Blog

06 Apr
0

யோனாவின் பாவத்தின் விளைவு

யோனா 1:5-6 

அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான். அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.

நாம் தொடர்ச்சியாக யோனாவின் வாழ்க்கையில் இருந்து சிந்தித்து வருகிறோம். யோனா 1:3-4 வசனங்கள்  யோனாவின் கீழ்ப்படியாமை குறித்து பேசுகிறது என்றும் அந்த பாவத்தின் ஆழம் எப்படிப்பட்டது என்பதையும் சிந்தித்தோம். யோனா தேவனுடைய சமுகத்தை விட்டு விலகி, தேவனுடைய கட்டளைகளை நிராகரித்து, நினிவேயில் பிரசங்கிப்பதை வெறுத்து, யோப்பாவில் போய் கப்பல் ஏறி தர்ஷீசுக்கு சென்றுக்கொண்டிருக்கிறான். யோனா தன் பயணத்திற்கு கூலி கொடுத்து தர்ஷீசுக்கு சென்றுக்கொண்டிருக்கிறான். தேவன் கடலில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி, யோனாவிடம் தேவன் செயல்படுகிறார்.

கப்பற்காரர்கள்

வசனம் – 5 “அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.”

அப்பொழுது கப்பற்காரர் பயந்து கடலில் பயணிக்கும்போது பயணிகளுக்கு பயம் வருவது இயல்பு. ஆனால் இங்கு மாறாக கப்பற்காரர்கள் (மாலுமிகள்) பயப்படுகிறார்கள். இவர்களின் பயம் மிக தெளிவாக கூறுகிறது. இந்த பெருங்காற்று அவர்கள் கப்பலையும், உயிரையும் கொன்றுவிடும் என்று பயந்து, அந்த பயத்தின் வெளிப்பாடு தான் “தங்கள் தங்கள் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டார்கள்”. 

இது எதை குறிக்கிறது? மனிதனுக்கு ஆபத்தின் விழும்பில் இருக்கும்போது மட்டுமே கடவுளைப் பற்றி எண்ணும் சுபாவத்தைக் கொண்டிருக்கிறான். ஆபத்தின் விழும்பில் கடவுள் இல்லை என்று ஒருவரும் கூறமாட்டார்கள். ஆபத்து முடிந்தவுடன் கடவுள் மீதான எண்ணம் முற்றிலுமாக அற்றுபோகும். பயம் என்பது கடவுள் மீது விருப்பமற்று காணப்படும் மனிதனையும் கடவுளிடம் கொண்டுவரும். இந்த சுவாபம் தான் விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும்  உள்ள வித்தியாசம். உண்மையான விசுவாசியின் விசுவாசம் பயத்தில் வெளிப்படாது. அது ஒவ்வொரு நாளும் வெளிப்படும். கப்பற்காரர்கள் ஜெபிதத்தோடு, அதை தாண்டி பாரத்தை லேசாக்க கப்பலில் இருந்த சரக்குகளை கடலில் எறிந்துவிட்டார்கள். இது ஒரு பெரிய கப்பல். பெரிய சரக்குகளை சுமந்து செல்லும் கப்பல். ஒரு தேசத்தில் இருந்து மற்றொரு தேசத்திற்கு சரக்குகளை கொண்டுச்சென்று, அதன் மூலம் வருமானம் பெறுபவர்கள். சரக்கு கப்பலில் சரக்குகளை ஏற்றுவது சாதாரண வேலை இல்லை, கடினமான வேலை. இந்த வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். அந்த ஊதியம் அவர்களுடைய வருங்கால நம்பிக்கையாக இருக்கிறது. இவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தங்கள் வருமானத்தையே கடலில் எறிந்தார்கள். வாழ்க்கையில் பணத்தைவிட உயிர்தான் முக்கியம் என்ற நிஜத்தை இன்று அநேகர் மறந்துவிடுகிறோம். நம்முடைய உயிருக்காக நம்முடைய செல்வங்கள் அனைத்தையும் இழக்க முடியும் என்ற மனித எண்ணத்தை மறந்தவர்களாய் வாழ்கிறோம். இயேசு கிறிஸ்து லூக்கா 12:15 கூறுகிறார், “பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.” மனிதனுக்கு இந்த உண்மை வாழ்வில் இக்கட்டில் தான் தெரியவருகிறது. கொரோனா வந்தபொழுது மனிதன் எல்லாம் காசு இருந்தும் உயிரை காப்பாற்ற முடியவில்லையே  என்று  புலம்பினான். ஆனால் இன்று கடவுளை மறந்து மறுபடியும் காசுக்கு பின்னாக தான் ஓடிக்கொன்டிருக்கிறான். 

