ஆசிரியர் : போதகர் மார்க்
ஓய்வுநாளில் ஜெப ஆலயத்தில் கிறிஸ்து செல்கிறார் அங்கு ஒரு மனிதன் – சூம்பின கையையுடையவன் (வலது கை) – அவனுக்கு சரீரத்தில் மிக முக்கியமான உறுப்பு செயல்படாமல் இருக்கிறது. பெரும்பாலும் பிறக்கும்போதே இப்படிபட்ட மனிதனாக இவன் பிறந்திருப்பான். இயல்பாக ஒரு மனிதன் செய்யகூடிய எந்தவொரு வேலையையும் சரியாக, சீக்கிரமாக இவனால் செய்ய முடியாது. சாதாரமாக ஒரு மனிதன் ஒரு வேலையை செய்வதற்கு 10 நிமிடம் ஆகுமென்றால் இந்த மனிதனால் அதை செய்ய ½ மணி நேரம் ஆகும். காலையில் எழுந்திருப்பதிலிருந்து இரவு படுக்கைக்கு செல்லுவரை அவன் செய்கிற ஒவ்வொரு காரியமும் அவனுக்கு கடினமானதும், பாரமானதும், அலுப்புள்ளதுமாக இருக்கும். இன்றைக்கு இருப்பதுபோல் கல்வியறிவோ, வேலைவாய்ப்புகளோ இல்லாத காலத்தில் அவன் இருக்கிறான். நிச்சயம் அவனுக்கு சரியான வேலை யாரும் குடுத்து இருக்க மாட்டார்கள் அப்படி குடுத்தாலும் அவனுக்கு போதுமான வருமானம் இருந்திருக்காது. அவன் இன்னொரு மனிதனை சார்ந்துதான் வாழவேண்டிய நிலை. மிகவும் சஞ்சலம் நிறைந்த, சந்தோஷம் இல்லாத, வெறுமையும் , நிர்பந்தமான வாழ்க்கை. எதிர்காலத்தை குறித்த பயத்தோடு தினந்தோறும் வேதனையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவன்.
இப்படிப்பட்ட மனிதனாக அவன் இருந்தும் அவன் தேவனை தேடுகிறவனாக அவரை ஆராதிக்கிறவனாக இருக்கிறான். அவன் ஜெப ஆலயத்திற்கு தொடர்ந்து வருகிறவனாக, தேவனிடத்தில் தொடர்ந்து விடுதலையை எதிர்பார்த்தவனாக இருக்கிறான்.
சரீரத்தில் ஊணமுள்ளவன் மாத்திரமல்ல, ஆத்துமாவில் ஊணமுள்ளவனின் நிலையும் இப்படிதான். பாவத்தில் பிறந்த பாவத்தோடு வாழ்கிற மனிதனும் இதே வேதனையிலும் இக்கட்டிலும் இருக்கிறான்.
இதிலிருந்து அவனுக்கு என்ன விடுதலை? அவன் எப்படி இதிலிருந்து மீட்கப்படுவது?
ஒரே ஒரு வழிதான். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து.
இப்படிப்பட்ட மனிதனை தேடி, அவனை மீட்பதற்காகவே அவர் அந்த ஜெப ஆலயத்தில் அங்கு செல்கிறார். இயேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை தேடி அவன் வரவில்லை, கிறிஸ்து அவனைத்தேடி அவனை கண்டு கொள்ளும்படி வருகிறார். வ-3- அவர் அவனை எழுந்து நடுவே நில் என்று சொல்கிறார் – அவர் அவனை அழைக்கிறார். அவனை அழைத்து நடுவே நில் என்கிறார். அவன் ஆலயத்தில் ஒரு ஓரத்தில் இருக்கிறான். அவர் அவனை முன்னே அழைத்து எல்லோரும் பார்க்கும்படியாக நடுவே நில் என்கிறார். ஏன்? அவர் அவனை சுகபடுத்தினால் அவரை குற்றம் சாட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருகிறார்கள். அவன் சுகமடைவதை, அவன் விடுதலை பெறுவதை அங்கு யாரும் விரும்பவில்லை. அவர் அவனை நிறுத்தி அவனின் நிலையை எல்லோரும் அறியும்படி செய்கிறார். இங்கு கிறிஸ்து அவனின் வலியையும், வேதனையையும் உணர்ந்தவராக அவனை முற்றும் அறிந்தவராக கிறிஸ்து மாத்திரமே அங்கு இருக்கிறார்.
