நமக்காக பாலன் பிறந்தார்; குமாரன் கொடுக்கப்பட்டார்


போதகர் ஜான் நெல்சன் இஸ்ரேல்

 

கிறிஸ்மஸ் என்றவுடன் இன்று பெரும்பாலானோரின் மனதில் கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக், நட்சத்திரம்,  பாடல்கள்,  அலங்காரங்கள்  என்ற சிந்தனைதான் ஆழமாகப்  பதிந்துவிட்டது. இதிலுள்ள ஆபத்து என்னவென்றால், கிறிஸ்மஸின் உண்மையான அர்த்தத்தை தவறவிடுவதே ஆகும்.  எனவே, மேற்சொல்லப்பட்ட தலைப்போடு கிறிஸ்து பிறப்பை  சிந்திக்கும்படி அன்புடன் அழைக்கிறோம்.

முதலில், கிறிஸ்து  தொடர்பான   சில யதார்த்தங்களை கவனிப்பது நல்லது. கி.மு மற்றும் கி.பி அதாவது, கிறிஸ்துவுக்கு முன் – கிறிஸ்துவுக்கு பின் என்று மனிதசரித்திரம் இருபெரும் கூறாக பிரிந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, கிறிஸ்து என்பவர் சரித்திரத்தில் வாழ்ந்தவர் என்பதை மனுக்குலம் ஏற்றுக்கொண்டிருப்பது கண்கூடு. அவர் சரித்திர மனிதர் என்ற அடிப்படையிலேயே, மகாபுருஷர் என்றும்,  ஒரு மதத்தை ஸ்தாபிக்க வந்தவர் என்றும், ஏழைகளின்  பிரதிநிதி என்றும், புரட்சிகரமான கருத்துக்களை பரப்பியவர் என்றும் தங்களுடைய சித்தாந்தங்களுக்கு ஏற்றபடி அவரது பிறப்பை மட்டுமல்ல, அவரை நல்லவராகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த கருத்தாக்கம் பாதிக்கிணறு தாண்டுவது எவ்வளவு ஆபத்தானதோ அதுபோலத்தான் என்பதை நாம் உணர வேண்டும். இதன் பின்னணியில், கிறிஸ்து பிறப்பின் சத்தியத்தை விளங்கிக் கொள்வோமாக. 

 

பொதுவாகவே, ஒரு குழந்தையின் பிறப்பானது பெற்றோருக்கும், சார்ந்த குடும்பத்துக்கும் நிச்சயமாகவே மகிழ்ச்சியான அனுபவமாகும். மற்றவர்களுக்கோ அது ஒரு செய்தியாக மட்டும் அப்போது இருந்துவிடும். குழந்தை தன்னுடைய மகிழ்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு வளருவதால், அதன் தாக்கம் நாளடைவில் பெற்றோர் உட்பட  அநேகருக்கு சலிப்பாகவும், வருத்தமாகவும்  உருமாற வாய்ப்புகள் உண்டு என்பது சமுதாய உண்மை.  ஆனால், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு கி,மு 700ல் ஏசாயா தீர்க்கதரிசியால்  அடிமைகளாய் நம்பிக்கையை தொலைத்த  இஸ்ரவேல் ஜனங்களுக்கும், தொடர்ந்து உலகம் முழுவதிற்கும் நற்செய்தியாக அறிவிக்கப்பட்டதே இந்த வார்த்தைகள். இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்ற தேடுதலுக்கு விடையே  இப்பிரதியின் செய்தியாகும்.  

எனவே,கிறிஸ்து குறிப்பிட்ட நாளில்  பிறந்தார் என்பதைவிட கிறிஸ்து ஏற்ற காலத்தில் வெளிப்பட்டார் என்பதே பொருத்தமாக இருக்கும்.   