இந்த கப்பற்காரர்கள் தங்களுடைய பிரச்சனையை எவ்வளவு மேலோட்டமாக பார்க்கிறார்கள் என்று பாருங்கள். பாரத்தை லேசாகக்கிட்ட தப்பித்துவிடலாமா? பெரிய கொந்தளிப்பு நின்றுவிடுமா? மனிதன் பிரச்சனையை, சூழ்நிலையையே என்று பார்த்துக்கொண்டிருக்கிறான். “மனிதனுடைய பிரச்சனைக்கான பாவம் கப்பலின் கீழ்தட்டில் படுத்துக்கொண்டிருக்கிறது. மனிதனுடைய எல்லா பிரச்சனைக்கான காரணம் பாவம்”. கப்பற்காரர்போல நாம் சூழ்நிலைகளை மாற்ற தேவனிடம் ஜெபிக்கிறோம். வாழ்க்கையில் உள்ள பாவத்தை குறித்து யோசிப்பதே இல்லை. நாம் கடலில் நம்முடைய சரக்குகளை தூக்கி எறிந்தாலும் கொந்தளிப்பு நிக்கவே இல்லை. ஏன் என்றால் இருதயத்தில் இருக்கும் பாவம் நம்மை ஆட்சி செய்கிறது. “பாவம் என்கிற பாரத்தை விட மேலான பாரம் ஒன்றுமில்லை.”

கப்பற்காரர்போல நாம் சூழ்நிலைகளை மாற்ற தேவனிடம் ஜெபிக்கிறோம். வாழ்க்கையில் உள்ள பாவத்தை குறித்து யோசிப்பதே இல்லை.

இந்த கப்பற்காரர்கள் புறஜாதிகள்.  இஸ்ரவேல் தேசத்து ஜனங்கள் அல்ல, உடன்படிக்கையின் தேவன் யார் என்று தெரியாது. ஆனால் இவர்கள் “தேவனை நோக்கி வேண்டுதல் செய்கிறான்.” இந்த உலகத்தில் இரட்சிக்கப்படாத ஆணும், பெண்ணும் தேவன் இருக்கிறார் என்று அறிந்திருக்கிறான். எப்படியென்றால்,  படைப்பு கடவுள் இருக்கிறார் என்பதை தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த பெரிய கொந்தளிப்புக்கு கப்பற்காரர்களுக்கு கடவுளால் தான் கடல் கொந்தளிக்கிறது என்ற எண்ணம் உண்டாயிற்று. “படைப்பின் நோக்கமே கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நிரூபிப்பது தான். வசனம் -5 “ அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்;” எந்த கடவுளாகிலும் காப்பாற்றட்டும் என்று கதறுகிறான். இந்த உலகம் பல்வேறு தேவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கிறது, உண்மையான தேவனை பார்க்க கூடாத நிலையில் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதனுடைய பெரிய பிரச்சனையே இது தான் “கடவுள் இருக்கிறார் என்று தெரியும். ஆனால் யார் அந்த கடவுள் என்று தெரியவில்லை.” யாரிடம் ஜெபிக்க வேண்டுமென்று தெரியவில்லை. யாரிடத்தில் எப்படி ஜெபிக்க வேண்டுமென்று தெரியவில்லை. அப்புறம் எப்படி பதில் கிடைக்கும்? கடவுளை அறியாதவர்களின் ஜெபமும் அழுகையும் யாரிடம் சென்றடையும்? அது தேவனிடம் செல்லுமா என்ற நம்பிக்கையற்ற நிலை.

இந்த இரண்டு மனித பிரச்சனைக்கு கிறிஸ்தவத்தில் மட்டும் தான் பதில் உண்டு. பொதுவான வெளிப்பாடாகிய படைப்பு மற்றும் மனசாட்சி கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று மட்டுமே வெளிப்படுத்தும்.  அந்த கடவுள் யார் என்று வேதத்தில் தீர்க்கத்தரிசிகள் மூலமாய், அப்போஸ்தலர்கள் மூலமாய், அவருடைய குமாரன் மூலமாயும் வெளிப்படுத்தியிருக்கிறார் எபிரயேர் 1:1,2. இந்த இயேசுவை அறியாத ஜனங்கள் அநேகர். இந்த இயேசுவை அறிந்தவர்களுக்கு கடவுள் யார் என்று தெரியும்.யாரிடம் எப்படி ஜெபிக்க வேண்டுமென்று தெரியும். ஏன் சுவிசேஷம் சொல்ல வேண்டும்? மனிதன் இந்த பிரச்சனைக்கான தீர்வை தேடிக்கொண்டிருக்கிறான். பிரச்சனைக்கான தீர்வு இயேசு கிறிஸ்து மட்டுமே. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசிப்பதின் முலம் மட்டுமே தீர்வு. 

இப்படிப்பட்ட நிலையில் யோனா என்ன செய்கிறான்?

யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.

