பிரச்சனைகள் போராட்டங்கள் மத்தியில் நம்பிக்கை

சங்கீதம் 27

இந்த சங்கீதத்தில் தாவீது தன் வாழ்விற்காக ஜெபிக்கிறார். இந்த சங்கீதத்தை குறித்து Spurgeon இப்படியாக கூறுகிறார், சவுல் தாவீதை விரட்டும் போது எதிரிகளால் சூழ்ந்திருக்கும்போது, தன் பெற்றோர்களை விட்டு பிரிந்து, தனிமையாக மன அழுத்தம் நிறைந்த நிலையில் ஏறெடுக்கப்பட்ட ஜெபம் என்று கூறுகிறார். உன் வாழ்வில் பிரச்சனை மோதியடிக்கும்போது நீ எங்கே போவாய்? இக்கட்டான நேரங்களில் எப்படி ஜெபிப்பது என்பதை தாவீது இந்த சங்கீதத்தின் முலம் நமக்கு கற்றுத்தருகிறார். இக்கட்டான சூழ்நிலையில், யாவராலும் கைவிடப்பட்ட நிலையில்  இருப்பாயானால் நீ இந்த சங்கீதத்தை வாசிக்கலாம்.

 

இந்த சங்கீதம் தாவீது தேவன் மீது கொண்டிருந்த நம்பிக்கையில் ஆரம்பிக்கிறது. வசனம் 1 “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?” இந்த வசனத்தில் தாவீது தேவனை “என் வெளிச்சம்”, “என் இரட்சிப்பு”, “என் ஜீவனின் பெலனானவர்” என்ற மிக நெருக்கமான உறவை வெளிப்படுத்துகிறார்.

வெளிச்சம்- இருள் சூழ்ந்த நிலையிலிருந்து தாவீதை மீட்டது. நம்மை இருளின் அந்தகாரத்திலிருந்து விடுதலையாக்குகிறது. வெளிச்சம் நம்மை சரியான பாதையில் நடத்துகிறது. சங்கீதம் 119:105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

இரட்சிப்பு- தேவன் தாவீதை சவுலின் கையிலிருந்து காப்பாற்றினார். அவர் நம்மை மரணத்தைவிட்டு நீக்கி ஜீவனுக்கு உட்படுத்தியிருக்கிறார். யோவான் 5:24 “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

என் ஜீவனின் பெலனானவர்– தேவன் தாவீதை தோல்வியிலிருந்து விடுவித்தார். தேவ பெலன் நமக்கு வெற்றியை வசதிசெய்கிறார். தேவனுடைய பெலத்தால் முற்றிலும் ஜெயம் கொள்கிறோம். ரோமர் 8:37 “ இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.”

தேவனின் இந்த மூன்று குணாதிசயங்களை நம் வாழ்வின் பிரச்சனையில் நம்பிக்கையை கொடுக்கிறதாயிருக்கிறது. நாம் ஆராதிக்கிற ஆண்டவர் யார்? அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய குணாதிசயங்கள் நமக்கு வெளிப்படுத்துகிறது. ஆகவே நாம் எப்பேர்பட்ட எதிரிகளுக்கும் பயப்பட அவசியமில்லை.  எரேமியா 17:5 “மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு,  கர்த்தரை  விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர்  சொல்லுகிறார்”. எரேமியா 17:7 “கர்த்தர்மேல்  நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்”.

நீ யாரை சார்ந்திருக்கிறாய்? தாவீது தன் இக்கட்டில் தேவனை சார்ந்திருக்கிறான்.

வசனம் 2-3 “என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள். எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்”. 

வசனம் 2-3-ல் தாவீது தேவன் மீதுள்ள நம்பிக்கையை அறிக்கையிடுகிறான். தாவீது, தேவன் தன் வாழ்வில் கடந்த காலத்தில் செய்த நன்மையையும், வெற்றியையும் நினைத்து நான் இப்பொழுது தோற்பதில்லை என்கிறான்.  தாவீது தன் வாழ்வில் தேவன் செய்த கிரியைகளை நினைத்து தேவன் மாறாதவர் என்று அறிந்திருந்தான். அவர் எப்பொழுதும் அதே வல்லமையுள்ளவர், உண்மையுள்ளவர் என்பதை உணர்ந்தான். தேவன் உன் வாழ்வில் கடந்த காலத்தில் செய்த அனைத்து காரியங்களையும் நினைத்து அவர் இன்றும் இருக்கிறார் என்று நினைக்கும்போது அவர் நமக்கு நம்பிக்கையை கொடுக்கிறது.

தேவன் நமக்கு ஏற்படுத்தி கொடுத்த நம்பிக்கையில் ஈடுபாடு- வசனம்- 4 கர்த்தரிடத்தில்  ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம்  கர்த்தருடைய  ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்”.  தாவீது தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுகிறான்.

சங்கீதம் 84: 1-4 “1. சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்! 2. என் ஆத்துமா கர்த்தருடைய  ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. 3. என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே. 4. உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள்.”

தாவீது இதய துடிப்பு தேவனை ஆராதிப்பது. இன்று நீ தேவ பிரசன்னம் இருக்கும் இடத்தில் காணப்பட வேண்டும். எபி.10:25. தாவீதின் இலக்கு தேவனை நேசிப்பது, தேவனின் சமுகத்தை தேடுவது. இது தான் ஒவ்வொரு விசுவாசியின் இலக்காக இருக்க வேண்டும்.தாவீது தேவனையே சார்ந்திருக்க ஒப்புக்கொடுத்தான். அவன் வாழ்வில் அனைத்து தேவைகளுக்கு தேவனை சார்ந்து கொண்டான்.  நாம் அதிகமாக நேரம் ஜெபத்துள் சார்ந்துகொள்ள வேண்டும். நாம் ஜெபிக்க அலைக்கபடுகிறோம். தேவன் ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறார். எரேமியா 33:3, பிலி. 4:6-7, மத். 7:7. நாம் தேவனை சார்ந்திருக்கும் போது போராட்டங்கள், கவலைகள் மீது வெற்றியுண்டு. 

நாம் தேவனிடத்தில் நம்பிக்கை வைப்பது நமக்கு ஆறுதலை கொடுக்கிறது வசனம் 5-6 கற்றுக்கொடுக்கிறது. தேவன் தாவீதை கூடார மறைவில் வைத்து காப்பாற்றினார். அவர் அவனை எதிரியின் மத்தியிலிருந்து காத்தார். உனக்கு ஏற்படுகிற பிரச்சனை போராட்டங்களில் பத்திரமாக காப்பார். உதாரணமாக, தானியேலின் வாழ்வை சிந்தித்து பாருங்கள். தேவன் நமக்காக ஓர் சிறப்பான இடத்தை வைத்துள்ளார். அவருடைய கூடார மறைவில் வைத்து காக்கிறார். நமக்கு பூரணபாதுகாப்பு உண்டு. உன் அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுதலையின் நம்பிக்கை உண்டு. அவர் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பி நம்மை மீட்டுள்ளார். ஆகவே நமக்கு பூரண நம்பிக்கை உண்டு. யோவான் 10:28-30. நீ எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும் இயேசுவண்டை வா. அவர் உன்னை காப்பார்.