Blog

Christmas Series
30 Dec
0

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பிதாவாகிய தேவனால் முதலில் அறிவிக்கப்பட்டது

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நம்முடைய விசுவாசத்தின் அடிப்படையான சத்தியம். இந்த அடிப்படையான சத்தியத்தை நாம் கேட்டு அதை ஆராய்ந்து நம்முடைய இருதயத்தில் அதை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும்.  இந்த சத்தியம் நமக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தர வேண்டும். அதை போல் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நம்மை மெய்யான ஆராதனைக்கு நேராகவும் கொண்டு செல்ல வேண்டும். இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பு என்பது அது மகிமையானது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் செய்தி இன்று ஏளனப் படுத்தப்படுகிறது அவருடைய பிறப்பின் மகிமை உணராமல் இன்று அவருடைய மகிமையை தொடர்ச்சியாக ஜனங்கள் இழிவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பது ஆச்சரியமானது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பது மகிமையானது தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்ற மேன்மை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத தேவனுடைய சத்தியமாக இருக்கிறது. அது மேன்மையான கிருபையின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.  இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்தார் என்பதை நாம்  எல்லாரும் அறிந்திருக்கிறோம்.

இயேசு கிறிஸ்து என்ன நோக்கத்திற்காக இந்த உலகத்தில்  வந்திருக்கிறார் ?

இந்த கேள்விக்கான பதிலை வேதம் தெளிவாக சொல்லி இருக்கிறது. ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தைப் பார்க்கும்போது இந்த அதிகாரத்தில் எதற்காக இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வரவேண்டும் என்ற நோக்கத்தை தேவன் ஆதிப்பெற்றோராகிய ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிதாவாகிய தேவன் வெளிப்படுத்தி இருக்கிறார்.

உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். ஆதியாகமம் 3:15

இந்த வசனத்தை சிந்திப்பதற்கு முன்பாக ஆதியாகமத்தை குறித்ததான சிறிய அறிமுகத்தை பார்க்காலாம். இந்த வசனத்தை தெளிவாய் புரிந்துக்கொள்ள ஆதியாகமத்தின் பின்னணி அவசியமானது. ஆதியாகமம் பரிசுத்த ஆவியானவருடைய தூண்டுதலினால்  மோசேயை கொண்டு தேவன் எழுதினார். மோசே ஐந்து ஆகமங்களை எழுதியிருக்கிறார் என்று இயேசு சாட்சிக்கொடுக்கிறார் என்று லூக்காவில் வாசிக்கிறோம். லூக்கா 24:44 ல் “மோசேயினுடைய நியாயபிரமாணத்தையும் ஆகமத்தையும் வாசியுங்கள் என்று இயேசு சொல்கிறார்.  2 கொரிந்தியர் 3:15 பவுல் சொல்கிறார். “மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது“. ஆதியாகமம் மற்றுமுள்ள ஆகமங்கள் மோசேவினால் எழுதப்பட்டது என்று வேதமே சாட்சியிடுகிறது.

யாருக்கு இந்த ஆதியாகமம் எழுதப்பட்டிருக்கிறதுஎகிப்தில் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாகி, கானானை நோக்கி வனாந்தரத்திலே  பயணித்துக் கொண்டிருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எழுதப்பட்டது.

எதற்காக இந்த ஆதியாகமம் எழுதப்படுகிறது?

  1. இந்த இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திக் கொண்டு வருகிற தேவன் யார் என்பதை விளக்கப்படுத்துவதற்காகவும்
  2. மனிதனாகிய நான் யார் என்பதை தெரியப்படுத்துவதற்காகவும் எழுதப்பட்டது
  3. என்னுடைய வாழ்க்கையில பாவம் எப்படி வந்தது,  இந்த பாவத்தில் இருந்து எனக்கு எப்படி விடுதலை என்பதை தெரிவிக்கவும்
  4. தேவன் என்னுடைய வாழ்க்கையில் கொண்டிருக்கிற நோக்கம் என்ன என்பதை எல்லாம் வெளிப்படுத்துவதற்காக  இந்த ஆதியாகமம் எழுதப்பட்டது.

ஆதியாகமம் முதல் இரண்டு அதிகாரங்கள் என்ன கூறுகிறது ஆதியாகமம் 1:1 – தேவன் யார்? என்று அறிமுகப்படுத்துகிறது. ஆதியிலே தேவன் என்று சொல்லும்போது அவர் திரியேக தேவன் என்பதை வெளிப்படுத்துகிறது. மூல பாஷையில் ஏலோகிம் என்று சொல்லும்போது அது திரித்துவத்தை குறிக்கிறது. ஆதியாகமம் 1:1-25 வாசிக்கும்போது தேவன் எவைகளைலாம் படைத்தார் என்று வாசிக்கிறோம்.  ஆதியாகமம் 1:26 பார்க்கும்போது திரியேக தேவன் மனிதனை படைத்தார் அவர் ஆணும் பெண்ணுமாக படைத்தார் அவர் தேவ சாயலாக படைத்தார்.  ஆதியாகமம் 2 பார்க்கும்போது ஆறு நாளில் தேவன் எல்லாவற்றையும் படைத்து வீழ்ச்சிக்கு முன்பாகவே படைப்பு முடிந்த உடனே தேவன் ஏற்படுத்தியது ஓய்வு நாள். படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தன்னை படைத்தவரை ஆராதிக்க வேண்டும். அவர்களை திருமணத்தில் இணைத்திருக்கிறார், வேலையை கொடுத்திருக்கிறார்.  ஆதியாகமம் 2:7 தேவனாகிய கர்த்தர் மனிதனுக்கு பூமியின் மண்ணினாலே உருவாக்கி ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்.  தேவன் உயிரைக் கொடுத்தார் மனிதனுக்கு அவன் மனிதனானான் என்று பார்க்கிறோம்.  ஆதியாகமம் 2:8,15 ஏதேன் தோட்டத்தை உண்டாக்கி அதில் ஆதாமை வைத்தார் என்று பார்க்கிறோம்.ஏதேன் தோட்டத்தில் தேவனாகிய கர்த்தர் மனுஷனை பண்படுத்தவும் காக்கவும் வைக்கிறார். ஆதியாகமம் 2:18 ஆதாம் தனிமையாய் இருப்பது நல்லதல்ல ஏற்ற துணையை உண்டாக்குவேன் என்று சொல்லி தேவன் ஏவாளை படைக்கிறார் ஏவாளை  படைத்தது பின்பு அவர்களை திருமணத்தில் இணைக்கிறார் (ஆதியாகமம் 2:21-22). ஆதியாகமம் 2:16,17 தேவன் சொல்லி இருக்கிறார் தோட்டத்தில் இருக்கிற எல்லா கனியும் நீ புசிக்கலாம் ஆனால் தோட்டத்தில் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டாம் அதை புசிக்கும் நாளிலே நீ சாகவே சாவாய். பாவம் உலகத்திற்கு வருவதற்கு முன்பாகவே தேவன் மரணம் பாவத்தின் சம்பளம்  என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்.தேவனுக்கு கீழ்படிந்து அந்த கீழ்படிதல் மூலமாக தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை செய்து தேவனை ஆராதித்து வாழ்வதுதான். வீழ்ச்சிக்கு முன் இருந்த நிலை ஆதாமும் ஏவாளும் பூரணமான நிலையில் தேவனோடு நெருக்கமான உறவு இருந்தது. ஆதியாகமம் 3:8 பகலின் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற,  ஒரு பழக்கம் தேவனுடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்.  தேவனோடு தினந்தோறும் உறவை பெற்றுக்கொண்டு தேவனிடத்திலிருந்து பரிபூரணமான ஆசீர்வாதத்தையும் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஓய்வு நாள் இருக்கிறது, வேலை இருக்கிறது, திருமணம் இருக்கிறது.

ஆதியாகமம் 3:1 தேவனிடத்தில் தொடர்ச்சியாக ஐக்கியப்பட்டு தேவன் கொடுத்த பொறுப்புகளையும் தேவன் கொடுத்த கடமைகளையும் சரியாக செய்து கொண்டு வாழ்ந்துட்டு இருக்கும் போது பிசாசு ஏவாளை வஞ்சிக்கிறான் என்று பார்க்கிறோம்.

