ஆசிரியர் : போதகர் G. மார்க்

இயேசுகிறிஸ்துவின் மெய்யான சீஷனாக வாழ்வது என்றால் என்ன? ஒரு சீஷனுடைய குணாதிசயம் எப்படி இருக்க வேண்டும்? நான் உண்மையாகவே கிறிஸ்துவின் சீஷனாக வாழ்கிறேனா? என்கிற கேள்விகள் ஒரு  மெய்யான கிறிஸ்தவன் தன்னைக் குறித்து கேட்கவேண்டிய அதி முக்கியமான கேள்விகள். இந்த கேள்விகளுக்கான பதில் வேதத்திலே இயேசுகிறிஸ்து தன்னுடைய சீஷர்களின் வாழ்க்கை மூலமாக தெளிவுபடுத்துகிறார். இந்த உலகில் கிறிஸ்துவைக் குறித்தும், கிறிஸ்தவ சீஷத்துவ வாழ்க்கையை குறித்தும், திருச்சபை செயல்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும்  இயேசு கிறிஸ்து  அவருடைய  12 அப்போஸ்தலர்களை முன்மாதிரியாக அவருடைய  திருச்சபைக்கு கொடுத்திருக்கிறார். அவர்களில் ஒருவரான அப்போஸ்தலரான   அந்திரேயாவின் வாழ்க்கை  மூலமாக சீஷத்துவ குணாதிசயத்தை பற்றி சிறு சுருக்கமாக பார்க்கலாம்.அந்திரேயாAndrew