இப்பொழுது யோனாவால் மட்டுமே கப்பலில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல முடியும். இங்கு பிரச்சனை புறஜாதி ஜெபிக்கிறான் – யோனா தேவனுடைய தீர்க்கதரிசி தூங்குகிறான். எப்படி பெரிய கொந்தளிப்பு அடிக்கும்போது அயர்ந்த நித்திரையடைய முடியும். நான் தப்பி நிம்மதியாய் இருக்கிறேன் என்ற எண்ணம் அவனை தூங்க வைத்தது. ஆனால் அவன் ஆபத்தில் இருக்கிறான் என்பதை உணராமலிருக்கிறான்.  அநேகர் யோனாவை போல தூங்கிக்கொண்டுயிருக்கிறோம். தேவனை மறந்து, நிராகரித்து நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எண்ணி வாழ்க்கையில் எல்லாம் சுகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு வாழ்கிறோம். புயல் வேகமாக உங்களை நெருங்கிக்கொண்டுயிருக்கிறது. இன்றைக்கு நாம் எப்படி வாழ்கிறோம் என்றால் தேவனுடைய நன்மைகளை குணாதிசயங்களை அறிந்திருக்கிறோம். தேவன் இரக்கம், மனதுருக்கம், நீடிய சாந்தமும், கிருபை நாம் பாவம் செய்தாலும் என்னுடைய பொறுப்புகளை நான் செய்யாமல் போனாலும் அவர் என்னை மன்னித்துவிடுவார் என்கிற எண்ணம் கொண்டிருக்கிறோம். ஏன் என்றால் கடவுள் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு நாம் நம்முடைய பாவத்தில் யோனாவைப் போல அயர்ந்த நித்திரைபன்னுகிறோம். தேவன் இரக்கம், மனதுருக்கம், நீடியசாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர் என்பது சரி தான். ஆனால் ஒரு விசுவாசி பரிசுத்தமான வாழ்க்கை வாழவும், கொடுக்கப்பட்ட பொறுப்பை செய்ய கட்டளையையும் பெற்றிருக்கிறோம். இவைகளை மீறும் போது தேவன் சிட்சிக்கிறார் எபிரயேர் 12 : 5-6கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.” நம்முடைய ஆவிக்குரிய நிலையை நினைத்து நாம் சமாதானமாக இருக்கலாம், ஆனால் உண்மையாகவே தேவனோடு உள்ள உங்களுடைய தனிப்பட்ட உறவு எப்படி இருக்கிறது? யோனா தேவனுடைய சித்தத்திற்கு மாறாக போய் நிம்மதியாக ஒரு குழந்தையை போல தூங்குகிறான், அவன் சமாதானமாய் தூங்குகிறான். பெருங்காற்று வீசும் போதும் தூங்குகிறான். யோனாவை போல இன்று நாமும் இருக்கிறோம், இன்றைய சபையும் காணப்படுகிறது. தேவன் பெரிய கொந்தளிப்பை அனுப்புவார்.

யோனா இன்றைய கால சபையின் நிலையையும் உணர்த்துகிறார். 

வசனம் 6 “அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.”

ஏன் இவ்வளவு பெரிய ஆபத்து? கப்பல்காரரின் பாவமா? புறஜாதியின் பாவமா? இல்லை தேவனுடைய தீர்க்கத்தரிசியின் பாவம். இன்றைக்கு உலகம் ஏன் இப்படியிருக்கிறது. சபை தன்னுடைய நிலையையும் பொறுப்பையும் “மறந்ததினாலே.”  சபை சுறுசுறுப்பாக விழித்திருக்கும்போது, பரிசுத்தத்தையும், ஜெபத்தையும், சுவிசேஷ பகிர்தலையும் சரியாக செய்யும்போது உலகமும் சரியாக இயங்கும். 18th C –ல் உலக முன்னேற்றம், எல்லா கண்டுபிடிப்புகளுக்கான காரணம் England, America –வில் நடந்த எழுப்புதல். தேவன் தன்னுடைய பொதுவான கிருபையில் தேசத்தை ஆசீர்வதிக்கிறார். சபை வேதத்தை நிராகரித்தபோது தன்னுடைய கடமையை செய்யாதபோது, விசுவாசத்தை விட்டு விலகியபோது, 19th c-ல் German ஞானிகள் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிர்த்தபோது சபை தூங்கியது, Hither மூலமாக உலகம் தலைகீழாக மாறியது. யோனா கர்த்தருடைய வார்த்தையை நிராகரித்தான். அது தன்னை சுற்றியுள்ள அனைவரையும் பாதிக்கிறது. இது தனிப்பட்ட வாழ்விலும் நிகழும். உங்களுடைய உறவு தேவனோடு சரியில்லை என்றால், மற்ற மக்களோடும் உங்கள் உறவு சரியிருக்காது. 

யோனா எப்படி கப்பலில் இருக்கிறானோ அதேபோல தான் சபையும் இன்று இருக்கிறது. ஜெப விண்ணப்பம் கொடுக்கிறது இல்லை. கடவுளுடைய வார்த்தை கேட்பதில்லை,ஜெபத்தை அசட்டை செய்யும் சபைகள், இறையியல் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இன்மை, விசுவாசியின் வாழ்க்கை பரிசுத்தமிண்மை ,சுவிசேஷ பகிர்தலில் உள்ள ஆர்வமற்ற நிலை தான் இன்றைய சபைகளிலும் காணப்படுகிறது. 

  • உறங்கும் திருச்சபை -> தன் நிலையை அறியாத சபை. தூங்குபவர்கள் எழுந்த பின் தான் நினைவுக்குவருவார்கள்.
  • உறங்கும் சபை -> தன் கனவில் நமக்கு எப்பொழுதும் ஒன்றும் ஆகாது என்று காண்பார்கள்.
  • உறங்கும் சபைக்கு-> எச்சரிப்பு பிடிக்காது.
  • உறங்கும் சபை->  ஜெபிக்கவும் செய்யாது,பிரசங்கிக்கவும் செய்யாது.