 ஆதியாகமம் 3 மிகத்தெளிவாக மனுஷனுடைய பிரச்சனை என்ன?

  • ஆதியாகமம் 3:8 – இந்த உலகத்துக்குள்ளாக பாவம் எப்படி நுழைந்தது, ஏவாளை சர்ப்பமானது வஞ்சித்தது தேவன் கொடுத்த கட்டளையை மீற செய்தது.
  • ஆதியாகமம் 3:5-6 தேவன் சொல்லி இருக்கிறார் அந்த கனியை சாப்பிடும் நாளிலே நீ சாகவே சாவாய் பிசாசு தேவனுடைய வார்த்தையை திரித்து பேசி ஏவாளை வஞ்சித்தது. தேவனுக்கு எதிராக ஏவாளை திருப்பி அந்த கனியை புசிக்க செய்து  தன்னுடைய புருஷனாகிய ஆதாமுக்கும் கொடுத்தாள்  ஆதாம் சாப்பிட்ட உடனே பாவம் உலகத்திற்குள்ளே வந்தது.

ஏன் ஆதாம் சாப்பிட்ட உடனே பாவம்?

ஆதியாகமம் 2 தேவன் ஆணை தலைவனாக ஏற்படுத்துகிறார்; தேவன் ஆணை செயல்படுத்தும் பொறுப்பை உடையவனாக ஏற்படுத்துகிறார்;தேவன் ஆணையும் பெண்ணையும் சமமாக  படைத்திருக்கிறார். ஆனால், அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கும் (செயற்பாட்டு பொறுப்பை ) ஆணுக்கு கொடுக்கிறார்.ஆதாம் பழத்தை சாப்பிட்டான் தேவன் ஏற்படுத்தின உடன்படிக்கையை மீறினான்.(ரோமர் 5: 12-17; பிரசங்கி 7:29). மனுஷன் பிசாசினுடைய சத்தத்தை கேட்டு பிசாசினுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தேவனை எதிர்க்க ஆரம்பித்து அவனால் இந்த முழு மனுக்குலமும் பாவத்திற்குள்ளாக விழுந்தது. ஆதாமுடைய வம்சத்தில் பிறந்த எல்லா மனிதனும் ஆதாமை போல் பாவத்தை சுதந்தரித்து கொண்டு வாழ்கிறார்கள். பாவத்தில் மனித நிலை மிகவும் கொடூரமானது.  

  • தேவனிடத்திலிருந்து பிரிவு
  • தேவனுக்கு பகைஞராகி இருக்கிறோம்
  • ஆதாமுடைய வம்சத்தில் பிறந்த நீங்களும் நானும் பிசாசின் பிள்ளைகளாக மாறினோம்
  • பாவத்துக்கு அடிமைகளாக மாறினோம்
  • மரணம் வந்தது
  • தேவன் நித்தியமானவர் என்பதால் தேவனுடைய நித்திய கோபம் உரியவர்களானோம்
  • நியாயபிரமாணத்தினுடைய சாபம் சுதந்தரித்தோம்
  •  பாவத்தை மட்டுமே விரும்புகிற நிலை
  • படைத்தவரை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்; படைத்தவருடைய குணாதிசயத்தை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்
  • இச்சையின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
  • அறியாமையை பெற்றுக்கொண்டோம் .

ஆதாமுடைய பாவத்தை சுதந்தரித்து கொண்டதனால் இந்த உலகத்தில் யாரும் நல்லவர்கள் இல்லை இந்த உலகத்தில இருக்கிற எல்லா மனிதனுடைய இருதயத்தில்  இருக்கும் எல்லா எண்ணமும் அவனுடைய சிந்தனைகளும் அதன் தோற்றமும் எல்லாம் தேவனுக்கு விரோதமாக மட்டும் தான் இருக்கும்.தேவன் இருதயத்தை கண்டிருக்கிறார் ஆதியாகமம் 6:5. எரேமியா 17:9ல்  என்னுடைய அனுதின பாவ வாழ்க்கையில் என்னுடைய இருதயத்தில் உள்ள பாவத்தின் ஆழத்தை நம்மால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. அதை அறியத்தக்கவன் யார் என்று சொல்லும்போது என்னுடைய இருதயத்தினுடைய (செயல், எண்ணம்,வார்த்தை) ஆழத்தில் இருக்கிறந்த பாவத்தினுடைய அளவை கொள்ள முடியாது. ரோமர் 7:18 மனுஷனுடைய வாழ்க்கையில நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை என்னுடைய வாழ்க்கையில் பாவம் இருக்கறதுனால என்னுடைய வாழ்க்கையில் நன்மை செய்யலாம் என்று  ஆசைப்பட்டாலும்  நன்மை செய்ய முடியாது தீமையை மட்டும்தான் செய்து கொண்டிருக்க முடியும். இதுதான் பாவத்தின் ஆளுகை இதான் பாவத்தின்  அடிமைத்தனம்.

தேவனால் கொடுக்கப்பட்ட ஒரு கிரியையை மனிதன் செய்யமுடியாததால் இனி  ஒருபோதும் மனிதன் தன் சுயகிரியையின் மூலம் தேவனிடத்தில் சேரமுடியாது. அதனால், இரட்சிப்பு கிரியையினால் கிடையாது என்பதை நாம் மனிதனுடைய பாவ வீழ்ச்சியில் இருந்து கற்றுக்கொள்ளலாம். 

ஆதாம் பழத்தை சாப்பிட்ட பின்பு தான் பாவம் செய்ததை உணர்ந்தான்; இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது ;அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து அத்தி இலையை வைத்து ஆடைகளை  உண்டு பண்ணினார்கள் (ரோமர் 5: 12-17; பிரசங்கி 7:29) தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற ஒரு எண்ணத்துக்குள்ளாக போனார்கள்.  இன்றைக்கும்  நம்முடைய இருதயத்தில்   நான் என்னை காப்பாத்திக்குவேன் என்ற எண்ணம் இருக்கிறது. ஆதியாகமம் 3:8-9 இவ்வளவு மோசமான பாவத்தை பெற்று தன்னால் எதுவும் செய்ய முடியாத ஒரு நிலையில் தேவன் கொடுத்த அந்த கிரியையை செய்ய முடியாமல் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை கேட்டு தேவனை விட்டு ஓடிப்போய் ஒளிந்து கொண்டு நின்று கொண்டிருக்கிறான். இன்றைக்கும்  நம்முடைய இருதயத்தில்   தேவனுடைய கோபத்திலிருந்து எப்படியாவது தப்பித்து கொள்வேன்  என்ற எண்ணம் இருக்கிறது. 

இந்த நிலையிலிருந்து காப்பாற்ற தேவனே திட்டத்தை கொண்டிருந்தார். தேவன் செயல்படுகிறார் ;தேவன் இங்கே ஈடுபடுகிறார் என்று பார்க்கிறோம்; தேவனோ இரக்கத்தில் ஐஸ்வரியம் உள்ளவராய் தன்னுடைய மகா மேன்மையான கிருபையை  வெளிப்படுத்துகிறார். அது தான் உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். ஆதியாகமம் 3:15

தேவனுடைய முதல் வாக்குத்தத்தம். ஆதியாகமம் 3:15 கிருபையின் வாக்குத்தத்தம்.

    யார் முதல் சுவிசேஷத்தை அறிவிக்கிறார்?

பிதாவாகிய தேவன் சுவிசேஷத்தை தன்னுடைய நற்செய்தியை தன்னுடைய படைப்புகளுக்கு தேவன் அறிவிக்கிறார். தேவன் அறிவிக்காமல் இந்த சுவிசேஷம் மனுகுலத்திற்கு வராது. தேவன் வெளிப்படுத்தாமல் எந்தவிதமான நற்செய்தியும் தேவனிடத்திலிருந்து நமக்கு கிடையாது.