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் 

அவர் யோசேப்புக்கும், மரியாளுக்கும் பிறந்தார் என்பது தான் யதார்த்தத்தில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் நமக்காக பிறந்தார் என்று எழுதப்பட்டது கவனிக்கப்படல் அவசியம். இதன் அர்த்தம் என்ன? பாவம் மனிதனை கடவுளை விட்டு நிரந்தரமாகப் பிரித்து விட்டது. முற்றிலும் பரிசுத்தரான கடவுள் பாவத்தை மேலோட்டமாகப் பார்க்க முடியாது. அதேசமயம், பாவத்திற்குரிய தண்டனையையும் மனிதன் தாங்கிக் கொள்ள முடியாதே. சரீர மரணத்தைப் பற்றியே மனுக்குலம் அதிகமாகச் சிந்தித்து தங்களது வாழ்நாட்களின் பெரும்பகுதியை வீணடிக்கிறார்கள். ஐந்தறிவுள்ள உயிரினங்களும் சரீரதேவைக்காகவே சாப்பிடுகின்றன; சரீர தற்பாதுகாப்பிற்காகவே எதிர்வினை ஆற்றுகின்றன. ஆனால், கடவுளின் சாயலான ஒழுக்கநெறி மற்றும் அறிவுநெறியோடு ஜீவாத்துமாவாக படைக்கப்பட்ட பகுத்தறிவுள்ள மனுக்குலம் அப்படியல்லவே! எனவே, மனித வீழ்ச்சியானது நித்திய தன்மையுடையது என்பதுதான் சரியாக இருக்கும்.

உதாரணமாக, பொய் ஒரு பாவம்; ஆனால், அதை யாரிடம் சொல்கிறோமோ, அதற்கேற்றபடி பரிகாரம் எப்படி மாறுபடுகிறது என்ற அதிர்ச்சி கலந்த உண்மையை இப்படிப் பார்க்கலாம்.

யாரிடம் ?      பரிகாரம்?
நம்மைவிட வயது/அந்தஸ்து குறைந்தவர்கள்     அதிகாரம் – என்னையே எதிர்த்துக் கேள்வியா? 
நமக்கு ஒத்த வயது அல்லது அந்தஸ்துடையவர்கள்இணைசெயல் – நேற்று நீங்கள்  இன்று நான்
நமது வயதில்/அந்தஸ்த்தில் மேலானவர்கள் நிர்ப்பந்தம் – பணிவு அல்லது  சிறிய தண்டனை
நித்திய தன்மையுள்ள தேவன்   நித்திய தண்டனை

எனவே, நித்திய கடவுளுக்கு விரோதமான பாவத்தை நித்திய தன்மையுடைய ஒருவரே நிவிர்த்தி செய்ய முடியும்.மனிதனால் விளைந்த பயங்கரத்தை மனிதனே நிவிர்த்தி செய்ய வேண்டும். ஆனால், பாவ அடிமைத்தனத்திலுள்ள மனிதன் தன்னைத் தானே விடுவித்துக் கொள்ள முடியாதே. மேற்கண்ட உதாரணம் சொன்னதுபோல், தொடர்ந்து நாம் பாவமும் செய்கிறோம்; அதேபோல்,நாம் தேடும் பரிகாரமும் தற்காலிகமானதே. குற்றமனசாட்சி எல்லோரையும் ஆளுகிறபடியால் மரணபயம் எனும் அடிமைத்தனத்திலேயே மனிதர் காலம் செலவிடுகிறார்கள். இருளைக் கண்டு மனுக்குலம் ஏன் பயப்படுகிறது? மரணபயம் இருப்பதாலேயே! இந்நிலையில், கடவுள் ஒரு வழியை உண்டு பண்ணாவிட்டால் மனுக்குலத்திற்கு நம்பிக்கையே கிடையாது.எனவே, நித்திய கடவுளுக்கு விரோதமான பாவத்தை நித்திய தன்மையுடைய ஒருவரே நிவிர்த்தி செய்ய முடியும். கடவுளின் பரிபூரண நீதி பாவத்திற்கு தண்டனை கொடுத்தே ஆகவேண்டும்; அதேசமயம், அவரது மிகுந்த அன்பு பாவத்திற்கு பரிகாரம் செலுத்தியுள்ளது. “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப் போகாமால் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்”. (யோ.3:16).

கிறிஸ்து மனிதனாகப் பிறப்பது அவசியமெனினும், ஏன் பாலகனாகப் பிறக்க வேண்டும்? என்ற கேள்வி தொடருகிறதே என யோசிக்கலாம்.