வசனம்- 6 நீ நித்திரை பண்ணுகிறது என்ன? “தேவைப்படும் கடிந்துகொள்ளுதல்.” எல்லாரும் கடவுளை நோக்கி கூப்பிடும்போது நீ எப்படி தூங்குகிற கடவுளை அறிந்திருப்பதாக கூறுகிறவர்களின் நடக்கையை கண்டு உலகம் திகைக்கும்போது உலகம் அவர்களுடைய பாவத்தை சுட்டிக்காட்டும். விசுவாசி சரியாக நடக்க இந்த உலகம் எதிர்பார்க்கும். விசுவாசிகள் நம்முடைய சுவிசேஷம் பகிரும் வாய்ப்பை அடிக்கடி தவறவிடுகிறோம். 

யோனாவைப்போல இன்னொரு தீர்க்கத்தரிசியும் படகில் தங்கினார். அவருக்கும் காற்றும் கடலும் கொந்தளிக்கிறது.  சீஷர்கள் கதறினார்கள் “நாங்கள் மடிந்து போகிறோம் உமக்கு கவலையில்லையா” இயேசு யோனாவை போல அதை நிராகரிக்காமல் எழுந்து மாற்கு 4:39 “அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று”. இயேசு நம்முடைய பாவத்தின் மீதான தேவனுடைய கோபமாகிய பெரிய கொந்தளிப்பை நிறுத்தி, சமாதானத்தை கொடுக்கிறார். நம்முடைய பாவம் தேவனை கோபமாக்கினது.  அதற்காக தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார். நித்திய சமாதானத்தை கொண்டு வந்தார். மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்போம்.  

 

Read More
01 Mar
1

யோனாவின் கீழ்ப்படியாமை

யோனா 1 :1-4 

அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.

 

நாம் யோனா தீர்க்கத்தரிசன புத்தகத்தில் இருந்து சிந்தித்து வருகிறோம்.யார் இந்த யோனா? யாருடைய நாட்களில் தன்னுடைய தீர்க்கத்தரிசன ஊழியத்தை செய்து வந்தான். அவனுக்கு தேவன் எப்படிப்பட்ட  அழைப்பை கொடுத்தார். இந்த யோனா தீர்க்கத்தரிசன புத்தகத்தின் தன்மையையும், தேவனின் செய்தி எதில் வெளிப்படுகிறது என்பதையும் நாம் யோனாவின் அறிமுகம் என்கிற தலைப்பில்  சிந்தித்தோம். 

வேதத்தின் ஒரு தனித்துவம் என்னவென்றால், வேதத்தில் கூறப்பட்டிருக்கும் மனிதர்களின் வாழ்வில் உள்ள நன்மைகளை மட்டும் எடுத்துரைக்காமல், அவர்கள் வாழ்வில், அவர்கள் செய்த பாவத்தையும் பரிசுத்த ஆவியானவர் வேதத்தில் சுட்டிக்காட்டுகிறார். பழைய ஏற்பாட்டில் நாம் வாசிக்கும்போது, நோவா பொல்லாத சந்ததியில் அவன் மட்டும் தேவனுக்கு பிரியமாய் வாழ்ந்து கீழ்ப்படிந்தான் என்றும்  வெள்ளத்திற்கு பின்பு அவன் குடித்து வெறிக்கொண்டு நிர்வாணமாக கிடந்தான் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஆபிரகாமை விசுவாசத்தின் தகப்பன் என்ற அடையாளத்தை கொடுத்திருந்தாலும் அவனுடைய பலவீனமான  விசுவாசத்தினால் அவனுடைய  பாவக்கிரியைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. தாவீது தேவனுடைய இருதயத்திற்கு  ஏற்றவானாய் இருந்தாலும், பத்சேபாளிடம் அவன் செய்த பாவம், அவனையும், அவன் குடும்பத்திற்கும் எப்படிப்பட்ட விளைவுகளை கொடுத்தது என்று கூறுகிறது. புதிய ஏற்பாட்டில் பேதுரு மிகவும் தைரியசாலி என்றாலும், அவனுடைய மருதலித்தலையும் பலவீனங்களையும் வேதம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டுகிறது. அதே போன்ற ஒரு நிகழ்வை தான் இங்கு நாம் காண்கிறோம். வேதம் தொடர்ச்சியாக மனிதனுடைய பாவ நிலையை சுட்டிக்காட்டுகிறதாயிருக்கிறது. வேதத்தின் தன்மையே மனிதனுடைய பாவத்தை சுட்டிக்காட்டி அதிலிருந்து மனந்திரும்பும்படியான வழியை இயேசு கிறிஸ்துவின் மூலமாக காட்டுகிறதாய்  இருக்கிறது.

வேதம் தொடர்ச்சியாக மனிதனுடைய பாவ நிலையை சுட்டிக்காட்டுகிறதாயிருக்கிறது. வேதத்தின் தன்மையே மனிதனுடைய பாவத்தை சுட்டிக்காட்டி அதிலிருந்து மனந்திரும்பும்படியான வழியை இயேசு கிறிஸ்துவின் மூலமாக காட்டுகிறதாய்  இருக்கிறது.

யோனாவின் கீழ்ப்படியாமை

யோனா 1:3 ” அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.