  1. உனக்கும் ஸ்திரீக்கும் –  முதல்  வார்த்தை. இது கிருபையின் வாக்குத்தத்தம் உனக்கும் ஸ்திரீக்கும் என்று பார்க்கும்போது அங்கே பிசாசுக்கும் ஸ்திரீக்கும் என்று சொல்லுகிறார் .
  2. பிசாசுக்கும் ஸ்திரீக்கும் பகையை உண்டாக்குவேன் முதல் முதலாக கொடுக்கப்படுகிற ஒரு வாக்குத்தத்தம் அது ஏவாளுக்கு கிருபையான மன்னிப்பை கொடுக்கிறது. ஏவாள் பாவம் செய்தால்; ஏவாள் வீழ்ந்து போனால்;ஏவாள் தான் பிசாசினுடைய பேச்சை கேட்டால் அங்க தேவன் கிருபையாய் ஏவாளை மன்னிக்கிறார் அங்க பிரித்தெடுக்கிறார் என்பதை பார்க்கிறோம்  மன்னிப்பு கொடுக்கப்பட்டது.

பகை உண்டாக்குவேன் – பகை என்ற வார்த்தையை பார்க்கும்போது அந்த பயன்படுத்தப்பட்ட வார்த்தை நீடித்த காலமாய் தொடர்ச்சியாக இருக்கப்போகிற பகை. யோவான் 8: 44 நீங்களும் உங்கள் பிதாவாகிய பிசாசும் ; வெளிப்படுத்தல் 2:9 ஆதியாகமத்தில் சொல்லப்பட்ட அந்த சர்ப்பம் பிசாசானவன் என்று சொல்லப்படுகிறது. பகையை தேவன் ஏற்படுத்தி இருக்கிறார். சுவிசேஷத்தினுடைய சாராம்சம் இது கிருபையினுடைய வெளிப்பாடு மன்னிப்பு. சுவிசேஷம் வல்லமையாய் வாழ்க்கையில் செயல்படும்போது அது முதலாவது பாவத்திற்கு (தேவனை கனவீனப்படுத்தும் எந்த செயலுக்கும் ) எதிரான பகையை கொடுக்கும். தேவன் இன்றும் நம்முடைய வாழ்க்கையில் பாவத்தை வெறுக்க செய்கிறார்.பாவத்தை பகைக்காத எந்த மனுஷனும் பிசாசினுடைய அடிமைத்தனத்திற்கு கீழாக இருக்கிறான். ஆதாமே நீ எங்கே இருக்கிறாய் என்று கேட்டும் வரை ஆதாம் பாவத்தை நேசித்து கொண்டு கொண்டிருந்தான்.

பாவத்தை நேசிக்கும் மனுஷன் தேவனுக்கு விரோதமானவன் அவன் மேல் நித்தியமான கோபம் இருக்கும்

உலகில் இரண்டு விதமான மக்கள் இருக்க போகிறார்கள்  பிசாசின் பிள்ளைகள் இன்னொன்னு ஸ்திரீயின் வித்து என்று பார்ப்போம். தேவன் தனக்கென்று ஜனங்களை தெரிந்து கொண்டு அவர்களை தேவன் ஆசீர்வதித்து அந்த சந்ததியில் தேவன் ஸ்திரீயின் வித்தை கொண்டு வருகிறார். பிசாசுக்கு எதிராக  நிற்கிறவர்கள் தேவனுடைய பிள்ளைகள்

அவர் உன் தலையை நசுக்குவார் 

அவர்  என்று பார்க்கும்போது- அவர் ஸ்திரீயின் வித்து என்று பார்க்கிறோம்-அவர்  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. ஆதாம் ஏவாள் பாவம் செய்தவுடனே  தேவன் மீட்பை உண்டு பண்ணவில்லை ஆதாம் ஏவாள் பாவம் செய்வதற்கு முன்பாக தேவன் தன்னுடைய மீட்பின் திட்டத்தை (தேவனுடைய நித்திய ஆலோசனை) நிறைவு செய்திருக்கிறார். மீட்பின் திட்டத்தை முடித்து வைத்திருக்கிறார். வெளிப்படுத்தல் 13:8-வசனத்தில் பார்த்தீங்கன்னா உலக தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் என்று சொல்லப்படுகிறது.

கலாத்தியர் 4: 5 மற்றும் எபேசியர் 1:4 இணைத்து வாசிக்கும்போது  தம்முடைய குமாரனை தேவன் பிதாவாகிய தேவன் அனுப்பினார். இரட்சிப்பதற்காக தேவன் தன்னுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்தில் அனுப்பவேண்டும் கிறிஸ்து அதற்காக பிறந்தார்.  நித்தியத்தில் திரித்துவ தேவனுடைய ஆலோசனையில்  நிறைவேற்றப்பட்டு அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக;  அந்த திட்டம் பாவியாகிய மனுஷனை  ஸ்திரீயின் வித்தை அந்த வித்தில்  இருக்கிற ஒவ்வொரு மனுஷனையும் காப்பாற்றுவதற்காக தேவன் தெரிந்து கொண்ட ஒவ்வொரு மனுஷனையும் பாவத்திலிருந்து விடுதலையாக்க வேண்டும் என்பதற்காக தேவன் செய்திருக்கிறார் அவர் தன்னுடைய குமாரனை அனுப்பி இருக்கிறார்.

கிறிஸ்துமஸ் என்பது ஏதோ ஒரு மனுஷன் வந்து வாழ்ந்து தன்னுடைய போதனையால் அநேக மனிதர்களை கவர்ந்து யூதர்கள் மத்தியில் ஒரு பெரிய புரட்சி செய்து அந்த புரட்சி பிடிக்காமல் யூதர்கள் அவருடைய சிலுவையில் அறைந்தார்கள் என்ற புனித மனிதனுடைய வாழ்க்கையை கொண்டாடுவது அல்லகிறிஸ்துமஸ் என்பது பிதாவாகிய தேவன் தன்னுடைய குமாரனை உலகத்திற்கு பாவத்தை மன்னிப்பதற்காக அனுப்பினார்.

எபிரேயர் 1ல் அவர் பிதாவினுடைய தற்சொரூபம் பிதாவினுடைய வெளிப்பாடு; மகிமையின் பிரகாசமும் அவருடைய தன்மையின் சொரூபமாய் இயேசு கிறிஸ்து பிதாவினுடைய  பிதாவை பிரதிபலிக்கிறார். அவர்தான் பாவத்தை மன்னிக்கிறார், மன்னித்து உன்னதத்தில் உள்ள மகத்துவமானவருடைய வலது பாசலே உட்கார்ந்தார்;  தேவதூதர்களை காட்டிலும் எவ்வளவு விசேஷத்த நாமத்தை பெற்றிருக்கிறார்(எபிரேயர் 1:4) . நீர் என்னுடைய குமாரன் இன்று நான் உம்மை ஜெனிப்பித்தேன்(எபிரேயர் 1:5) . முதற்பேறானவரை  உலகத்தில் பிரவேசிக்க செய்தபோது தேவதூதர் யாவரும் அவரை தொழுது கொள்ளவார்கள்.

இஸ்ரவேலே கேள் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் இப்ப பிதாவாகிய தேவனை தொழுது கொள்ள வேண்டும் என்ற சத்தியத்தின் அடிப்படையிலே இங்க இந்த பிதாவாகிய தேவன் சொல்லுகிறார்  குமாரனை தொழுது கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார் இது இயேசு கிறிஸ்துவை தேவன்  தெய்வீகமானவர்  என்றும், இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாய் இருக்கிறார் என்று பிதாவாகிய தேவனே சாட்சிக்கொடுக்கிறார் என்பதை கவனியுங்கள்.

உன் தலையை நசுக்குவார் 

எப்படி பிசாசினுடைய தலையை நசுக்கினார்?

அவர் சிலுவையிலே பிசாசினுடைய தலையை நசுக்குகிறார். மரணத்துக்கு அதிகாரி பிசாசானவனை தனது மரணத்தினாலே அழிக்கும்படி … ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத் தனத்துக்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கு (எபிரேயர் 2:14-15). யோவான் 3:8 – பிசாசின் கிரியை அழிக்கவே அவர் வந்தார். தேவன் சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்து அந்த வெற்றி அது மன்னிப்பின் வெற்றி;  உயிர்த்தெழுதல் மூலம் வெற்றி  நிரூபிக்கப்பட்டு நிச்சயிக்கப்பட்டது. இந்த முழுமையான வெற்றி அவருடைய நியாயத் தீர்ப்பு கிடைக்க போகிறது. அவரே நமக்கு மிகப்பெரிய விசுவாசம் தேவனிடத்தில் சேரணும்னா பிசாசின் தலையை நசுக்கி இருக்க வேண்டும் ஒருவர் அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டும்தான் அவர் அதற்காக தான் இந்த உலகத்தில் வந்தார்.

நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்

விசுவாசிகளின் போராட்டத்தை குறிக்கிறது.  ஆதியாகமம் 3:15 இந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசிபவர்களுக்கு “ நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் –  இரட்சிக்கப்பட்ட மனுஷனுடைய தொடர்ச்சியான ஆவிக்குரிய போராட்டத்தை குறித்து பேசுகிறது. ஒருபோதும் பிசாசானவனால் தேவனுடைய பிள்ளையை ஒருபோதும் நரகத்துக்கு நேராக இழுத்து கொண்டு போக முடியாது.  உலகத்தில் உங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு பாவ போராட்டம் இருக்கிறது  ஆவிக்குரிய போராட்டம் இருக்கிறது  எபேசியர் 10:18 தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை தரித்துகொள்ளுங்கள்; தேவனை சார்ந்திருங்கள் என்று சொல்லுகிறார். 1 பேதுரு 5:8-9 அவன் கெட்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாம் என்று வகை தேடிகொண்டிருக்கிறான். அதனால்தான் இயேசு மத்தேயு நான் என் சபையை கட்டுவேன் என்று சொல்லி பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. ஆதாம் முதல் ஏவாலிருந்து நோவாவிலிருந்து ஆபிரகாம் ஈசாக்கு, யாக்கோபு, மோசே, இஸ்ரவேல் புத்திரர்கள் யோசுவா, காலேப் போன்ற தாவீது, சாலமோன் போன்ற எல்லாரும் இந்த சுவிசேஷத்தை விசுவாசித்துதான் வாழ்ந்தார்கள். (ரோமர் 1 – தேவனுடைய சுவிசேஷம் ;  எபிரேயர் 11 – விசுவாச பட்டியலில்  இந்த சுவிசேஷத்தை கேட்டார்கள். சுவிசேஷத்தை பிதாவாகிய தேவன் ஆரம்பத்திலே வெளிப்படுத்தி இருக்கிறார். 

தேவன் அங்க இருக்கிற மிகப்பெரிய ஒரு ஆசீர்வாதம் ஒரு பெரிய கிருபை என்னன்னு பார்த்தீங்கன்னா ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மன்னிப்பை உறுதி செய்தது மட்டுமல்லாமல் இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார் (ஆதியாகமம் 3:21) ,  (கலாத்தியர் 4:5- நம்மை பிள்ளைகள் ஆகும்படி )

பிசாசின் பிள்ளைகளுக்கு நித்தியமான அழிவு உண்டு; அது அக்கினியின் கடல் ;அது நித்திய நித்தியமான அக்கினியின் கடல்; அங்க அழிவே இல்லை ; எல்லா பாவமும் ஞாபகப்படுத்தப்படும் தேவனுடைய நித்திய கோபம் உங்கள் மீது ஊற்றப்பட்டு கொண்டே இருக்கும் பாவம்; அந்த நித்திய தேவனுக்கு விரோதமானது ; ஆகவே தேவனுடைய கோபம் ,தேவனுடைய தண்டனை நித்திய நித்தியமாக தான் இருக்கும்

மனந்திரும்பி இயேசுவை விசுவாசியுங்கள் !

 

Read More
10 Apr
0

1689 விசுவாச அறிக்கையின் வரலாற்று பிண்ணனி மற்றும் அதன் பயன்கள்

முன்னுரை

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த காலாண்டு இதழில் நாம் தொடர்ச்சியாக விசுவாச அறிக்கையை குறித்து படித்து வருகிறோம். கடந்த இதழிலும் கூட நாம் விசுவாச அறிக்கையின் தேவையைபற்றி படித்தோம். விசுவாச அறிக்கையின் தேவையைப் புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், வேதத்தின் சில அடிப்படை சாராம்சங்களை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதில் 1. வேதம் தொடர் வரலாற்று நிகழ்வுகளை கொண்டுள்ளது என்றும் 2. வேதம், மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை கூறுகிறது என்ற அடிப்படை சாராம்சங்களை கொண்டுள்ளது என்பதை படித்து, விசுவாச அறிக்கை வேதத்தில் உள்ளதா? என்ற கேள்விக்கு வேத ஆதாரங்களுடன் விசுவாச அறிக்கைக்கு சான்றழித்தோம்.

இன்றைய நாட்களில் கிறிஸ்தவ சபைகள் அநேக வித்தியாசமான போதனைகளால் நிறைந்திருக்கிறது, எல்லா சபைகளும் வேதத்தையும், இயேசு கிறிஸ்துவையும் குறித்து விசுவாசம் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் நம்முடைய கேள்வி வேதத்தையும் இயேசுவையும் குறித்து என்னவிதமான விசுவாசம் கொண்டிருக்கிறார்கள்? என்பதே. இதேபோலத்தான் எல்லா சத்தியங்களையும் வேதம் கூறும் வகையில் விசுவாசிக்கிறோமா என்பதை நிதானிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்காகவே நம் முன்னோர்கள் வேத அடிப்படையிலான விசுவாச அறிக்கையை தொகுத்து சபைக்கு வழங்கினார்கள்.

சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள் வேதத்தோடு மிக நெருங்கிய தொடர்பில் இருக்கிற 1689 லண்டன் பாப்திஸ்து விசுவாச அறிக்கையை பின்பற்றுகிறோம். இந்த 1689 விசுவாச அறிக்கையின் வரலாற்று பிண்ணனியை பின்வரும் பத்தியில் நாம் படிக்கலாம்.

