பகுதி – 1    அறிமுகம்

முன்னுரை:

பரிசுத்த வேதாகமம் கடவுளுடைய வார்த்தை. வேதாகமம் கடவுளால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய பரிசுத்த வார்த்தையாக இருக்கிறது. இந்த வேதம் அதிகாரமுடையது, போதுமானது மற்றும் தவறில்லாததுமாயும் இருக்கிறது. வேதம் பழைய, புதிய ஏற்பாடுகளை கொண்டது. பழைய ஏற்பாட்டின் தன்மை மேசியாவை எதிர்நோக்கி இருக்கிறது. வரபோகிற மேசியாவை கிறிஸ்துவை மட்டுமே மையமாக கொண்ட தன்மையுடன் பழைய ஏற்பாடு காணப்படுகிறது. புதிய ஏற்பாட்டின் தன்மை, பழைய ஏற்பாடில் எதிர்நோக்கியிருந்த மேசியாவை வெளிப்படுத்துகிறது. புதிய ஏற்பாடு மேசியாவாகிய கிறிஸ்துவை சரித்திர பூர்வமாக வெளிப்படுத்துகிறது. புதிய ஏற்பாடும் கிறிஸ்துவை மட்டுமே மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாடு எழுதப்பட்டதற்கு நான்கு காரணங்கள் உண்டு. 

  1. புதிய ஏற்பாடு எழுதவது கடவுளுடைய சித்தம்.
  2. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை தாமதப்பட்டதால் இயேசுவின் ஊழியம், போதனைகள், சத்தியத்தை காக்க எழுதப்பட்டது. 
  3. மத்தேயு 28:18-20ன் படி சுவிஷேசம் விருத்தியடைவதற்காக எழுதப்பட்டது.
  4. நேரடியான சாட்சிகள் மரித்து கொண்டிருந்ததால் எழுத்து வடிவில் புதிய ஏற்பாடு எழுதப்பட்டது. 

புதிய ஏற்பாட்டில், சுவிசேஷங்கள் சரித்திரம் நிருபங்கள் மற்றும் தீர்க்கதரிசன புத்தகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. சுவிஷேசம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, ஊழியம், போதனைகள், பாடுகள், சிலுவை மரணம் மற்றும் உயிர்தெழுதலை மையமாக கொண்டு எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டில் 21 புத்தகங்கள் நிருபங்களாக இருக்கிறது. நிருபம் என்றால் கடிதம். அந்த நிருபம் ஒரு அப்போஸ்தலன் மூலமாகவோ, அல்லது அப்போஸ்தலர்களை சார்ந்தவர்கள் மூலமாகவோ ஒரு தனிப்பட்ட திருச்சபைக்கு, ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்கு தீர்வாகவும், ஆலோசனையாகவும் இருக்கும்படியாக கொடுக்கப்பட்டிருக்கிறது. நிருபங்களில் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, போதனை, சிலுவை மரணம் மற்றும் உயிர்தெழுதல் ஆகியவற்றின் வியாக்கியானம் கொடுக்கப்படிருக்கிறது. நிருபங்களில் சபைக்கும், சபை போதகர்களுக்கும், முப்பர்களுக்கும், உதவிக்காரர்களுக்கும், விசுவாசிகளுக்கும் தங்கள் தங்களுடைய விசுவாசத்தை பலப்படுத்தவும், கள்ள போதனையில் இருந்து சபையை காத்துக்கொள்ளவும், விசுவாசிகளை உற்சாகப்படுத்தவும் நிருபங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட புதிய ஏற்பாட்டில், தேவன் பவுலின் முலமாக 13 நிருபங்களை கொடுத்திருக்கிறார். இந்த தொகுப்பில் நாம் வரிசையாக பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தின் விளக்கவுரையை நாம் படிக்கயிருக்கிறோம். பிலிப்பியருக்கு எழுதின நிருபம் பவுலினால் எழுதப்பட்டது. 

பிலிப்பியர் நிருபத்தை நாம் தியானித்து படிப்பது ஏன் அவசியமானது? 

நாம் இந்த நிருபத்தை இன்றைக்கு ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வி எழும்புகிறது. அதற்கான பதில், இன்றைக்கு அநேகர் சமாதானத்தையும், அமைதியையும் தேடி அதை கண்டுபிடிக்க கூடாமல் இருக்கும் நிலையில் உள்ளனர். நேர்மறை சிந்தனை (Positive thinking), யோகா, தியானங்கள், சிரிப்புகூடங்கள் மற்றும் travelling போன்ற அநேக வழிமுறைகளில் சமாதானத்தையும், சந்தோசத்தையும் தேடுகிறார்கள். இவைகள் எல்லாம் வீண். 