யார் இந்த யோனா? இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய தீர்க்கதரிசி. ஒரு போலியான தீர்க்கத்தரிசியல்ல. யோனா கர்த்தருடைய தீர்க்கத்தரிசி. அவனுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, நேரடியாக தேவனுடைய கட்டளையை பெற்றான். அப்படி தேவனிடத்திலிருந்து நேரடியாக கட்டளையை பெற்றிருந்தாலும் அவன் தேவனுடைய கட்டளையை  முழு மனதோடு தைரியமாய்  தேவனுக்கு கீழ்ப்படியாமல் போகிறான். கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்காமல், அதை தனக்குள் வைத்துக்கொண்டு யாரிடம் இந்த செய்தியை சொல்ல வேண்டுமோ அவர்களிடம் சொல்ல ஒரு துளியளவும் விருப்பமற்றவனாய் காணப்பட்டான். தேவனுடைய வார்த்தை மிகவும் தெளிவானதாக யோனாவுக்கு கொடுக்கப்பட்டது. 

தேவனுடைய வார்த்தை மிகவும் தெளிவானதாக யோனாவுக்கு கொடுக்கப்பட்டது. நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.” நியாயத்தீர்ப்பின்  செய்தியை அறிவிக்க வேண்டும்.நினிவேயின் பொல்லாப்புக்கு விரோதமாக பேச வேண்டும் என்பது தான் தேவனிடமிருந்து யோனா பெற்ற கட்டளை.  யோனா கீழ்ப்படியாமல் எங்கிருந்து எங்கு போகிறான் என்று பாருங்கள். யோனாவின் வாழ்ந்த இடம் நாசரேத் ஊருக்கு மிக அருகானது. நாசரேத் இஸ்ரவேல் தேசத்தின் வடதிசை எல்லை. நாசரேத் ஊரில் இருந்து நினிவே பட்டணம் மிக தொலைவு அல்ல. இஸ்ரவேலின் எல்லையை கடந்தால் அசிரியா தேசம். மிக அருகில் நினிவே பட்டணம். அதை விட்டு முற்றிலும் எதிர்திசையிலும், மிக தொலைவிலும் உள்ள தர்ஷிசுக்கு  எழுந்து போனான். தர்ஷிஸ்  என்பது இன்றைக்கு இருக்கிற ஸ்பெயின் நாட்டிலுள்ள ஒரு கடல் பகுதி. தேவனுடைய கட்டளைக்கு முழுவதும் மாறாக சென்றான். யோனா தர்ஷிசுக்கு எங்கிருந்து போகிறான்? யோப்பா பட்டணத்தை தேர்வு செய்து அங்கிருந்து தர்ஷிசுக்கு போகிறான். யோப்பா பட்டணத்தை ஏன் தேர்வு செய்தான்? யோப்பா புறஜாதி பட்டணம், அங்கே தெரிந்தவர்கள் யாருமில்லை. ஏன்? எங்கே போகிற யோனா? என்று கேட்க ஆள் கிடையாது.

வசனம்-3-ஐ பார்க்கும்போது யோனா மிக முக்கியமாக கர்த்தருடைய சமுகத்தைவிட்டு விலகி இரண்டு முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய சமுகம் என்பது, தேவன் தன்னை தொடர்ச்சியாக பிரத்தியேகமாக வெளிப்படுத்தும் இடம்.  அவர் ஏற்படுத்தின முறைகளில் தன்னை தன்னுடைய ஜனங்களுக்கு வெளிப்படுத்துவார். கர்த்தருடைய சமுகம் என்பது கர்த்தருக்கு “பிரியமான இடம்.”  இஸ்ரவேலின் ஆசரிப்புக் கூடாரத்தில் அவருடைய பிரசன்னம் இருந்தது. அதன்பின்பு தேவாலயம் அவருடைய சமுகமாயிருந்தது. அங்கே தான் அவரை ஆராதிப்பதும், ஆசாரிய முறைகளும் தொழுதுகொள்ளும் இடம். இஸ்ரவேல் தேசம் அவருடைய சமூகமும், அவருடைய பிரசன்னமுமாய் இருக்கிறது. அவருடைய சமூகம் என்றால், அவரை நினைவுகூறும் இடம். ஆசாரியன், தேவாலயம், தீர்க்கதரிசி, பலிகள் என்று கர்த்தரை நினைவுகூறும் இடம்.  யோனாவிற்கு தொடர்ச்சியாக கர்த்தரைப்பற்றிய காரியங்களை நினைவுப்படுத்தும் ஓர் இடமாக இஸ்ரவேல் தேசம் இருந்தது. தேவனுடைய முழுமையான ஆளுகையையும், திருநியமங்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும் ஓர் தேசத்தை விட்டு யோனா விலகி செல்கிறான். 

கர்த்தருடைய சமுகம் என்பது, தேவன் தன்னை தொடர்ச்சியாக பிரத்தியேகமாக வெளிப்படுத்தும் இடம்

இதை போல தான் இன்று அநேக கிறிஸ்தவர்கள்,விசுவாசிகள் என்று கூறுகிறவர்களும் கூட கர்த்தருடைய சமுகத்தை விட்டு விலகிவிடுகிறார்கள். விலகி, அதற்காக அநேக சாக்குபோக்குகளை கூறுகிறார்கள். தேவன் ஏற்படுத்தி தன்னை வெளிப்படுத்த நினைக்கும்  இடத்தை விட்டு விலகுகிறார்கள். தங்களுடைய சுய எண்ணமும், தங்கள் பாவ வழிகளையும் நடைமுறைபடுத்த கர்த்தரை விட்டு விலகுகிறார்கள். இன்று தேவன் தன்னை திருச்சபையில் வெளிப்படுத்துகிறார். சபைக்கு வருவதை விரும்பாதவர்கள். அதற்கு அநேக போலியான சாக்குபோக்குகளை கூறி, விசுவாச ஐக்கியத்தை விரும்பாதவர்களாய் காணப்படுகிறார்கள். என்னை யாரும் எந்த கேள்வியும் கேட்டுவிடக் கூடாது என்று கூறி யோனாவை போல யோப்பாவை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.    