வரலாற்று பின்னணி

பரிசுத்த வேதாகமத்தின் வேத சத்தியங்களை முறையாகத் தொகுத்து வழங்குகிறது 1689 விசுவாச அறிக்கை. 1677-ம் ஆண்டில் மூப்பர்களையும், விசுவாசிகளையும் கொண்ட இங்கிலாந்தில் இருந்த பல சபைகள் இணைந்து இதை முதலில் வெளியிட்டன. 1644-1648 இடைப்பட்ட காலங்களில் இங்கிலாந்தையும், ஸ்காட்லாந்தையும் சேர்ந்த பியூரிட்டன் பெரியோர்கள் வெஸ்ட்மினிஸ்டர் விசுவாச அறிக்கையைத் ( Westminister Confession of Faith ) தொகுத்து வெளியிட்டனர். அதே வேளை காங்ரிகேசனல் சபை (Congregationalists) அமைப்பைத் தழுவியவர்களும் சவோய் விசுவாச அறிக்கையை (Savoy Declaration of Faith and Order) 1658 -வெளியிட்டனர். வெஸ்ட்மினிஸ்டர் விசுவாச அறிக்கை பிரஸ்பிடீரியன் சபை அமைப்பு முறையின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தது. திருச்சபையின் தன்மை, திருமுழுக்கு, திருவிருந்து, சபை அரசமைப்பு போன்ற விசயங்களில் அவர்களிலிருந்து வேறுபட்ட கோட்பாடுகளை பாப்திஸ்து விசுவாசிகள் கொண்டிருந்தனர். 1644-ல் பாப்திஸ்துகள் ஏற்கனவே ஒரு சுருக்கமான விசுவாச அறிக்கையை எழுதி வைத்திருந்தனர். காலங்கூடி வந்தபோது அவர்கள் வெஸ்ட்மினிஸ்டர் விசுவாச அறிக்கையையும், சவோய் விசுவாச அறிக்கையையும் தழுவி, பாப்திஸ்து கோட்பாடுகளின் அடிப்படையில் 1677-ல் ஒரு விசுவாச அறிக்கையை எழுதினர். இம்மூன்று விசுவாச அறிக்கைகளும் சீர்திருத்தக் கோட்பாடுகளைப் பின்பற்றியதால் பல விதங்களில் ஒன்றையொன்று ஒத்திருந்தன. கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ சபைகளும் அக்காலத்தில் அரசால் துன்புறுத்தப்பட்டதால் இவ்விசுவாச அறிக்கையை பாப்திஸ்துகளால் உடனடியாக வெளியிட முடியவில்லை. 1689-ல் அரசின் துன்புறுத்தல் நின்று வழிபாட்டு சுதந்திரம் கிடைத்தபோது 37 பாப்திஸ்து போதகர்கள் இணைந்து இவ்விசுவாச அறிக்கையை வெளியிட்டனர். அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு இங்கிலாந்திலும், வேல்ஸ் தேசத்திலும் பார்டிகுலர் அல்லது கல்வினிச பாப்திஸ்து சபைகளின் (Particular or Calvinistic) விசுவாச அறிக்கையாக இதுவே இருந்தது. இது லண்டன் விசுவாச அறிக்கை என்றும் அழைக்கப்பட்டது. 1744-ல் வட அமெரிக்காவில் இருந்த கல்வினிச பாப்திஸ்து சபைகள் இதை அங்கீகரித்து ஏற்று பிலடெல்பியா விசுவாச அறிக்கை (Philadelphia Confession of Faith) என்ற பெயரில் பயன்படுத்தினர். லண்டனில் நீயூ பார்க் சாலை சபையில் போதகராக இருந்த சார்லஸ் ஹெடன் ஸ்பர்ஜன் 1853ம் ஆண்டில் தனது சபையிலும் தம்மைச் சார்ந்திருந்த சபைகளிலும் அஸ்திவாரத்தை உறுதிப்படுத்தி வேத சத்தியங்களில் வழி நடத்த 1689 விசுவாச அறிக்கையை மறுபடியும் வெளியிட்டார். இதற்கு எழுதிய முன்னுரையில் ஸ்பர்ஜன், “உங்கள் விசுவாசத்தைக் குறித்து வெட்கப்படாதீர்கள். சத்தியத்தின் காரணமாக நமக்கு ஒரு கொள்கைச் சின்னம் தேவைப்படுகிறது. மகத்துவமான நற்செய்தியின் நோக்கத்தை நிறைவேற்றத் துணைபுரிய, அதன் முக்கிய கோட்பாடுகளுக்கு இச்சிறுநூல் தெளிவான சாட்சியாக விளங்கும்” என்று எழுதினார். இது போதிக்கும் வேத சத்தியங்களை விசுவாசிக்காத தெளிந்த மனச்சாட்சியுடன் எவரும் சபையில் அங்கத்தவராக இருக்க முடியாது என்றும் சொன்னார். திருச்சபை சீர்திருத்தத்திற்கு சீர்திருத்தக் கோட்பாடுகளின் அவசியத்தை உணர்ந்த சபைகள் இதை ஏற்றுப்பயன்படுத்தின. மூன்னூறு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டிருந்தபோதும் இவ்விசுவாச அறிக்கை இன்று உலகெங்கும் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு சீர்திருத்த பாப்திஸ்து சபைகளின் விசுவாச அறிக்கையாக விளங்குகிறது.

விசுவாச அறிக்கையின் பயன்கள்

  1. சபைப்போதகர்களும், சபை அங்கத்தவர்களும் வேதத்தை விட்டு விலகிப்போகாதபடித் தம்மைக் காத்துக் கொள்ள இது உதவுகிறது. இவ்விசுவாச அறிக்கையை பயன்படுத்தும் சபைகளில் இதனை ஏற்றுக்கொள்ளாத போதகர்களுக்கு இடமில்லை, அங்கத்தவர்களுக்கும் இடமில்லை. “தனக்குத் தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த இராஜ்யமும் பாழாய்ப்போகும்” என்று இயேசு சொன்னார். ஆர்மீனியனிசப் போதனைகள், பெலேஜியனீசப் போதனைகள், கெரீஸ்மெட்டிக் போதனைகள் என்று எல்லாவற்றையும் விசுவாசிக்கும் போதகர்களையும் அங்கத்தவர்களையும் உள்ளடக்கிய ஒரு சபை எப்படி ஒரே சத்தியத்தில் கூடி ஜெபிக்கவோ, ஆராதிக்கவோ, ஊழியம் செய்யவோ முடியும்? ஆகவே, விசுவாச அறிக்கையை முறையாகப் பின்பற்றும் சபைகளில் கலப்படமான இறையியலுக்கு இடமிருக்காது.

    2. ஒரு சபை தனது போதக ஊழியத்தை இதன் அடிப்படையில் ஆராய்ந்து தன்னையும், தனது போதகர்களையும் காத்துக்கொள்ள முடியும். போதகர்கள் (வேதத்தில்) உண்மையுள்ள மனிதர்களாக இருக்க வேண்டும் என்று பவுல் (2 தீமோத்தேயு 2:2) சொல்கிறார். அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைக் கொண்டவர்களாகவும், எதிர் பேசுகிறவர்களைக் கண்டனம் செய்ய வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் (தீத்து 1:8) என்றும் சொல்லுகிறார். வேதாகமக் கல்லூரிகள் இத்தகைய மனிதர்களை உருவாக்குவதை எதிர்பார்க்க முடியாத இந்நாட்களில் விசுவாச அறிக்கையைப் பயன்படுத்தி சபை தன் போதகர்கள் சத்தியத்தில் உண்மையுள்ளவர்களாகவும் அதை மட்டும் போதிக்கிறவர்களாகவும் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள முடியும்.

    3. போலிப்போதனைகள் சபையை அணுகும்போது அவற்றை வேதரீதியில் ஆராய்ந்து அவற்றில் இருந்து சபையைப் பாதுகாத்துக் கொள்ள விசுவாச அறிக்கை துணை செய்கிறது. சபையில் சத்தியத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றபோது அவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும் விசுவாச அறிக்கை துணைசெய்கிறது.

    4. விசுவாச அறிக்கையைப் பயன்படுத்தி வேத சத்தியங்களை முறையாகப் போதித்து சபை மக்களை சத்தியத்தில் வளர்க்க முடியும். வினா விடைப் போதனையும் (Catechism) இதே வகையில் உதவும்.

    5. சபையில் ஒழுங்கை நிலைநாட்டி தேவையானபோது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விசுவாச அறிக்கை துணை செய்கிறது. சத்தியத்தை விட்டு விலகிப்போகிறவர்களை இனங்கண்டு அவர்களைத் திருத்தவும், சபையைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

    6. சத்தியத்தின் அடிப்படையில் அமையாத சபைக்கூட்டும். ஐக்கியமும், ஆத்மீக வளர்ச்சிக்கு உதவாது. விசுவாச அறிக்கை நாம் எதை விசுவாசிக்கிறோம் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளவும், அவற்றை விசுவாசிப்பவர்களோடு சேர்ந்து நாம் ஐக்கியத்தில் வரவும். வளரவும் துணை புரியும்.

7. இறுதியாக நமது சபைகளுக்கு வரலாற்று ரீதியிலான ஒரு தொடர்ச்சியை (Historical Continuity) விசுவாச                   அறிக்கை அளிக்கிறது. நாம் காளான்கள் போல இன்று முளைத்து நாளை அழியப்போகிறவர்கள் அல்ல. நமக்கு ஒரு வரலாறு இருக்கிறது, என்ற ஒரு நம்பிக்கையையும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு புத்துணர்ச்சியையும் விசுவாச அறிக்கை அளிக்கிறது. நமது சீர்திருத்தத் தந்தையரும், பியூரிட்டன் பெரியவர்களும் வேதம் வெளிப்படுத்தும் இச்சத்தியங்களையே நம்பிப்போதித்து சபையை வளர்த்துள்ளார்கள், வளர்ச்சியும் கண்டார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து ஊக்கத்தோடு ஊழியம் செய்ய விசுவாச அறிக்கை உதவும். நமது சந்ததியினருக்கு நமது பிதாக்களின் விசுவாசத்தை விட்டுச் செல்லும் பாக்கியத்தை இது நமக்கு அளிக்கிறது.