இவர் வாழ்ந்த இடம் கப்பர்நகூம். இவர் ஒரு மீனவர், யோவான்ஸ்நானகனை பின்பற்றியவர். பேதுருவோடு இணைந்து மீன்பிடி தொழில் செய்து வந்தவர். இவரைப் பற்றி வேதம் அதிகம் பேசவில்லை என்றாலும், இவரைப் பற்றி கூறுகின்ற ஒவ்வொன்றும் மிக முக்கியமானவை. இவருடைய வாழ்க்கை சூழல் பற்றி அறிவது அவசியம். அதிக வரிச்சுமை கொண்ட ரோம அரசாங்கம்  கீழ் வாழ்ந்து வந்தார். மாய்மாலங்களும், சடங்குகளும் நிறைந்த மதகுருமார்கள் மத்தியில் வாழ்ந்து வந்தார். இவர் கலிலேயனானதினால் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவராக இருந்தார். நீதியற்ற, சர்வாதிகார, ஊழல் நிறைந்த ஆட்சியினாலும், பொய்களாலும், வேஷங்களாலும் நிறைந்த ஆராதனை முறைமைகளாலும் சந்தோஷமற்ற, நிம்மதியற்ற நிலையில் இருந்தார். தன்னை சூழ்ந்திருக்கின்ற அனைத்து பிரச்சினைகலிருந்தும் எப்பொழுது விடுதலை  என்று ஏங்கி காத்துகொண்டிருந்தவராக இருந்தார். தேவனுடைய ஆலயத்திலும், ஜெப ஆலயத்திலும் சென்று ஆராதிக்க முடியாத, மெய்யான தேவனுடைய வார்த்தையை கேட்பதற்கும் அரிதான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர் யோர்தான் நதியருகில் பிரசங்கித்து கொண்டிருக்கிற யோவான்ஸ்நானகனை குறித்து கேள்விபடுகிறார். கப்பர்நகூமிலிருந்து நீண்ட தூரம் பயணித்து யோவான்ஸ்நானகனின் பிரசங்கத்தை கேட்க வருகிறார். இங்கே அவருக்கு சொல்லப்படுகிற செய்தி ‘மனந்திரும்புங்கள்! பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது’.  அந்திரேயா தன்னைசுற்றி வெளியில் உள்ள பிரச்சனைகளுக்கு விடுதலை தேடி வருகிறார். இங்கே அவருடைய உள்ளான அடிப்படை பிரச்சனையான பாவத்திலிருந்து மனந்திரும்புதலைக்குறித்து எச்சரிக்க படுகிறார். அந்த பாவ விடுதலை வர இருகின்ற மேசியாவாகிய இயேசுகிறிஸ்து  மூலமாக மட்டுமே என்று அறிந்து விசுவாசித்து  அவர் வருகையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் இயேசுகிறிஸ்து யோவான்ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்று கடந்து போகையில் அவன் ‘’இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’’ (யோவான் 1:38-41) என்றுகூறும்போது அந்திரேயா  யோவான்ஸ்நானகனை விட்டு கிறிஸ்துவின் பின் சென்று அவரை பற்றி அறிய விரும்புகிறார். கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று அவரோடு தங்கி ஐக்கியப்படுகிறார். அந்த ஐக்கியத்தின் விளைவாக இயேசுகிறிஸ்துவின் தெய்வீகம் மற்றும் அவரது மேசியா  தன்மைகள், செயல்பாடுகள் பற்றியும் அறிந்து அவரே தேவனால் பாவ பரிகார பலியாக அனுப்பப்பட்ட தேவ குமாரன் என்று விசுவாசிக்கிறார். அவரின் பாடு, மரணம் மாத்திரமே பாவத்தின் அடிமைதனத்திலிருந்து  தனக்கு   விடுதலையளிக்கும் என்று பெருமகிழ்ச்சி அடைகிறார்.கிறிஸ்துவுடனான தனிப்பட்ட ஐக்கியம் , அவர் மூலமாக தான் பெற்ற மெய்யான சந்தோஷத்தினால் அவரைப் பற்றி சொல்ல அந்திரேயாவின்  இருதயம் துடித்தது. கிறிஸ்து தனக்கு அளித்த அந்த தேவ அன்பையும் தயவையும் பிறர்மீது காண்பிக்க  அவரின் இருதயம் பேராவல் கொண்டது. உடனே அந்திரேயா தன் வீட்டிற்கு சென்று  முதலாவது அந்த அன்பையும் சந்தோஷத்தையும்  தன் வீட்டிலுள்ள அவர் சகோதரனாகிய பேதுருவிடம் வந்து வெளிப்படுத்துகிறார். அந்திரேயா சீமோன் பேதுருவை பார்த்து  சொல்கிறார் ‘’மேசியாவை கண்டோம்’’ என்று. அதற்கான அர்த்தம் இவ்வளவு காலம் நாம்  எதிர்பார்த்து காத்திருந்த அந்த மெய்யான சந்தோஷத்தையும், விடுதலையையும் தர இருக்கிற தேவ குமாரனாகிய கிறிஸ்து வந்து விட்டார். அவரே நமக்கு பாவ விடுதலையான ஆத்ம இரட்சிப்பை தருகிறவர். அவர் நாசரேத்தூரானாகிய இயேசுகிறிஸ்துவே!. அவருடைய அன்பையும் கிருபையையும் நான் பெற்று இருக்கிறேன் என்பதாகும். அந்திரேயா வெறும் செய்தியை மாத்திரம் சொல்லிவிட்டு போகாமல் பேதுருவை இயேசுகிறிஸ்துவிடம் அழைத்து வருகிறார் (v-42).  பேதுருவை மாத்திரமல்ல இன்னும் ஒருசிலரை அவர் கிறிஸ்துவிடம் அழைத்து வருகிறார். யோவான் சுவிசேஷத்தில் ஒவ்வொரு முறையும் யாராயாவது ஒருவரை கிறிஸ்துவிடம் இவர் அழைத்து வருவதை நாம் பார்க்கலாம் (1:38-41–பேதுரு, 6:8-9-சிறுபையன், 12:20-22-கிரேக்கர்கள்). சக மனிதனுக்கு கிறிஸ்துவின் அன்பை பகிர்ந்து  அவர்களை கிறிஸ்துவிடம் அழைத்து வருவதில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிற சீஷன் தான் அந்திரேயா. இதுதான் ஒரு மெய்யான  சீஷனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை குணாதிசயம். அவன் தான் கிறிஸ்துவின் மூலமாக பெற்ற பாவ மன்னிப்பையும், அவருடைய கிருபையையும் தன் சக மனிதனிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. தான் பெற்ற அந்த சுவிசேஷ நற்செய்தியை தான்  சந்திக்கிற அனேகரிடம் பகிர்ந்துகொள்ள பிரயாசப்படுவான். சுவிசேஷ  இருதயம்