விசுவாச வாழ்வு என்பது “அது தேவனோடு வாழும் வாழ்வை எதிர்பார்க்கிறது.” “கர்த்தருடைய கட்டளையை விருப்பமுடன் கைக்கொள்ளாத யாவரும் தேவனுடைய சமுகத்தை விட்டு விலகுகிறவன்.” கர்த்தருடைய கட்டளை என்பது தேவன் சொன்ன அனைத்தும் விசுவாச வாழ்வு,பரிசுத்த வாழ்வு, சக மனித ஐக்கியம், வேதவாசிப்பு, ஜெபம், ஆராதனை,விசுவாசியின் பொறுப்பு போன்ற அனைத்தும் அடங்கும். தனிப்பட்ட விசுவாச வாழ்வு மட்டுமே ஒரு மனிதனின் விசுவாசத்தை ஊர்ஜிதம் செய்கிறது. யோனா தர்ஷிசுவில் தன்னுடைய நாட்களை கழிக்க சென்றுவிடுகிறான். யோனா, தேவன் தனக்கு கொடுத்த ஆசீர்வாதத்திற்கு எதிராக பாவம் செய்தான். என்ன ஆசீர்வாதத்தை யோனா பெற்றிருந்தான்.

  • தேவனுடைய தீர்க்கத்தரிசி
  • பரலோக தேவனிடத்தில் இருந்து நேரடியாக வெளிப்பாடை பெறுகிறவன்.
  • தேவன் இருக்கும் நிலத்தில் இருப்பவன்.
  • தேவாலயத்தில் தங்கும் உரிமையை பெற்றிருந்தவன்.

ஆசீர்வாதங்கள் நமக்கு பொறுப்பை வளர்க்கிறது. பொறுப்பை மீறுகிறவன் பாவத்தை அதிகரிக்கிறான். நாம் பெற்ற கிருபை மற்றும் இரக்கத்தின்படியே நம்முடைய பாவத்தின் அளவும் கூடுகிறது. பாவம் எப்பொழுதுமே காரணமற்றது. பாவம் எப்பொழுதுமே கடவுளை குறித்ததான ஏதோ ஒரு காரியத்தை மறுதலிக்கிறது. பாவம் கடவுளின் குணாதிசயத்தை மறுதலிக்கிறதாகவே  இருக்கிறது. பாவம் எப்பொழுதுமே கடவுளை விட்டு விலகி செல்ல செய்கிறது. பாவம் தேவனுடைய கிருபையையும் இரக்கத்தையும் விட்டு விலக்கி தேவனின் கோபத்தை வழிவகுக்கிறது. ஒரு மனிதன் தன் வீட்டை விட்டு விலகி, கிறிஸ்தவ சபை, விசுவாச ஐக்கியத்தை விட்டு விலக செல்லலாம். ஆனால் தேவனுக்கு மறைவாக எங்கும் செல்ல முடியாது, என்பதை நினைவில் கொள்ள வேண்டும் சங்கீதம் 139 ஐ வாசிக்கவும். 

யோனா கீழ்ப்படியாமல் போவதற்கான காரணம் என்ன?

யோனாவின் கீழ்ப்படியாமைக்கு காரணம் பயமா? 

யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.

யோனாவின் கீழ்ப்படியாமைக்கு காரணம் பயம் அல்ல. அவர்கள் மீதான வெறுப்பு. அவன் அங்கே போய் பிரசங்கிக்க விருப்பமற்றவனாய் தேவனுடைய கட்டளைக்கு கைக்கொள்ள விருப்பமற்றவனாகவும் மாறினான். யோனா தேவனுடைய வல்லமையை நம்பியிருந்தான் யோனா 4:2. அவனுக்கு பிடிக்காதவர்களுக்கு / எதிரிக்கு சுவிசேஷத்தை  கூறு என்கிற தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தான். அதற்கான காரணம் வெறுப்புணர்வு.  யோனா தன் இருதயத்தை காத்துக்கொள்ள தவறினான். கடுங்கோபமும்,மனகசப்பும் மிகுந்து தங்களுக்கு ஏற்பட்ட காயங்களை மன்னிக்காத ஒவ்வொரு விசுவாசியும் யோனாவை போலவே பாவம் செய்கிறவன். தன் மனதில் கோபத்தையும் கசப்பையும் வளர்ப்பவன், ஒரு தோட்டக்காரன் தனக்கு பிடித்த மரத்தையும் மட்டுமே பாதுகாத்து வளர்த்து மற்ற மரங்களை பராமரிக்காமல் விட்டு வைத்தால் பாதிப்பு மரத்திற்கு அல்ல, தொட்டக்காரனுக்கே. உன்னை நீயே காயப்படுத்திக்கொள்கிறாய். கொலோசெயர் 3:13 கூறுகிறது போல இயேசு கிறிஸ்து பாவ விடுதலையை உங்களுடைய பாவத்திற்கு மட்டும் கொடுக்கவில்லை அவரை விசுவாசிக்கிற, நீங்கள் பகைக்கிற மனிதனுக்கும் கொடுத்து மன்னித்திருக்கிறார். சிலுவையை நினைத்து பார்த்தால்  நாம் நிச்சயமாக மற்றவர்களை மன்னிப்போம்.

