைந்திருக்கும் முழங்கால்கள்

திருச்சபை வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும்  தேவன் தமது தாசர்களை
பயன்படுத்தி பல அசாதாரண செயல்களை நிகழ்த்தியுள்ளார். அவர்களில் “நவீனகால
ஊழியத்தின் தந்தை” என்று எல்லோராலும் அறியப்பட்டவர் மதிப்பிற்குரிய
திரு.வில்லியம்கேரி அவர்கள். நம்மில் அநேகருக்கு வில்லியம்கேரியைப்பற்றி
தெரிந்திருக்கும். ஆனால் அவரின் சாதனைகளுக்கும், அர்பணிப்புள்ள
உழைப்பிற்கும் பின்னால் திரைமறைவாக, முதுகெலும்பாக இருந்த ஒரு
நபரைப்பற்றி உங்களுக்கு தெரியுமா?

அவரது ஊழியங்களில் தொடர்ச்சியான  தோல்வியினாலும், சரீர பலவீனங்களினாலும்
மிகவும் சோர்வுற்ற அவரை ஆற்றுவதற்கும், உற்சாகபடுத்துவதற்கும் தேவனால்
பயன்படுத்தப்பட்ட பெண் ஒருவர் இருந்தார் என்று நீங்கள் அறிவீர்களா?ஆம்!.
அந்த பெண் தான் வில்லியம்கேரியின்  உடன்பிறந்த சகோதரியான  பாலிகேரி
அவர்கள். கேரி அவர்களின் ஆரம்ப ஊழியத்திலிருந்து இந்திய மக்கள்மீது அதிக
ஆர்வம்கொண்டு அவர்களின்  மீட்பிற்காக தொடர்ச்சியாக தேவனைநோக்கி  ஜெபித்த
சகோதரியே பாலிகேரி அவர்கள். கேரி அவர்கள் தனது இந்திய ஊழியத்தில்
சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும், சூழ்நிலைகளையும் தொடர்ச்சியாக
இங்கிலாந்திலுள்ள தன் சகோதரிக்கு கடிதங்கள் மூலம் எல்லாவற்றையும்
தெரியப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கடிதங்களைப்பெற்ற  அடுத்த கனமே அதற்காக தேவ சமூகத்தில் கண்ணீரோடு ஜெபிக்க
ஆரம்பித்து விடுவார் பாலிகேரி. வெகுவிரைவாக தன் சகோதரனுக்கு ஆறுதலையும்,
உற்சாகத்தையும் தரும் பதில் கடிதங்களை அனுப்ப ஒருபோதும் அவர்
தவறியதில்லை. தன் சகோதரியின் கடிதங்களை அநேக நாட்கள் காத்திருந்து பெற்று
அகமகிழ்ந்திருக்கிறார் கேரி. தனது ஊழியத்தின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும்,
தேவனின் ஆசீர்வாதத்திற்கும் பின்னால் தன் சகோதரியின் ஆழமான ஜெபங்கள் மிக
முக்கிய காரணம் என்பதை பலமுறை கேரி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
விக்கிரகங்களால்  நிறைந்த, அநேக மூடபழக்க வழக்கங்களை கொண்டிருக்கிற ஒரு
தேசம் மனந்திரும்புதலுக்கும், விசுவாசத்திற்குள்ளும்  வருவது மனித
முயற்சியினாலும் அர்பணிப்பினாலும் ஆகாது என்பதை பாலிகேரி நன்கு
அறிந்திருந்தார். பரத்திலிருந்து தேவ ஞானமும், வல்லமையும்  கேரிக்கு
அருளப்படாவிட்டால்  அவரது ஊழியத்தில் ஒரு  சிறிய செயல்பாடும் நிகழாது
என்பதை அறிந்த பாலிகேரி  அதற்காக ஊக்கத்தோடு  ஜெபிக்க ஆரம்பித்தார்.
கிட்டத்தட்ட 57 வருடங்களாக அனுதினமும் இந்திய மக்களுக்காக ஜெபத்தில்
தன்னை முழுவதுமாக அர்பணித்திருக்கிறார் பாலிகேரி.  இதில்
ஆச்சர்யபடுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லையே என்று நினைக்கலாம்.