இதிலிருந்து நாம் கற்பது என்னவென்றால் மெய்யான ஆவிக்குரிய சீஷனுடைய  வாழ்வின் ஒரு முக்கிய அடையாளம் சுவிசேஷ இருதயத்தை கொண்டிருப்பதாகும். உங்களுக்கு  அப்படிபட்ட இருதயம் இருக்கிறதா?  உண்மையாகவே நீங்கள் இயேசுகிறிஸ்து மூலமாக ஆத்ம இரட்சிப்பை பெற்றிருப்பீர்களானால், அவர் ஒருவர் மாத்திரமே உங்கள் வாழ்வின் சந்தோஷமாக இருப்பாரானால் அந்த இரட்சிப்பின் சந்தோஷத்தை உங்களால் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. அப்படி பகிர்ந்து கொள்ளக்கூடிய விருப்பமும் வாஞ்சையும் உங்கள் இருதயத்தில் இல்லாமலிருந்தால் நீங்கள் மெய்யாகவே இயேசுகிறிஸ்து மூலமாக  பாவ விடுதலையையும், இரட்சிப்பின் சந்தோஷத்தையும் பெறவில்ல என்பதே  உண்மை. வஞ்சிக்கபடாதிருங்கள் சகோதரர்களே! கிறிஸ்து உங்களுக்கு தந்த இரட்சிப்பு என்பது உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவோடு தொடர்புடையது மாத்திரமல்ல, அது உங்களுக்கும் உங்களை சார்ந்திருக்கிற சக மனிதர்களோடும்  தொடர்புடையது. உங்கள் குடும்பம், சமுதாயம், பணிபுரியும் இடம் ஆகியவற்றிலுள்ள சக மனிதனிடம் கிறிஸ்துவின் அன்பை உங்களால் காண்பிக்க முடியவில்லையென்றால் உங்களில் கிறிஸ்து இல்லை என்பதே உண்மை. இன்றே உங்கள் பாவ நிலையை உணர்ந்து மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவை விசுவாசியுங்கள். அவரே உங்களுக்கு பாவ மன்னிப்பு என்கின்ற ஆத்ம மீட்பையும், அந்த மீட்பின் கனிகளில் ஒன்றான சுவிசேஷ இருதயத்தையும் தர வல்லவர். அப்பொழுதுதான் அப்பொழுதுதான் நீங்கள் மெய்யாகவே கிறிஸ்துவிற்கு  சீஷனாக இருந்து வாழ முடியும்.

அந்திரேயாவின் வாழ்விலிருந்து நாம் கற்க வேண்டிய இன்னொரு பாடம் கிறிஸ்துவின் அன்பை  முதலாவது வீட்டில் உள்ளவர்களுக்கு காண்பிக்க வேண்டும். குடும்பத்தில் கிறிஸ்துவின் அன்பை பகிர்ந்து சீஷனாக இல்லாதவன் திருச்சபையிலும், சமுதாயத்திலும் ஒருபோதும் இருக்க முடியாது. மெய்யான சீஷன் என்பவன் தான் காண்கிற ஒவ்வொரு தனி நபர் மீதும் கிறிஸ்துவின் ஆத்ம இரட்சிப்பையும், அன்பையும் பகிர்ந்துகொள்ள பிரயாசப்படுபவன். இப்படிப்பட்ட நபர்களால் மாத்திரமே திருச்சபை வளர்வதை நாம் பார்க்க முடியும். ஒவ்வொரு திருச்சபையின்  வளர்ச்சிக்கும்  இப்படிப்பட்ட நபர்களையே தேவன் மிக சிறந்த கருவியாக வைத்து செயல்படுத்துகிறார்.அர்பணிப்புள்ள  இருதயம்

அந்திரேயாவைப்பற்றி இன்னொரு நிகழ்வை நாம்  யோவான்- 6:5-9 வசனங்களில் காணலாம். இந்த பகுதி ஆண்டாவராகிய இயேசுகிறிஸ்து 5-அப்பங்கள் 2-மீன்களை கொண்டு 5000 புருஷர்களுக்கு போஷித்ததை பற்றி பேசுகிறது. இங்கே

கிறிஸ்துவின் சீஷர்கள் ஜனங்கள் பசியாயிருப்பதை அறிந்து அவர்களை அனுப்பிவிடும்படி ஆண்டவரிடம் கூறுகிறார்கள். ஆண்டவர் அவர்களிடம் நீங்களே இவர்களுக்கு போஜனம் கொடுங்கள் என்கிறார். அதற்கு அவர்கள் நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள். அப்பொழுது அவர் உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார். அப்பொழுது அந்திரேயா ‘’இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் 5 வாற்கோதுமை அப்பங்களும்  2 மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான்’’ -யோவான்- 6:9. இந்த வார்த்தைகளை யோவான் சுவிசேஷத்தில் மாத்திரமே நாம் காண முடியும்.