ஒரு மனிதன் பாவம் செய்ய முன்வரும்போது அவனுக்கான அனைத்து வசதிகளையும் சாத்தான் செய்து கொடுப்பான். பாவம் செய்யும் போது அனைத்து காரியமும் கூடி வருவது அது தேவனுடைய சித்தமல்ல. சூழ்நிலைகள் தேவனுடைய சித்தத்தை நிருபிக்காது. தேவனுடைய சித்தத்தை நிரூபிப்பது எப்பொழுதுமே கர்த்தருடைய வார்த்தையே. பாவம் எப்பொழுதுமே நாம் நினைத்து பார்க்காத அளவுக்கு ஆழமாக கொண்டு செல்லும்.  

தேவனுடைய இரக்கமும்,கிருபையும்   

வசனம் – 4 “கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.”

யோனாவின் எண்ணம்: தேவனுடைய தீர்க்கத்தரிசி என்ற ஊழியத்திலிருந்து தேவன் என்னை நீக்கிவிடுவார் என்று எண்ணியிருந்தான். கப்பலில் தர்ஷீசுக்கு தான் போறோம் என்று எண்ணியிருப்பான். நினிவேக்கு நான் போய் பிரசங்கம் பண்ணுவதில்லை. தேவன் யோனாவை அப்படியே விட்டு விடுவதில்லை எரேமியா 31 :35 “சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர்”.  தெய்வீக சிட்சைக்கான ஒரு உதாரணம் யோனா. எபிரேயர் 12 :6 வாசிக்கவும். தேவன் நிச்சயமாய் தன்னுடைய பிள்ளைகளை சிட்சிக்கிறார். சிட்சை உடனடியாகவும் வராது. தேவன் சில நேரங்களில் உங்களுடைய பாவத்தை கண்டுக்கொள்ளாதது  போல இருக்கலாம், ஆனால் அதற்கான தக்க சிட்சை நிச்சயம் உண்டு. உண்மையாக விசுவாசி தேவனுடைய சமூகத்தை விட்டு விலகி செல்லவே முடியாது. அவருடைய பிள்ளைகளோ அவர் சித்தத்திற்கு கீழ்படியாமல் போகும்போது அவர் கோபம் கொள்வதில்லை அதற்கு பதிலாக தேவன் தன் இரக்கத்தை வெளிப்படுத்துகிறார். இன்றைக்கு நாம் இருக்கிறோம் என்றால் அவருடைய அன்பும் கிருபையும் இரக்கம் மட்டுமே. தம் பக்கமாக மறுபடியும் இழுத்துக்கொள்ள விருப்பமுள்ளவராய் இருக்கிறார். ஒரு விசுவாசிக்கு எவ்வளவு பெரிய பாதுகாப்பு. இயேசு கிறிஸ்துவின் சிலுவை இன்றும் உங்களை தம் பக்கமாக சேர்த்துக்கொள்ளுகிறது. பின்வாங்கி போன விசுவாசியே மனந்திரும்பு. தேவனுடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே. தேவன் யோனாவின் வாழ்வில் செயல்பட்டார். அதேபோல உங்களுடைய வாழ்வில் செயல்பட தேவன் கிருபையும் இரக்கமும் பாராட்டுவாராக. ஆமென். 

 

Read More
25 Feb
0

இயேசு கிறிஸ்து ஸ்திரீயின் வித்து

முன்னுரை

அனைவருக்கும்  இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள். இந்த வேத ஆராய்ச்சி கட்டுரையில் நாம் இயேசு கிறிஸ்துவை குறித்ததான காரியங்களை சிந்திக்கயிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவைப் பற்றி படிப்பதை இறையியலில் “CHRISTOLOGY”  என்ற பதம் பயன்படுத்தப்படும். இயேசு கிறிஸ்துவை பற்றிய ஆய்வு / படிப்பு என்று பொருள்.  அதிலும் குறிப்பாக நாம் இயேசு கிறிஸ்துவை வேதம் எப்படியாக அடையாளப்படுத்தி, அவருடைய ஊழியத்தை விவரிக்கிறது என்பதை நாம் சிந்திக்கயிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவைப் பற்றி படிப்பது  விசுவாசிகளுக்கு ஆறுதலும்,விசுவாசத்தில் முதிர்ச்சியடைவதற்கும், அவருக்கு பணி செய்வதற்கும் உற்சாகமளிக்க கூடியதாய் இருக்கும். நாம் இந்த கட்டுரையில் யோவான் 12:21–ல் கிரேக்கர்கள், பிலிப்புவினிடத்தில் வந்து, ஐயா, “இயேசுவை காண விரும்புகிறோம்” என்று கேட்டார்கள். அதையே நம்முடைய ஜெபமாக வைத்து, தேவனே, இயேசுவை காண கிருபை செய்யும் என்ற சிந்தனையோடே  பின் வரும் காரியங்களை சிந்திப்போம்.

