வேத வியாக்கினப் பிரசங்கம் – பாகம் -2

சரியான வேத வியாக்கியானத்தின் மூலமாக மட்டுமே வேத வசனங்கள் அதிகாரத்தோடு, வல்லமையோடு பிரசங்கிக்க முடியும். சரியான விளக்கம் இல்லாத இடத்தில் அதிகாரம் நிறைந்த வார்த்தைகள் வெளிப்பாடாது. கிரமமான வேத வியாக்கியானம் இல்லாத இடத்தில் ஒருபோதும் கிறிஸ்து உயர்த்தப்பட முடியாது.  சரியான, ஆழமான வேத விளக்கம் கட்டாயம் கிறிஸ்துவை உயர்த்தி காண்பிக்கிறதாக
இருக்கும். அப்படி இல்லையென்றால் அந்த பகுதியை நாம் தவறாக புரிந்து
கொண்டிருக்கிறோம் என்றுதான்  அர்த்தமாகும். வேதத்தின் அனைத்து
பகுதிகளிலும் மறைந்திருக்கும் கிறிஸ்துவை உயர்த்தி காண்பிக்க
வேண்டுமானால் சரியான ஆழமான வேத வியாக்கியானத்தை தவிர வேறு எந்தவழியுமில்லை. 

கிறிஸ்துவை மையபடுத்தி பிரசங்கிப்பது என்பது கிறிஸ்துவை வெறுமையாக அறிவிப்பது மட்டுமல்ல, பரிசுத்த ஆவியின் வல்லமையினால் கிறிஸ்துவை மிக உன்னதமாக உயர்த்தி பிரசங்கிப்பதாகும். ஒவ்வொருமுறையும் நமது பிரசங்கத்தை நாம் பரிசோதித்து பார்க்க வேண்டும். மேலோட்டமாக பாவத்தை சொல்வதும், சத்துவமற்று தேவனின் குணாதிசயத்தையும், அவரின் நீதியான தணடனையை பற்றி பேசுவதும், வெறுமனே இப்படி இருக்க கூடாது, இதை தான் செய்ய வேண்டும் என்று  சொல்லி இறுதியில் கிறிஸ்துவை சிறிது சொல்வதல்ல பிரசங்கம், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எல்லாவற்றை காட்டிலும் பெரியவர், மாபெரும் உன்னதமான தேவன் என்று உயர்த்தி காண்பிக்க வேண்டும். 

Christ-Centered Preaching – என்றால் என்ன? கிறிஸ்துவின் பிறப்பு, ஊழியம், பாடுகள், மரணம், உயிர்தெழுதல் போன்ற எல்லாவற்றையும் தெரிவிப்பது மட்டும் அல்ல. தேவன் ஒவ்வொரு வேத பகுதியிலும் கிறிஸ்துவை பற்றிய சத்தியங்களை எப்படி மகிமையாய் வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை அறிந்து அவற்றை முக்கியபடுத்தி பிரசங்கிப்பது ஆகும். கிறிஸ்துவை விட்டு மற்ற சத்தியங்களை பிரதானப்படுத்தி பேசுவதோ அல்லது மக்களை நல்லவர்களாக, ஒழுக்கம் சார்ந்தவர்களாக மாற்றுவதல்ல நமது நோக்கம் அவர்களை கிறிஸ்துவைப்போல மாற்றுவதே ஒரு வேதபூர்வமான பிரசங்கத்தின் நோக்கம்.

வேதத்தின் (வியாக்கியானத்தின்) மூலமாக தேவன் கிறிஸ்துவுக்குள்ளாக
பாவிகளான நமக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று ஆராய்ந்து,
கிறிஸ்துவை உயர்த்தி பிரசங்கிப்பதுதான் வியாக்கியானத்தின் அடிப்படை சாராம்சம்.

கிறிஸ்து மையமான பிரசங்கங்கள் மேன்மையாக காணப்படாமல் இருப்பதற்கான தடைகற்கள். 

1 தெசலோனிக்கேயர்  1:5
எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம்   எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே. 

பவுல் மெய்யான, வெற்றியுள்ள ஊழியதிற்கான 2 அடிப்படை காரியங்களை கூறுகிறார்.