இந்த வார்த்தைகளை நாம் படிக்கும்போது இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒரு நோக்கத்தொடு இந்த வார்த்தைகளை தனது வேதத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இயேசுகிறிஸ்து தமது சீஷர்களிடத்தில் நீங்களே இந்த ஜனங்களுக்கு போஜனங்கொடுங்கள் என்று கூறும்போது அவர்கள் எல்லோரும் தங்கள் சுய ஞானத்தாலும் பெலத்தாலும் யோசித்து தங்களால் அது முடியாத காரியம் என்கின்றனர். அவர் ‘’உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார்’’(மாற்கு 6:38). இது கிறிஸ்து அவர்களுக்கு  கொடுத்த கட்டளை. இந்த கட்டளைக்கு அவர்களில்  எத்தனை சீஷர்கள் கீழ்படிந்தார்கள் என்று வேதம் வெளிப்படையாக சொல்லவில்லை, ஆனால் யார் இதற்கு உடனே கீழ்படிந்து அதற்கான பலனை கிறிஸ்துவிடம் கொண்டு வந்தது என்று பார்க்கும்போது அப்போஸ்தலனாகிய யோவான் அது அந்திரேயா என்று பதிவு செய்திருக்கிறார். எல்லோரும் தங்கள் இயலாமையையும், பலவீனங்களையும் பார்த்துக்கொண்டு முடியாது என்று சிந்தித்து கொண்டிருக்கின்ற வேளையில் இங்கே அந்திரேயா கிறிஸ்துவின் வார்தையில் விசுவாசம் கொண்டவராக, அதை செயல்படுத்துகிறவராக அவ்வளவு திரளான ஜனகூட்டத்தில் அப்பங்கள் எங்கே இருக்கிறது, யாரிடம் இருக்கிறது என்று தேடி முயற்சிக்கிற நபராக நாம் அவரை பார்க்கிறோம். சூழ்நிலை சாதகமாக இல்லாத நிலையில் தனக்கு கிறிஸ்து கொடுத்த அந்த சிறிய வார்த்தையின் மீது அக்கறையுள்ளவராக அர்பணிப்புள்ள இருதயத்தோடு அந்த சிறிய வெளிச்சத்தில் பயணிக்கிறவராக அவர் இருக்கிறார். அநேக மக்கள் கூட்டதிற்குள்ளாக சென்று தேடி அங்கே ஒரு சிறுவனிடத்தில் 5 அப்பங்கள் இருப்பதைக்கண்டு அவனை இயேசுகிறிஸ்துவிடம் அந்திரேயா கொண்டு வருகிறார். இந்த 5 அப்பங்களும் 2 மீன்களும் அந்த திரளான ஜனங்களின் தேவையை சந்திக்க இயலாது என்று அவருக்கு தெரியும்.  ஏனென்றால் அவரே சொல்கிறார் ‘’ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான்’’ அந்த 5 அப்பங்கள், 2 மீன்களிலே அந்திரேயாவின் நம்பிக்கையும் விசுவாசமும் இல்லை மாறாக அதை பெற்றுக்கொள்கிற

கிறிஸ்துவிடம் இருந்தது. அந்த 5 அப்பங்களும் 2 மீன்களும் இல்லாமலும் கிறிஸ்துவினால் அந்த ஜனங்களை போஷிக்க முடியும் என்று அந்திரேயா அறிந்திருந்தார். ஆனாலும் அவருடைய வார்த்தையின் மீது விசுவாசம் வைத்து அவருக்காக செய்கிற எந்த சிறிய அர்பணிப்பும், முயற்சியும் வீணல்ல என்று அவர் நன்கறிந்திருந்தார். தேவனுடைய பார்வையில் எந்த ஒரு சின்ன பொருளும், காரியமும் முக்கியமற்றதாக இராது என்பதை அந்திரேயா  அறிந்திருந்தார்.  இங்கே இயேசுகிறிஸ்து அந்த அந்திரேயாவின் விசுவாத்தையும், அர்பணிப்பையும் அங்கிகரித்தவராக அந்த 5 அப்பங்களையும் 2 மீன்களையும் வாங்கி இந்த பெரிய அற்புதத்தை செய்கிறார். அந்த 5 அப்பங்களும் 2 மீன்களும் இல்லாமலும் கிறிஸ்துவினால் அந்த ஜனங்களை போஷிக்க முடியும் ஆனால் அந்த சிறிய அப்பத்தையும், மீனையும் வைத்தே ஆண்டவர் பெரிய அற்புதத்தை நடத்தினார்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது மெய்யான சீஷனின் மற்றொரு அடையாளம் தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு அர்பணிப்புள்ள இருதயத்தை கொண்டிருப்பதாகும். அவன் தேவ வார்த்தைக்கு கீழ்படிந்து தேவனுக்காக எப்பொழுதும் தன்னை இழப்பதற்கு தயாராயிருப்பவன். அவன் சூழ்நிலையையும், சுற்றியிருப்பவர்களையும் பார்க்காமல் கிறிஸ்துவிற்காக ஒவ்வொரு நொடியும் தன்னை அர்பணிக்க தயாராயிருப்பவன். உங்களுடைய வாழ்வு இப்படியிருக்கிறதா? உங்களுடைய இருதயம் இப்படிப்பட்ட அர்ப்பணிப்புள்ளதாக இருக்கின்றதா? அப்படியில்லையென்றால் இன்றே கிறிஸ்துவிடம் மனந்திரும்பி சுய ஆசையையும், சுய இச்சையையும் மாத்திரம் விரும்புகிற உங்கள் பொல்லாத இருதயத்தை மாற்றி கிறிஸ்துவிற்காக உங்கள் வாழ்க்கை முழுவதையும் இழக்கதக்கதான அர்பணிப்புள்ள இருதயத்தை தேவன் உங்களுக்கு தரும்படி அவரிடம் மன்றாடுங்கள். நமக்கு எப்படிப்பட்ட  வரம் கொடுக்கபட்டிருக்கிறது என்பது முக்கியமில்லை, அதில் நாம் எவ்வளவு உண்மையும், அர்பணிப்பும் உள்ளவர்களாயிருக்கிறோம் என்பதே முக்கியம்.