முடிவுரை

இன்றைக்கு உலகத்தில் எல்லா காரியங்களும் மாறிக்கொண்டிருக்கிறது. மாற்றம் நிறைந்த உலகத்திற்கு மாறாத சத்தியம் அவசியம், அந்த மாறாத சத்தியத்தை பிடித்துக் கொண்டு விசுவாசத்தில் வாழ தேவன் கிருபை செய்வாராக. ஆமென்!

Read More
25 Mar
0

ஏன் விசுவாச அறிக்கை திருச்சபைகளுக்கு தேவை?

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். சத்திய வழி என்கிற இந்த காலாண்டு இதழில் நாம் தொடர்ச்சியாக விசுவாச அறிக்கையை குறித்து படித்துவருகிறோம். கடந்த இதழில் நாம் விசுவாச அறிக்கை என்றால் என்ன? மற்றும் நாம் விசுவாச அறிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான நான்கு அடிப்படை காரணங்களை பார்த்தோம். விசுவாச அறிக்கை என்பது முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இறையியல் புத்தகம். இறையியல் மிக அவசியமானது. ஏனென்றால், வேதாகமம் அடிப்படையில் ஒரு இறையியல் புத்தகம், இறையியல் மூலமாகத்தான் தேவனுடைய பிள்ளைகள் விசுவாசத்தில் வளருகிறார்கள் (அப்போஸ்தலர் 2:42, 1பேதுரு 2:2). விசுவாச அறிக்கையை நாம் ஏற்றுக்கொள்வதற்கான காரணங்களில் 1. வேதம் மட்டுமே தெய்வீக அதிகாரத்தை பெற்றிருக்கிறது. 2. வேதமே விசுவாச அறிக்கையின்மேல் அதிகாரம் கொண்டுள்ளது. 3. விசுவாச அறிக்கை ஒரு காலமும் வேதத்தின் போதுமானத் தன்மையை குறைத்து மதிப்பிடவில்லை 4. எல்லா விசுவாச அறிக்கையையும் நிராகரிப்பது சுய முரண்பாடாய் காணப்படுகிறது என்று படித்தோம்.

இந்த இதழிலும் கூட நாம், ஏன் விசுவாச அறிக்கை திருச்சபைகளுக்கு தேவை? என்பதைக் குறித்துப் பார்க்கயிருக்கிறோம். மிகக் குறிப்பாக, விசுவாச அறிக்கை ஏன் அவசியத் தேவை என்பதை தெரிந்தால் தான் அதை பயன்படுத்த முடியும். தேவையே இல்லாத ஒன்றை ஒருபோதும் பயன்படுத்த இயலாது. ஒரு குறிப்பிட்ட பொருளின் தேவையை அறியும்போது தான் அதை சரியாக பயன்படுத்த முடியும்.

விசுவாச அறிக்கையின் தேவையை சரியாக புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், அதற்கு முன்பாக வேதத்தின் சில அடிப்படை சாராம்சங்களை சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும். வேதம் இரண்டு விதமான காரியங்களை உள்ளடக்கியிருக்கிறது. முதலாவது, தொடர் வரலாற்று நிகழ்வுகளை கொண்டுள்ளது. இரண்டாவதாக, மனிதன் எப்படி வாழ வேண்டும் என்கிற நெறிமுறைகளையும் கொண்டுள்ளது.

 

  1. வேதாகமம் தொடர் வரலாற்று நிகழ்வுகளை கொண்டுள்ளது:

மனிதனுடைய ஆத்தும இரட்சிப்பிற்கு வேதத்தின் தொடர் வரலாற்று நிகழ்வுகளை அறிவது அவசியமானது. வேதத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வும் மனிதனுடைய இரட்சிப்பு நிறைவேறுவதற்காக நிகழ்ந்த நிகழ்வாக இருக்கிறது. தேவன் இந்ந உலகத்தை செம்மையானவையாக படைத்து, ஆணும் பெண்ணுமாக மனிதர்களை படைத்து ஏதேன் தோட்டத்தில் வைத்தார். அவர்கள் கைக்கொள்ளும்படியாக கட்டளைகளை விதித்தார். அவர்களோ அவைகளை கைக்கொள்ளாமல் தேவனோடு உள்ள உறவை இழந்து, பாவம் செய்து, தேவனுக்கு முன்பாக குற்றவாளியானார்கள். இப்படி தேவனுடைய கோபத்தை சுமக்கிற மனிதனுக்கு விடுதலையை தேவனே ஏற்படுத்தி இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். ஆதியாகமம் 3ஆம் அதிகாரத்திற்குப்பின் வேதாகமத்தில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்வும் இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வர வழிவகுக்கிறது. இதற்காக தேவன் ஒரு சந்ததியை தேர்வு செய்து, அவர்களோடு உடன்படிக்கையை ஏற்படுத்தி அந்த சந்ததி எப்படியாக செழிக்கிறது, தேவனோடு எப்படிப்பட்ட நிலையில் இருந்தது என்பதைத்தான் நாம் பழைய ஏற்பாடு முழுவதுமாக வாசிக்கிறோம். இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த அன்று எம்மாவு ஊருக்கு போகிற இரண்டு சீஷர்களிடம் என்ன சொன்னார்? பழைய ஏற்பாட்டின் அனைத்து நிகழ்வுகளும் இயேசு கிறிஸ்துவை குறித்து பேசுகிறது என்று விளக்கப்படுத்தினார். இயேசுவே தன்னைப் பற்றி கூறியுள்ள வாக்குத்தத்தங்கள், தீர்க்கதரிசனங்கள், பலிகள் எப்படி இயேசு கிறிஸ்துவில் அடங்கியிருக்கிறது என்பதை எடுத்துரைத்தார். அதேபோல இயேசுவின் பாடு, மரணம், உயிர்தெழுதலும் பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவையே பழைய ஏற்பாடு முழுவதும் மையமாக வைத்து எழுதப்பட்டது என்று விளக்கப்படுத்தினார்.

பழைய ஏற்பாடு காலவரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை வாசிக்கும் போது தேவன் எப்படி ஒவ்வொரு காலங்களிலும் செயல்பட்டிருக்கிறார். அவருடைய நோக்கம் எப்படிப்பட்டதாயிருந்தது என்று வாசிக்கிறோம். வரலாற்று பகுதியை வாசிக்கும் போது தேவன் வரலாற்றின் நிகழ்வுகளிலும் எப்படி செயல்பட்டிருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். இன்று அநேக நவீன வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றில் தேவனுடைய செயலை நிராகரிக்கிறார்கள். புதிய ஏற்பாட்டை வாசிக்கும்போது, நாம் இயேசு கிறிஸ்து நமக்காக கடந்த காலத்தில் மீட்பின் பணியை எப்படி செய்து முடித்தார் என்பதை திரும்பி பார்த்து, அவருடைய இரண்டாம் வருகைக்காக காத்திருக்கிறோம் என்கிற கால நிகழ்வுகளை புரிந்துக்கொள்ள வேண்டும். இப்படியாக வேதத்தின் காலவரிசையின் அடிப்படையில் படிக்கும்போது. வேதம் முழுவதும் இயேசு கிறிஸ்து எப்படி மையமாக இருக்கிறார் என்பதை உணர முடியும்.

 

  1. வேதம்: மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதையும் கூறுகிறது:

வேதாகமம் தேவனுடைய பரிசுத்த நீதியை வெளிப்படுத்தி, பாவியான மனிதன் எவ்வாறு தன்னை படைத்த தேவனுக்கு கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்று கூறுகிறது. வேதாகமம் தேவனுடைய பரிசுத்தத்தால் நிறைந்திருக்கிறது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். தேவனுக்கு ஏற்ற வாழ்வு வாழ வேண்டும் என்பதே வேதத்தின் அடிப்படையான தாற்பரியமாக இருக்கிறது. வேதம், மனிதன் எப்படி வாழ வேண்டுமென்று போதிக்கிறது என்றால், மனிதன் முதலாவது சரியான விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும். சரியான விசுவாசம் மட்டுமே மனிதனை தேவனுடைய வழியில் வாழ வழிவகுக்கும். ஒரு செயலை செய்கிறோம் என்றால், அந்த செயலைப்பற்றியதான அறிவு அவசியம். வேதத்தில் சொல்லப்பட்ட வழிகளில் வாழவேண்டும் என்றால், வேத கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்றால் வேதத்தைப் பற்றியதான சரியான அறிவு அவசியம். ஏனென்றால் வேதம் மனிதன் எப்படி வாழ வேண்டுமென்று போதிக்கிறது. நாம் விசுவாசிக்கிறதை அறியாமல் செயலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தால் அது ஆபத்துகளை விளைவிக்கும்.