இங்கே நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்  பாலிகேரி அவர்கள்
நம்மைப்போல் சாதரணமாக, சுகபோகமாக வாழ்ந்த நபர் கிடையாது. சிறுவயதிலே
வாதநோயினால் தனது இரண்டு கால்களையும் இழந்து முடவராக வாழ்ந்தவர். மிகவும்
ஏழ்மையான வறுமையில் தான் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திருக்கிறார். பல்வேறு
வியாதினால் பாதிக்கப்பட்டு மருத்துவ உதவி கூட கிடைக்கபெறாமல் அநேக
ஆண்டுகள் படுத்த படுக்கையாக கிடந்தவர். அவரால் இரண்டு வேலைகளை மட்டுமே
செய்ய முடியும், ஒன்று எழுதுவது மற்றொன்று ஜெபிப்பது. தனது
வாழ்க்கையிலேயே அநேக தாங்க முடியாத வேதனைகளும், துக்கங்களும்
சூழ்ந்திருக்கையில் முகமறியாத எந்த உறவுமில்லாத ஜனங்களுக்காக தேவ
சமூகத்தில் ஒரு வல்லமையான ஜெப போராட்டத்தை நடத்தியவர் தான் பாலிகேரி.
அவரின் கடைசி மூச்சு வரை இந்திய மக்களுக்காகவும், அவர்களின்
மீட்பிற்காகவும் ஜெபித்து கொண்டிருந்தார்  என்று அவர் அருகே
நின்றுகொண்டிருந்த சகோதரி ஒருவர் கூறியிருக்கிறார். திருச்சபை வரலாறு
முழுவதுமாக தலைசிறந்த ஒவ்வொரு போதகர்களுக்கும், தலைவர்களுக்கும் பின்னால்
இவரைபோன்ற அநேக ஜெப வீராங்கனைகளும், வீரர்களும் உண்டு.

இப்படிப்பட்ட  முடக்கப்பட்ட  முழங்கால்கள்  இல்லாத எந்த தேசமும்,
திருச்சபையும், ஊழியங்களும் ஒருபொழுதும் எழுப்புதலையோ, உயிர்மீட்சியையோ,
காண முடியாது. ஒவ்வொரு வெற்றியுள்ள ஊழியங்களுக்கும், எழுப்புதலுக்கும்
தேவனால் பயன்படுத்தப்படும் வல்லமையான ஆயுதம் இந்த மறைந்திருக்கும்
முழங்கால்களே!நீங்கள் அழிந்து கொண்டிருக்கும் உங்களது தேச மக்களுக்காகவும்,

கிறிஸ்துவின் ஊழியத்தை செய்யும் உங்களது போதகர்களுக்காகவும் இவ்வாறு
ஜெபிக்கிறீர்களா?

57 வருட ஜெபத்தின் பலன்கள்

·         40 இந்திய மொழிகளில் வேதாகம மொழிபெயர்ப்புகள்.

·         நான்கு மொழிகளில் சொல்லகராதிகள்.

·         செராம்பூர் இறையியல் கல்லூரி & பல்கலைக்கழகம்

·         ‘சதி’ என்கிற உடன்கட்டை ஏறுதல் அழிக்கப்படுதல்.

·         நவீன அச்சு இயந்திரம், நீராவி இயந்திரம், பல்துறை இலக்கிய புத்தகங்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சங்கங்கள் நிறுவுதல்.

சீர்திருத்தத்தை ஆரம்பிக்க வேண்டுமன்று வாஞ்சிப்பீர்களானால் முதலாவது
குனிந்து உங்கள் முழங்கால்கைளப் பாருங்கள். அவற்றில் இரத்தம் வழிகிறதா
என்பைத உறுதி செய்துகொள்ளுங்கள்.
                                                               – பால் வாஷர்.