.

இந்த அந்திரேயா ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்பாக பிரசங்கம் பண்ணியதாகவோ, திருச்சபை நாட்டியதாகவோ, நிருபங்கள் எழுதியதாகவோ நாம் வேதத்தில் பார்க்க முடியாது. பெந்தகொஸ்தே நாளுக்குப்பிறகு இவரைப்பற்றி வேதம் எந்த காரியத்தையும் சொல்லவில்லை. பேதுருவும் அந்திரேயாவும் சகோதரர்களாக இருந்தாலும் இருவருடைய தலைமைத்துவ செயல்பாடு வித்தியாசம் நிறைந்தது. பேதுரு தன்னுடைய அழைப்பிற்கு எவ்வளவு பொருத்தமானவரோ  அதே போல் அந்திரேயாவும் அவருடையஅழைப்பிற்கு பொருத்தமானவர். பேதுரு, யாக்கோபு, யோவானைப்போல தூண்களாக இல்லாமலிருந்தாலும் அந்த தூண்களுக்கு பின்பலமாக இருந்து

தாங்கக்கூடிய தாழ்மையின் கல்லாக அந்திரேயா இருக்கிறார்.  திருச்சபைகளில் இப்படி பின்பலமாக இருந்து செயல்படுகிற நபர்களின் அர்பணிப்பு மகத்துவமான ஒன்று. தேவன் தாமே இப்படிப்பட்ட குணாதிசயத்தை நமக்கு தந்து அவருக்கு உகந்த சீஷனாக வாழ நம்மை மாற்றுவாராக!.

அந்திரேயாவின் இறுதி வாழ்வு

ஆதித்திருச்சபை வரலாற்று ஆசிரியர்களில்  ஒருவரான எசுபியஸ் கூறுகிறார் – அந்திரேயா எருசலேம் திருச்சபையில் சிறிதுகாலம் ஊழியம் செய்துவிட்டு பின்பு ஸ்க்ய்தியா (scythiya-ரஷ்யா)   சென்று ஊழியம் செய்தார். அங்கு சில திருச்சபைகளை நிறுவியபின் அங்கிருந்து ஸ்காட்லாந்து நாட்டிற்கு சென்று ஊழியம் செய்தார். இறுதியாக கிரீஸ் தேசத்தில் விசுவாசத்தின் விளைவாக உபத்திரவபடுத்தப்பட்டு X வடிவ சிலுவையில் மரிக்கிறார்.  அவர் ஆணியால் அறையப்படாமல் கயிறுகளால் கட்டப்பட்டு அடிக்கப்பட்டு 2 நாட்கள் உயிருடன் இருந்து மரிக்கிறார். அந்த 2 நாட்களிலும் தன்னை கடந்து போகிற மக்களுக்கு சுவிசேஷம் சொல்லிக்கொண்டே மரிக்கிறார். அதினால் தான் அந்திரேயா புனித இரட்சகர் (patron saint) என்று ரஷ்யா, ஸ்காட்லாந்து மற்றும் கிரீஸ் தேசங்களில் அறியப்படுகிறார்.