உதாரணமாக, 1 சாமுவேல் 17ம் அதிகாரத்தில் பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல் தேசத்திற்கு எதிராக பாளயமிறங்கினார்கள். கோலியாத்தின் நிமித்தம் சூழல் கொடியதாய் மாறுகிறது. சூழ்நிலையை கண்டு சவுல் ராஜா என்ன செய்வது என்று தெரியாமல் கோலியாத்தைக் கொன்றால் வெகுமதி என்று அறிவிக்கிறான். இது விசுவாசத்தையும், போதனையையும் அறியாமல் செயல்படும் காரியம். இப்பொழுது தாவீதை பார்ப்போம். தாவீது வேதத்தையும், அதன் போதனையையும் அறிந்து விசுவாசத்தினால் தேவன் மீது விசுவாசத்தைக் கொண்டு வெற்றி சிறந்தான். இப்படி நாம் வேதத்தின் மீதும், அதன் போதனைகள் மீதும் விசுவாசமும், அறிவும் இல்லாமல் இருந்தால் சரியான முறையில் வேதம் எதிர்பார்க்கும் வழிகளில் வாழ முடியாது.

வேதத்தின் போதனைகளை அறிவதின் நன்மைகள் பின்வருமாறு:

  1. தேவன் யார் என்று போதிக்கிறது: தேவன் யார் என்று தெரியாமல், அவரை ஆலயத்தில் ஆராதிப்பது விக்கிரக வழிபாட்டிற்கு சமமானது. சரியான முறையில் தேவனை அறியாமல், வேதபூர்வமாக தேவனை ஆராதிக்க முடியாது. தேவனை ஆராதிக்க வரும்போது, தேவனைப்பற்றி வேதம் என்ன போதித்திருக்கிறது என்பதை அறியாமலும், தேவனைப்பற்றி வேதம் கூறாத எண்ணத்தைக் கொண்டிருந்தாலும் நாம் தேவனை ஆராதிக்கவில்லை என்றாகிவிடும். இன்று அநேகர் வேதம் கூறும் வகையில் தேவனை விசுவாசிக்கிறதில்லை. அநேகர் பழைய ஏற்பாட்டில் தேவன் பிதாவாக இருக்கிறார், சுவிசேஷத்தில் தேவன் குமாரனாயிருக்கிறார், இன்று தேவன் பரிசுத்த ஆவியானவராய் இருக்கிறார் என்று எண்ணி திரித்துவத்தை நிராகரிக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியானவரும் தேவன் இல்லை என்று சொல்லுகிற அநேகர் உண்டு. வேதம், தேவன் திரித்துவராயிருக்கிறார், அவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்று போதிக்கிறது. இதை அறிந்து நாம் விசுவாசிக்க வேண்டும்.
  2. மனிதனுடைய நிலையை வெளிப்படுத்துகிறது: மனிதன் பாவியாக இருக்கிறான். பாவம் என்பது தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறுவதாகும் 1 யோவான் 3:4. பாவத்தினால் மனிதன் தேவனுக்கு முன்பாக குற்றவாளியாக இருக்கிறான். தேவனுடைய சுட்டளைகளை மீறினவனாய், தேவனுடைய நித்திய கோபாக்கினைக்கு பாத்திரவானாய் இருக்கிறான். இப்படிபட்ட நிலையில் இருக்கிற மனிதனுக்கு தேவன் நித்திய ஜீவனை எப்படி கொடுக்கிறார் என்பதை வேதம் போதிக்கிறது.
  3. இரட்சிப்பின் அவசியத்தை போதிக்கிறது: மனிதன் பாவம் செய்து தேவனோடு உள்ள உறவை இழந்தான், மனிதனுக்கு இந்த உறவை சரி செய்ய வேண்டுமென்ற எண்ணமேயில்லை. அப்படிப்பட்ட நிலையில் தேவன், மனிதன் மறுபடியும் தன்னோடு உறவுக்கொள்ள வேண்டுமென்பதற்காக தன்னுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பாவிகளுக்காக மரிக்கச் செய்து, சிலுவையில் மரித்து உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் தேவனுடைய நித்திய கோபத்தில் இருந்தும். பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்தும் விடுதலையையும், நித்திய ஜீவனையும் இலவசமாய் கொடுக்கிறார். இந்த போதனைகள் தெரிந்தால் தான் எப்படி இரட்சிக்கப்பட முடியும் என்பது புரியும்.

இவைகள் எல்லாம் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையானது. இவைகளை தான் பவுல் விசுவாசம் என்றும் உபதேச சட்டம் என்றும் ரோமருக்கு எழுதின நிருபத்தில் கூறுகிறார். இவைகள் தான் விசுவாச அறிக்கையில் முறையாக ஒழுங்கமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. விசுவாச அறிக்கையில் வேதத்தினுடைய அடிப்படையான போதனைகள் எளிமையான முறையில், வேதம் ஏன் அவசியம், சுடவுள் எப்படிப்பட்டவர், அவருடைய செயல்களும் கிரியைகளும் எப்படிப்பட்டது, மனிதன் யார், அவனுடைய நிலை என்ன, தேவன் மனிதனோடு எப்படி தொடர்புகொள்கிறார் போன்ற அநேக சத்தியங்களை வேத ஆதாரத்துடன் சுருக்கமாக ஒவ்வொரு தலைப்பின் கீழாக தொகுத்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

விசுவாச அறிக்கை வேதத்தில் இருந்து எடுத்த போதனைகளின் உள்ளடக்கமாக இருக்கிறது. நாம் வேதத்தை, கடவுளை, இரட்சிப்பின் கோட்பாடுகளை வேதத்தின் அடிப்படையில் எப்படியாக நம்புகிறோம் என்பதை படிப்பதற்கும், சத்தியத்தை பாதுகாப்பதற்கும் அடுத்த சந்ததிக்கு எடுத்து செல்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும். விசுவாச அறிக்கை விசுவாச அறிவை வளர்க்க உதவுகிறது. விசுவாசிகளையும் அவிசுவாசிகளையும் வரையறுக்க உதவுகிறது.

விசுவாச அறிக்கை என்று சொல்லும்போது மற்றொரு கேள்வி மனதில் எழும்புகிறது. விசுவாச அறிக்கை வேதத்தில் உள்ளதா?

நாம் பழைய ஏற்பாட்டில் உபாகமம் 6:1-16 வசனங்களை வாசிக்கும்போது இஸ்ரவேல் ஜனங்களின் விசுவாசத்தையும் அந்த விசுவாசத்தை தங்கள் தலைமுறைகளுக்கு அவர்கள் போதிக்க வேண்டும் என்பதையும் உபாகமம் 6:10-15 வசனங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அந்த விசுவாசம் இஸ்ரவேல் தேசத்தை பாதுகாக்கும் என்றும் கர்த்தர் கூறுகிறார்.

அந்த விசுவாசம் உபாகமம் 6:4. 5-ல் காணலாம்:

இஸ்ரவேலே, கேள் : நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் அன்பு கூருவாயாக.

ஒவ்வொரு யூதனும் நாளுக்கு இரண்டு முறை இந்த வசனத்தை சத்தம்போட்டு சொல்ல வேண்டும். குறிப்பாக இஸ்ரவேல் ஜனங்களின் சிறையிருப்புக்கு பின்னர் யூதர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்விலும், ஜெப ஆலயங்களிலும் நடைமுறைப்படுத்தினார்கள். இந்த விசுவாச அறிக்கை தேவனுடைய தன்மையையும் மனிதனுடைய பொறுப்பையும் அனுதினமும் ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தது. இதை நாம் புதிய ஏற்பாட்டில் தேவன் ஒருவரே என்ற விசுவாச அறிக்கையை பயன்படுத்தியிருந்தார்கள் என்று காணலாம்.