அவர் உடனே சுகபடுதவில்லை அவனது மீட்பை விரும்பாத அவர்களிடம் கேள்வி கேட்கிறார். ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக்காப்பதோ அழிப்பதோ, எது நியாயம் என்கிறார்.- அவன் சார்பாக அவனுக்காக அவர்களிடம் பரிந்துபேசிக் கொண்டிருக்கிறார். அவனை மன்னிப்பதற்கோ, அவனிடத்தில் இரக்கம் காட்டுவதற்கோ, அவனிடத்தில் அன்பு செலுத்தி அவனை மீட்பதற்கோ அவரைத்தவிர அங்கு வேறுயாரும் அவனுக்கு இல்லை. அவன் சார்பாக கிறிஸ்து மட்டுமே அங்கு இருக்கிறார்.
வ-5,6 – ஜெப ஆலயத்தினுடைய ஒட்டுமொத்த கூட்டமும் அவனுக்கு எதிராகவும் கிறிஸ்துவை பகைத்தும் நின்று கொண்டிருக்கிறது. அவரும் அவனை மீட்பதற்காக ஒட்டுமொத்த ஜெப ஆலய கூட்டத்தையும் எதிர்த்து அவனை மீட்க ஆயத்தமாகிறார். அவனை சுகபடுத்தினால் அடுத்து அவர் அந்த ஜெப ஆலயத்திற்கு வர முடியாது, அவரை முற்றிலும் பகைத்து கொலை செய்ய முற்படுவார்கள். நடக்கபோகிற எல்லாவறையும் அவர் அறிந்தே அவனை மீட்பதினால் வரகூடிய எவ்வளவு பெரிய ஆபத்தையும், முழு உலகமும் அவரை எதிர்த்து நின்றாலும், அவர்கள் அவரை கொன்னே போட்டாலும் அவனை மீட்காமல் தான் அங்கிருந்து செல்வதில்லை என்பதிலே அவர் உறுதியாக இருக்கிறார்.
அவர் அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று. – எல்லாவற்றையும் தாண்டி, எல்லாவற்றையும் எதிர்த்து, அவனை தமது மிகுந்த கிருபையினாலே மீட்டு அவனை விடுதலை ஆக்கபட்டவனாக, புதிய ஜீவனுள்ள வாழ்வை பெற்றவனாக அனுப்பி அவர் சிலுவையை நோக்கி, மரணத்தை நோக்கி பயணிக்கிறார்.
நாமும் நமது ஆவிக்குரிய நிலையிலே மரித்து, நமது பாவ சுபாவத்தால் இக்கட்டிலும் அழிவிலும் இருந்தோம், இருக்கிறோம். மகிமையின் தேவனாகிய கிறிஸ்து நம்மை தேடி வந்தார், நம்மை பெயர்சொல்லி அழைத்தார், நமது பாடுகளை சுமந்தார், நமக்காக பரிகாரபலியனார், நம்மை மீட்கும்படி தம்மை அவர் சாக கொடுத்தார். நமக்காக தமது ஜீவனையே ஒப்புக்கொடுத்தார். அவரது சரீரம் பிட்கப்பட்டு, நமக்காக அவரது இரத்தம் சிந்தபட்டது. இவ்வளவு மகத்துவமான இந்த கிரிஸ்துவின் அன்பையும், மன்னிப்பையும் மெய்யாக உணர்ந்து பாவத்தைவிட்டு மனந்திரும்பி அவரை விசுவாசியுங்கள், அவரால் மட்டுமே உங்களுக்கு மெய்யான விடுதலையும். சமாதானமும் கிடைக்கும்.