பாலகன் என்பது கீழ்ப்படிதலையும், தாழ்மையையும் அடையாளப்படுத்துகிறது. அவர் பிறந்தபொழுது “ இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம்.இன்று கர்த்தராகிய கிறிஸ்து எனும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்”.என்று அறிவிக்கப்பட்டதே இதன் சாராம்சம். ரோமர் காலத்தில்  அரசரிடத்திலிருந்து வரும்  பெரும்பாலான செய்திகள்  நல்ல செய்திகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட கட்டாயப்படுத்தப்பட்டாலும்,,  பேரரசருக்கு மகன் பிறக்கும் செய்திதான் “நற்செய்தி” என்று ஜனங்கள் மத்தியில் பிரகடனப்படுத்தப்பட்டது. பேரரசனுக்கு பிறக்கும் வாரீசு மூலம் இந்த சாம்ராஜ்யம் நிலைபெற்று ஜனங்கள் சுபிட்சமாக தொடர்ந்து வாழ முடியும் என்ற அடிப்படையிலேயே இது நற்செய்தி என்று அறிவிக்கப்பட்டது.  கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்த வரலாறே சுவிசேஷங்களில் நற்செய்தியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. “பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாய், ஜீவகாலம் முழுவதும் மரண பயத்தினாலே அடிமைப்பட்டுள்ளபடியால் அவர்களை  விடுதலை செய்யும்படி,  அவரும் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” (எபி.2:14). நான் எதற்கும், யாருக்கும், எந்தக் காலத்திலும் பயப்பட்டதில்லை என்பேனாகில் நிச்சயமாக பொய் சொல்கிறவனாவேன். சமீபத்தில், கொரோனா தாக்கத்தால் என்ன நடக்குமோ என்று உலகமே திகிலில் இருந்ததே! குழந்தைகள் உட்பட கோடிக்கணக்கானோர் சடுதியில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டதையும், அழுவதற்கு யாரும் இல்லாமல் பிணங்கள் தெருக்களில் வீசப்பட்டதையும் நம் வீடுகளில் இருந்தே பார்க்க நேரிட்டதே?   இப்படி, மரணபயமே மனிதனின் எல்லா பயத்திற்கும் அஸ்திபாரமாக இருக்கிறது. பயமானது ஒரு  அடிமைத்தனம் என்றே வேதம் சித்தரிக்கிறது. இருளைக் கண்டு மனிதன் எதற்கு பயப்படவேண்டும்?  மரணபயம் இருப்பதாலேயே! பயத்தைப் பற்றிய நமது எதிர்வினை வேண்டுமானால் குழந்தை பருவத்தில் இருந்ததைவிடவும் தற்போது மாறுபட்டதாக இருக்குமேயன்றி, பயமே எனது வாழ்வில் இல்லை என்று எந்த மனுஷனும்/மனுஷியும் சொல்ல முடியாது.

நன்மை/தீமையை வகையறுக்கும் அதிகாரமுடைய கடவுளால் படைக்கப்பட்ட மனுக்குலம் அவரைச் சார்ந்து, பிறப்பு முதல் முழுமையாகக் கீழ்ப்படிவதின் மூலமே வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டடைய முடியும். “என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்” என்ற அனுபவமுள்ள மனுக்குலம் இந்தக் கீழ்ப்படிதலைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில், கிறிஸ்து முற்றும்முடிய தமது பிறப்பு முதல் சிலுவை மரணம் வரை இந்தக் கீழ்ப்படிதலை நிறைவேற்றினார். சிறுபிராய முதல் அவர் எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் பாவமறியாத பரிசுத்தராக வாழ்ந்தார் என்பது அவர் நமக்காகப் பிறந்தார் என்பதின் அடையாளமாகும். இப்படி, அவர் நூற்றுக்கு நூறு மனிதன் என்பதை பாலகனாகப் பிறந்த அவரது தாழ்மையும், அவரது கீழ்ப்படிதலும் நமக்கு  மெய்ப்பித்தது எனலாம்.“இவர் என்னுடைய நேசகுமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று பரத்திலிருந்து வந்த சத்தம் அவரது சிறுபிராய வாழ்விற்கான முழு அங்கீகாரமாகும். இயேசு பாலகனாகப் பிறந்ததின் மூலம் பாவத்தினால் விளைந்த மனித ஆழத்தின்நம்பிகையற்ற நிலையை தெளிவாக எடுத்துக் காண்பித்துள்ளார். அவர் தமது ஜனங்களின் பாவத்தை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்பதாலே அவருக்கு இயேசு என்ற பெயர் கொடுக்கப்பட்டது.

நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்

குமாரன் என்பது தந்தையின் அதிகாரத்தையும், ஞானத்தையும் உடையவர் என்பது பொருளாகும். தேவகோபாக்கினையின் கீழுள்ள மனிதன் இந்த சிலாக்கியங்களை அனுபவிக்க முடியாது. சிருஷ்டிப்பில் கடவுள் அருளிய இந்த அதிகாரத்தையும், ஞானத்தையும் மனிதன் தனது பெருமையாலும், கீழ்ப்படியாமையாலும் சிதைத்து விட்டான்.  நன்மை-தீமையை வகையறுக்கும் அதிகாரத்தை மனிதன் கையிலெடுத்து சுயநலத்தோடு அதை பிரயோகிக்கிறான். மனிதன் கடவுளைப் பற்றி அறிய முடியுமேயன்றி கடவுளை அறியவே முடியாது.  இந்நிலையில் சூழ்நிலை, கலாச்சாரம், காலசீதோஷ்ணநிலை, பொருளாதாரத்திற்கேற்றபடி அவ்வப்போது சுயபரிகாரமும் தேடிக் கொள்கிறான். இப்படி, பாவத்திற்கு பயப்படுவதைவிடவும், பாவத்தின் விளைவிற்கு பயப்படுவதே மனித இயல்பாக மாறிவிட்டது. இதில் விளையும் ஏமாற்றத்தை புரிந்து கொள்ளக்கூடிய ஞானமும் மனுக்குலத்திற்கு கிடையாது.உலக வல்லமை பெலவீனமாகவும், உலக ஞானம் பைத்தியமாகவும் உள்ளதென தமது கல்வாரி மரணத்தின் மூலம் குமாரனாகிய கிறிஸ்து வெளிக்காட்டியுள்ளார். இதைத்தான்  இருளில் பிறந்த மனிதன் இருளில் வாழ்கிறான் என்று அறியலாம். மனுக்குலம் இழந்த வல்லமையையும், ஞானத்தையும் மனந்திரும்பி தமது குமாரனை  விசுவாசிப்பவர்களுக்கு கடவுள் வாக்கு பண்ணியுள்ளார்.  “இவர் என்னுடைய நேசகுமாரன்; இவருக்கு செவிகொடுங்கள்” என்று பரத்திலிருந்த வந்த சத்தம் இதை தீர்க்கமாகச் சொல்லுகிறது. இப்படி குமாரனை உடையவன் ஜீவனை உடையவனாகிறான். (1 யோ.3:12).  எனவேதான், இயேசு கிறிஸ்து: “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்றார்.  மட்டுமல்ல, குமாரனாகிய இயேசு கிறிஸ்து தமது இரண்டாம் வருகையில் மனிதனின் அந்தரங்கங்களைக் குறித்து நியாயந்தீர்க்கும் அதிகாரம் பெற்றிருக்கிறார் என்பதை குமாரனாக அனுப்பப்பட்டார் என்பதிலிருந்து நாம் பிரித்துப் பார்க்க முடியாது.  

இயேசு கிறிஸ்து பாலனாகப் பிறந்தது மனிதனின் ஆழத்தை வெளிப்படுத்தின நிலையில், அவர் குமாரனாகக் கொடுக்கப்பட்டது பிதாவின் உயரம் இன்னதென்பதை நமக்கு வெளிப்படுத்தியுள்ளது. அவர் பாலகனாய்ப் பிறந்து தாம் நூற்றுக்கு நூறு மனிதன் என்பதையும், அவர் குமாரனாகக் கொடுக்கப்பட்டு  தாம்  நூற்றுக்கு நூறு கடவுள் என்பதையும் நிருபித்தார். இப்படி, இயேசு கிறிஸ்து மட்டுமே பரிபூரண பரிசுத்தமான கடவுளுக்கும், பரிபூரண வீழ்ச்சியடைந்த மனுக்குலத்திற்குமிடையே ஒரே மத்தியஸ்தர் என்பது கிறிஸ்துமஸின் ஆணித்தரமான நற்செய்தியாகும். அவரது இரண்டாம் வருகை அதிக சமீபமாகத் தெரிகிற  இந்தக் காலத்தில் மனந்திரும்பி, அவரை விசுவாசித்து அவர் மூலமாக மட்டுமே வரும் நித்திய இரட்சிப்பை பெற்றுக் கொள்வதே உண்மையான  கிறிஸ்து பிறப்பினால் ஏற்படும் நித்திய அனுபவமாகும். இதை வாசிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து இலவசமான நித்திய இரட்சிப்பைப் பெற அழைக்கப்படுகிறீர்கள். 


இந்த செய்தி போதகர் ஜான் நெல்சன் இஸ்ரேல் அவர்கள் எழுதியது.