 

மாற்கு 10:18 – அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.

மாற்கு 12:29-இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்; இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

ரோமர் 3:30- விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.

1கொரிந்தியர் 8:6 – பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது. அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

எபேசியர் 4:6 – எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.

தீமோத்தேயு 2:5 – தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

தேவன் ஒருவரே என்ற அடிப்படையான விசுவாசம் தொடர்சியாக வேதாகமத்தில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது.

புதிய ஏற்பாட்டில் தேவன் ஒருவரே என்கிற விசுவாச அறிக்கை சற்று விரிவடைகிறதை காணலாம்.

ரோமர் 10: 8,9 – இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது. இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

இது அடிப்படையான விசுவாசம். இதை அறிக்கை செய்ய வேண்டும் என்கிற கட்டளையை கொண்டுள்ளது. அறிக்கையிடுதல் என்பது பொதுவாக எல்லாருக்கும் முன்பாக கிறிஸ்துவோடு உள்ள உறவை தெரிவிப்பதாகும்.

தீமோத்தேயு 6: 11,12 – நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள். அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.

 

யோவான் 9:22 – அவனுடைய தாய் தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்கு முன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள்.

 

1 யோவான் 4: 15;42 – இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்; மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.

 

மத்தேயு 10:32 – மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன்.

இன்னும் அதிகமாக புதிய ஏற்பாட்டில் விசுவாச அறிக்கையானது எல்லா அடிப்படை கொள்கைகளையும் ஒன்றாக இணைத்து அறிக்கையாக கொடுத்திருக்கிறது.

 

ரோமர் 10:8-9 – இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது. இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வாரத்தையே. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

1 கொரிந்தியர் 12:3 – ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியனாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக் கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

 

1 கொரிந்தியர் 8:5,6 – வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு. இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு, அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

1 தீமோத்தேயு 2:5 – தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

1 கொரிந்தியர் 15:3-8-  நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு அவர் ஐந்நூறு பேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரே வேளையில் தரிசனமானார். அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள். சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். எல்லாருக்கும் பின்பு, அகாலப் பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார்.

பிலிப்பியர் 2:5-11-  கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷசாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழுங்கால்யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

ஆகவே நாம் பழைய புதிய ஏற்பாடுகளில் விசுவாச அறிக்கை உள்ளது என்று சான்றளிக்கிறோம்.

முடிவுரை:

விசுவாச அறிக்கை விசுவாச அறிவை வளர்க்கிறது. விசுவாசத்தின் ஒற்றுமையை தருகிறது, சபையை கள்ள போதனைகளில் இருந்து காப்பாற்றுகிறது. அடுத்த தலைமுறைக்கு விசுவாசத்தை எடுத்து செல்லுகிறது. வரலாற்றில் உள்ள தேவ மனிதர்களோடு நம்மை இணைக்கிறது, தேவனுடைய தன்மையையும், மனித பொறுப்புகளையும் தொடர்ச்சியாக ஞாபகப்படுத்துகிறது. ஆகவே விசுவாச அறிக்கை இன்றைக்கு சபைக்கு மிகவும் அவசியமானதாய் இருக்கிறது, ஆமென்!

Read More
02 Sep
0

மெய்யான கிறிஸ்தவனின் அடையாளங்கள்

I யோவானிலிருந்து மெய்யான கிறிஸ்தவனின் அடையாளங்கள் 

அதிகாரம் 1

  1. ஒளியில் நடப்பவன்  [Iயோவான் 1:6]
  2. ஒளியில் நடக்கின்ற மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியமுள்ளவன்  [Iயோவான் 1:7]
  3. அவனுள் பாவ சுபவாம் உள்ளதை அறிந்தவன்  [Iயோவான் 1:8]
  4. அவ்வப்போது பாவம் செய்பவன் [Iயோவான் 1:10]

 

அதிகாரம் 2

  1. தொடர்ச்சியாக கட்டளைகளை கைக்கொள்பவன்   [Iயோவான் 2:3, 3:24]
  2. தொடர்ச்சியாக வசனத்தை கைக்கொள்பவன்   [Iயோவான் 2:5]
  3. அவர் நடந்ததுபோல தானும் நடப்பவன்  [Iயோவான் 2:6]
  4. சகோதரனை பகைக்காதவன்  [Iயோவான் 2:9]
  5. சகோதரனிடத்தில் அன்பு கூறுபவன் [Iயோவான் 2:10, 3:10]
  6. உலகத்தில் அன்பு கூறாதவன் [ Iயோவான் 2:15]
  7. உலகத்தில் உள்ளவைகளில் அன்பு கூறாதவன்  [Iயோவான் 2:15]
  8. அவன் தேவனின் சித்தத்தின்படி செய்பவன் [Iயோவான் 2:17 ]
  9. அவன் கிறிஸ்தவன் சரீரத்தில் நிலைத்திருப்பவன்  [Iயோவான் 2:19]
  10. சுவிசேஷத்தின் சத்தியத்தை அறிந்ததினால் அபிஷேகம்பெற்றவன் [Iயோவான் 2:20, 21]
  11. அவன் இயேசுவை மேசியா என்று அறிந்தவன் [Iயோவான் 2:22, 5:1]   
  12. கிறிஸ்துவில் நிலைத்திருப்பவன் (செடியும் – கொடியுமாக யோவான் 15)   [Iயோவான் 2:27-28]
  13. அவன் தொடர்ச்சியாக நீதியை பயிற்சிப்பவன் [Iயோவான் 2:29; 3:10]

 

அதிகாரம் 3

  1. அவர் சுத்தமுள்ளவராய் இருக்கிறதுபோல் தன்னையும் சுத்திகரித்துக்கொள்பவன்  [Iயோவான் 3:3.]
  2. தொடர்ச்சியாக பாவம் செய்யாதவன் [Iயோவான் 3:6; 5:18.]
  3. அவர் நீதியுள்ளவராய் இருக்கிறதுபோல தானும் நீதியுள்ளவராய் இருக்கிறான் [Iயோவான் 3:7.]
  4. அவன் தேவனால் பிறந்தபடியால் பாவம் செய்யான். ஏனென்றால், அவருடைய வித்து அவனுக்குள் இருக்கிறது [Iயோவான் 3:9.]
  5. சகோதரனிடம் அன்பு கூறுபவன் [Iயோவான் 3:14.]
  6. வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்பு கூறுபவன் [Iயோவான் 3:18-19.]
  7. பரிசுத்த ஆவியானவர் நம்முள் இருப்பதினால் இரட்சிப்பின் நிச்சயத்தை கொண்டவன் [Iயோவான் 3:24, 4:2]  

 

 அதிகாரம் 4

  1. அவன் மாம்சத்தில் வந்த இயேசுவை அறிக்கைபண்ணுகிறவன் [Iயோவான் 4:2]
  2. அவன் அந்திகிறிஸ்துவின் ஆவியை அறிந்தவன் [Iயோவான் 4:3-4]
  3. அவன் அப்போஸ்தல உபதேசத்தை கேட்டு பெற்றுக்கொண்டவன் [Iயோவான் 4:6]
  4. தேவ அன்புள்ளவன் [Iயோவான் 4:7-8]
  5. இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுபவன் [Iயோவான் 4:15]
  6. தேவ அன்பில் நிலைத்திருப்பவன் [Iயோவான் 4:16]
  7. அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அன்பு கூறுகிறோம் [ Iயோவான் 4:19]

அதிகாரம் 5

  1. அவன் தேவனால் பிறந்தவன் [Iயோவான் 5:1]    
  2. உலகத்தை ஜெயித்தவன் [Iயோவான் 5:4]
  3. இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பவன் [Iயோவான் 5:5 ]

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே இதை வாசித்த உங்கள் வாழ்வில் இப்படிப்பட்ட குணாதிசயங்கள் காணப்படுகிறதா?

இல்லையென்றால் மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவை விசுவாசியுங்கள்.

 

Read More