எங்கள் சுவிசேஷம்- என்று கூறும்போது நங்கள் பெற்று அனுபவிக்கிற
சுவிசேஷம். தான் அனுபவிக்காத காரியங்களை பேசுகிறவன் மாய்மாலன். பரிசேயர்கள் தங்களது பிரசங்கத்தில் செய்ததும் இதுதான். உன் ஆத்துமாவில் ஆழமாக பதியப்பட்டு எழுதபடாத எந்தவொரு சத்தியமும் உன் வாயிலிருந்துவரக்கூடாது –ஸ்பர்ஜன்.  ஆசாரிப்புக் கூடாரத்தில் ப.ஏ. ஆசாரியன் மக்களுக்கு தேவனின் மன்னிப்பை வழங்குவதற்கு முன்பு அவன் பலி செலுத்தப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை தனது கைவிரல், கால்விரல், காதுகளில் தெளித்துவிட்டு பிறகு தான் மக்களிடம் வந்து உடன்படிக்கையின் இரத்தத்தை தெளிப்பான். அதேபோல் ஒரு பிரசங்கி வேதவார்தையினால்  தன்னை சுத்திகரித்துக் கொள்ளாமல் மற்றவர்களை ஒருபோதும் சுத்தபடுத்த முடியாது.

உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று-  என்று பவுல்
கூறும்போது நாங்கள் எப்படிப்பட்ட மனிதர்கள் என்று நீங்கள் நன்றாய்
அறிந்திருக்கிறீர்கள் என்கிறார். 

2. போலியான ஜெப வாழ்வு – ஒரு பிரசங்கியின் வாழ்வில் வேத வாசிப்புக்கு இணையான ஜெப வாழ்க்கை இருக்கணும். ஜெபங்கள் தொடர்ச்சியாக சீர்படுத்தப்பட வேண்டும். ஜெப வாழ்வில் வளர்ச்சி இருக்க வேண்டும். பிரசங்க நாட்களில் அல்லது பிரச்சனை உள்ள நாட்களில் மட்டும் கரிசனையா தேவனிடம் ஜெபிக்ககூடாது. எல்லா நிலைகளிளும் அவன் வாழ்வில் ஜெபம் பிரதானமாக இருக்க வேண்டும். ஒரு போதகனின் வாழ்வில் தன்னை தாழ்மைபடுத்தக்கூடிய மற்றும் அவனுக்குள் தாழ்மையை உருவாக்ககூடிய இடம் ஜெபத்தை தவிர வேறெங்குமில்லை.

3. பாவத்தோடு தொடர்ந்து வாழ்வது– ஒரு பிரசங்கி பாவத்தை நேசித்து
கொண்டும், தொடர்ந்து பாவத்தில் வாழ்ந்து கொண்டும் ஒருபோதும் கிறிஸ்துவை உயர்த்தி வாழ முடியாது. ஒரு போதகன்  கிறிஸ்துவோடு சரியான உறவில் இருக்கும்போதுதான் அது அவனது மற்ற எல்லா காரியங்களிலும் சரியாக உறவை வலுப்படுத்தும். தனிப்பட்ட, அந்தரங்க வாழ்வில் பாவத்தோடு வாழ்ந்துகொண்டு கிறிஸ்துவை ஒருவனாலும் உயர்த்த முடியாது. கிறிஸ்துவோடு பெலமுள்ள உறவு இருந்தால் மட்டுமே பிரசங்கமும் ஆவிக்குரிய பெலமுள்ளதாய் இருக்கும். 

உன்னை குறித்தும் உன் போதகத்தை குறித்தும் எச்சரிக்கையாய் இரு. என்று பவுல் எச்சரிக்கிறார். 
தேவன் தனது ராஜ்யத்தின் பணிக்கு தான் பரிசுத்தபடுத்துகிற பாத்திரங்களையே  பயன்படுத்துகிறார்.