இந்த நிருபம் முதலாவது, மெய்யான சந்தோஷத்தின் இரகசியத்தை வெளிப்படுத்துகிறது. இரண்டாவது, இந்த இரகசியத்தை கற்றுக்கொண்ட மனிதனைப் பற்றி வெளிப்படுத்துகிறது . மூன்றாவது, இந்த இரகசியத்தை கற்றுக்கொடுத்த கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது. “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்” (பிலிப்பியர் 4:4) என்ற வசனம் இந்த நிருபத்தின் மைய வசனமாக இருக்கிறது. 

வரலாற்று பின்னணி

முதலாவது இந்த சபை பவுலினால் நிறுவப்பட்ட சபை. புறஜாதியார்களால் நிறைந்த சபை.

பிலிப்பி பட்டணத்தின் சபையைப் பற்றிய வரலாற்று பின்னணியை புரிந்துக்கொள்வது, இந்த நிருபத்தை விளங்கிக்கொள்ள உதவியாக இருக்கும். இந்த நிருபத்தை வாசிப்பதற்கு முன் அப்போஸ்தலர் 16ம்  அதிகாரத்தை வாசிப்பது அவிசியமானது. பிலிப்பி பட்டணம் அலெக்ஸ்சாண்டர் (Alexandar the Great) என்பவரின் தந்தை பெயர் பிலிப்பு இப்பெயரே பட்டணத்திற்கு பிலிப்பி பெயரானது. 356BCல் கிரேக்கர்களால் கட்டப்பட்ட பட்டணம். கிரேக்கம் மொழி பேசும் பட்டணம். 42BCக்கு பின்பு இந்த பட்டணம் ரோமர்களின் ஆளுகைக்கு கீழாக கொண்டுவரப்பட்டது. 

அப்போஸ்தலர்16:12 “அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்துஅந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்.” 

49ADல் பவுல் தனது இரண்டாம் மிஷினரி பயணத்தில் பரிசுத்த ஆவியானவாரால் வழிநடத்தப்பட்டு பிலிப்பி பட்டணத்திற்கு வந்தார். பிலிப்பி பட்டணத்தில் உள்ளவர்கள் தாங்கள் ரோம குடியுறிமை பெற்றிருந்தார்கள். அந்த பட்டணத்தில் யூதர்கள் மிகுதியாய் இல்லை. அதனால் தான் அங்கே ஜெப ஆலயம் இல்லை. அவர்கள் ஆற்றின் அருகே கூடினார்கள் என்று  

அப்போஸ்தலர் 16:13ல் “ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்துஅங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.” என்று வாசிக்கிறோம்.

 ஓய்வுநாளில் அந்த பட்டணத்தார் ஆற்றின் அருகே கூடினார்கள். 

பிலிப்பி பட்டணத்தில் இருந்த சில விசுவாசிகள்

  1.   லீதியாள்: அப்போஸ்தலர்16:14ல் இந்த பெண்ணைப் பற்றி வேதம் கூறுகிறது. 

“அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.” 

லீதியாள் என்னும் ஸ்திரி ஒரு புறஜாதியான பெண். அவள் தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாய் இருந்தாள். கர்த்தர் பவுலின் வார்த்தைகளைக் கொண்டு இந்த பெண்ணின் இருதயத்தில் செயல்ப்பட்டார். இந்த லீதியாள் தன் வீட்டை சபை கூடி வருதலுக்கு திறந்துக்கொடுத்தால். அப் 16:40 “அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய்சகோதரரைக் கண்டுஅவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள்.

ஒரு புறஜாதி பெண், அவளுடைய வாழ்வில் தேவன் செயல்பட்டவுடன், அவள் தேவனுடைய ஊழியத்தில் ஈடுப்பட்டு, பிலிப்பி பட்டணத்தில் ஒரு சபை நிறுவப்பட ஏதுவாயிருந்தால்.  

  1. குறிசொல்லும் ஆவியை கொண்டிருந்த பெண்: 

அப்போஸ்தலர் 16:16-21 “நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.  17. அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள். 18. இப்படி அநேகநாள் செய்துகொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று. 19. அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.

20. அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி, 21. ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும்தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள்.”

குறிசொல்லும் ஆவியை கொண்டிருந்த ஒரு பெண் குணப்பட்டு, சுவிசேஷத்தைக் கேட்டு  இரட்சிக்கப்படுகிறாள். இதன் விளைவாக பவுலும், சீலாவும்  சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

  1. சிறைச்சாலைக்கார்கள்:

அப்போஸ்தலர் 16:25-33ஐ வாசிக்கும் போது, சிறையில் வைக்கப்பட்ட பவுல் மற்றும் சீலாவின் உண்மையான சிறையில் நடத்தை அங்குயிருந்த சிறைசாலை காவலர்களின் வாழ்வை மாற்றியது. அவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் இரட்சிக்கப்பட்டார்கள். அதன் விளைவு சபையில் சேர்க்கப்பட்டார்கள். 

பிலிப்பியர் நிருபம் எழுதப்பட்ட காலம் 

பிலிப்பியர் நிருபம் 61-62ADகளில் எழுதப்பட்டது. அந்த காலங்களில் பவுல் சிறையில் இருந்தார். இந்த நிருபம் சிறையிலிருந்து எழுதப்பட்ட நிருபம். ஆங்கிலத்தில் இந்த நிருபத்தை (PRISION EPISTLE) என்று அழைப்பார்கள். 

பிலிப்பிய சபையின் ஒரு முக்கிய குணாதிசயம், ஊழியத்திற்கு அதிகமாக உதவிய சபை. அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத் தேவைகளை சந்தித்த சபை. அவர்கள் தாராளமாய் கொடுத்தார்கள். 

பிலிப்பிய சபையில் இருந்த குழப்பங்கள் என்ன?

பிலிப்பிய சபையில் இருந்த முதல் மிக முக்கியமான பிரச்சனை ஒற்றுமையின்மை. இரண்டாவதாக சபைக்கு வெளியிருந்து அரசாங்கத்தால் உபத்திரவம். ரோம அரசனை மட்டுமே கடவுளாக வணங்க வேண்டும். மூன்றாவதாக, சுவிசேஷ எதிரிகள். இவைகள் தான் பிலிப்பிய சபையின் அடிப்படை குழப்பமும் பிரச்சனையுமாக இருக்கிறது. சபை எப்பொழுதுமே பிரச்சனைகளோடு தான் காணப்படும். இந்த உலகத்தில் எந்த சபையும் பூரண பரிசுத்த சபை இல்லை. விசுவாசிகள் இதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். 

பிலிப்பிய நிருபத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள போகிற பாடங்கள் என்ன?

  • பிலிப்பிய நிருபத்தில் இருந்து பவுல் என்கிற மனிதனின் விசுவாசத்தையும், சுவிசேஷத்தின் மீதுள்ள வைராக்கியத்தையும் பற்றி படிக்கயிருக்கிறோம். 
  • இந்த நிருபத்தில் இரண்டு காரியத்தை மையப்படுத்தி எழுதியிருக்கிறார். அதில் முதலாவது, கிறிஸ்துவின் சுவிசேஷம், இரண்டாவது, கிறிஸ்துவுக்குள் வாழும் விசுவாசிகள்.

முடிவுரை 

கிறிஸ்துவின் சுவிசேஷமும், கிறிஸ்துவுக்குள் வாழும் விசுவாசிகளும் இணைந்தால் மட்டுமே கிறிஸ்துவுக்குள் சந்தோஷமான வாழ்வு வாழ முடியும். உண்மையான சுவிசேஷத்தினால் மட்டுமே மனிதர்களுடைய வாழ்வில் உண்மையான சந்தோஷம் வெளிப்படும். உண்மையான சந்தோஷம் வெளிப்படும் போது மட்டுமே உண்மையான ஆராதனைக்கு வழிவகுக்கும். நாம் தொடர்ச்சியாக பிலிப்பியர் நிருபத்தில் இருந்து எப்படி கிறிஸ்துவுக்குள் சந்தோஷமாய் வாழ என்றும், உண்மையான சுவிசேஷம் எப்படி சபையில் பிரசனைகளை சரி செய்கிறது என்றும், தனிப்பட்ட வாழ்வில் நாம் எப்படி உண்மையாய் தேவனை ஆராதிப்பது என்றும் இனி வரும் கட்டுரைகளில் பாப்போம்.