கணக்கு வாத்தியார் தான் சரியாக வரி கட்டாத நிலையிலும் அதைபற்றி தெளிவாக போதிக்க முடியும், ஒரு அரசியல்வாதி அதிகமாக ஊழல் செய்துகொண்டும் நேர்மையை குறித்து மிக சிறப்பாக பேச முடியும். ஆனால் ஒரு பிரசங்கி தன் வாழ்வில் தேவன் வெறுக்கிற காரியங்களை செய்துகொண்டு, அந்தரங்க வாழ்க்கையில் பாவத்தை நேசித்துக்கொண்டு ஒருபோதும் ஜீவன் தருகிற பிரசங்கத்தை செய்ய முடியாது.  ஒரு பிரசங்கியினுடைய தனிப்பட்ட வாழ்க்கை ஒன்னு அவனுடைய பிரசங்க ஊழியத்தை கட்டும் இல்லையென்றால் அவனது ஊழியத்தை அழிக்கும். சுத்தமான தண்ணீர் உள்ள கிணற்றில் தான் மக்கள் அதிகம் சென்று நீரை பருகுவார்கள், அசுத்தமான தண்ணீரை யாரும் பருக விரும்ப மாட்டார்கள். பிரசங்கம் என்பது எதோ ஒரு மணி
நேரம் போராட்டக்களம் அல்ல, அது பல மணி நேர போராட்ட வாழ்க்கையின் வெளிப்பாடு ஆகும்.

4. வேத ஞானம் இல்லாததுவேதத்தை அதிகமாக ஆராயாத, தியானிக்காத வேதத்தோடுஅதிகமாக  நேரத்தை செலவிடாத எந்த பிரசங்கியும் கிறிஸ்துவை உயர்த்தி பிரசங்கம் பண்ண முடியாது. ஒரு பிரசங்கியினுடைய ஊழிய அனுபவம் மற்றும் அவனுடைய தனிப்பட்ட அனுபவம் கிறிஸ்துவிற்கு எந்த மகிமையையும் கொண்டு
வராது. வேதத்தின் மூலமாக மட்டுமே கிறிஸ்து தமது மகிமையை சரீரமாகிய சபையில் வெளிப்படுத்துகிறார். வேதத்தில் வளராதவன் கிறிஸ்துவில் ஒருபோதும் வளர முடியாது.

5. மனித வழிகளை சார்ந்திருப்பது ஒரு பிரசங்கி தனது பிரசங்கத்திற்கு பிரதானாமாக வேதாகம விளக்கவுரைகள், வேதாகம கட்டுரைகள், மற்ற போதகர்களின் பிரசங்கங்கள், அவர்களின் வழிமுறை ஆகியவற்றை சார்ந்து தனது பிரசங்கத்தில் பயன்படுத்துவது ஒருபோதும் கிறிஸ்துவை மகிமைபடுத்துகிறதாய் இருக்காது. நமது ஆவிக்குரிய சிறப்புரிமைகள் நம்மை கிறிஸ்துவை மையபடுத்தும் பிரசங்கியாக மாற்ற முடியாது. எந்த மனித வழிமுறைகளும், மனித ஞானமும் பிரசங்கத்தில் கிறிஸ்துவிற்கு மகிமையை சேர்க்காது.  எதில் நமது நம்பிக்கை
உள்ளது? வேதத்திலா அல்லது வேதம் சார்ந்த புத்தகங்களிலா? என்பதை நாம் ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். நமது நேரமும் காலமும் எதில் அதிகமாக செலவிடபடுகிறது? சில பிரசங்கிமார்கள் தாங்கள் ஆங்கில அறிவும் மற்றும் வேத மூல மொழிகளில் சிறந்த புலமையும் பெற்றிருந்தால் தங்களது பிரசங்கம் வல்லமையாய் இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு. அவைகள் வேதத்தை சரியாக விளங்கிக்கொள்ள அவசியாமாக காணப்பட்டாலும் நமது பிரசங்கத்தை ஒருபோதும்
அவைகள் மேம்படுத்தாது. தேவனின் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் பெலமும், அதிகாரம் நிறைந்த வேத வார்த்தைகளும் ஒருங்கிணைந்து கிறிஸ்துவின் சிலுவைக்கு அருகே பாவியான மனிதனை உருக்குலைத்து மண்டியிட செய்யாதவரை
கிறிஸ்துவின் உன்னதமான மீட்பு ஒருபோதும் எந்த பிரசங்கியாலும் மகிமையாக பிரசங்கிக்க முடியாது.