பிலிப்பியர் 2:11-ல், பிதாவானவர் இயேசு கிறிஸ்துவுக்கு “எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்கு தந்தருளினார்” என்று வாசிக்கிறோம். இயேசு கிறிஸ்துவுக்கு ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை அவருக்கு பெயர் அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருகிறது. (எ.டு)  1.இயேசு கிறிஸ்து – தேவ ஆட்டுக்குட்டி,  2. மனுஷகுமாரன், 3.பிரதான ஆசாரியன்,  4.தீர்க்கதரிசி,  5.ராஜா,  6. தேவனுடைய ஊழியக்காரர் போன்ற அடையாளங்கள் வேதாகமம் முழுவதுமாக இயேசு கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் இயேசு கிறிஸ்துவின் பிரதானமான அடையாளமாகவும், அவருடைய பணியை குறிக்கிறதாகவும் இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவை பற்றி தியானிப்பதும், அவரை நேசிப்பதும் விசுவாசிகளின் அடிப்படை வேலையாக இருக்க வேண்டும்.  இயேசுவை பற்றி தியானிப்பதை நாம் இரண்டாம் பட்சத்தில் தான் வைத்திருக்கிறோம். பவுல் பிலிப்பியரில் ‘கிறிஸ்து எனக்கு ஜீவன்’ என்று கூறுகிறார். எபிரெயர் ஆசாரியரும் “இயேசுவை கவனித்து பாருங்கள்” என்று விசுவாசிகளுக்கு கூறுகிறார்.  இயேசு கிறிஸ்துவை மையமாக வைத்து வாழ்வதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அது எப்படி பழக்கமாகும்? இயேசு கிறிஸ்துவைப் பற்றி பிரத்தியேகமாக  பேசும் வேத பகுதிகளை சரியாக தியானிப்பதின் மூலமாக மட்டுமே, நம் வாழ்வில் இயேசு கிறிஸ்துவை மையமாக வைத்து வாழ முடியும்.

இயேசுவைப் பற்றி வேதாகமத்தில் 

வேதாகமத்தில் முதல் முதலில் இயேசு கிறிஸ்துவை பரிசுத்த ஆவியானவர் எப்படியாக அடையாளப்படுத்தியிருக்கிறார்? இயேசு கிறிஸ்துவை பற்றி முதலில் வேதாகமத்தில் எங்கு வாசிக்கிறோம்? இயேசு கிறிஸ்துவைக் குறித்து படிக்க எங்கிருந்து ஆரம்பிப்பது நல்லது? புதிய ஏற்பாட்டில் ஆ? அவருடைய பிறப்பில் இருந்தா? தீர்கதரிசனத்தில் இருந்தா?

ஆதியாகமத்தில்  இருந்து நாம் இயேசு கிறிஸ்துவின் அடையாளத்தையும், அவருடைய பணியையும் நாம் பார்க்க ஆரம்பிக்க வேண்டும். அங்கே தான் முதலாவது மீட்பரின் அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆதியாகமம்3:15  உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.  “இயேசு கிறிஸ்து ஸ்திரீயின் வித்து” என்று அடையாளப்படுத்தப்படுகிறார். இந்த ஆதியாகமம் 3:15-ன் பின்னணி மிகவும் பரிட்சயமானது.

ஆதியாகமம்

ஆதியாகமம் முதலாம் அதிகாரம் தேவன் எப்படி படைத்தார் என்றும், ஆதியாகமம் 2ம் அதிகாரம் மனிதனை படைத்தலின் விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவன் ஆதாமையும், ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் வைத்தார். வைத்து சில பொறுப்புகளையும் கட்டளைகளையும் அவர்கள் கைக்கொள்ளும்படி கொடுத்தார். கீழ்ப்படிந்தால் வாழ்வு, கீழ்ப்படியவில்லை என்றால் மரணம் ஆதியாகமம் 2:17 “ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.”  ஏன் இப்படி ஒரு கட்டளை? ஆதாமும், ஏவாளும் தேவனை எவ்வளவு தூரம் நேசிக்கிறார்கள், விசுவாசிக்கிறார்கள், கீழ்ப்படிகிறார்கள் என்பதை வெளிப்படுத்தவே இந்த கட்டளையை தேவன் கொடுக்கிறார். இது தான் விசுவாச வாழ்வு. அவரை நேசித்தல்,விசுவாசித்தல், கீழ்ப்படிதல் வேதம் ஆரம்பம் முதல் இதை தான் சொல்லி வருகிறது.ஆனால் சர்ப்பம் வஞ்சித்தது, தேவன் கூறினதற்கு ஏவாள் செவிகொடமால் வீழ்ந்து போனாள். ஏவாள் எதை பார்த்தாலோ அதின் அடிப்படையில் யோசித்து செயல்பட்டால். விசுவாசிகளுக்கு தேவன் கொடுத்த ஒரு கொள்கை என்னவென்றால்,தேவனுடைய வார்த்தைக்கு செவிக்கொடுக்க வேண்டும். கண்ணால் பார்ப்பது முக்கியமல்ல. செவிகொடுப்பதே பிரதானமானது. பார்க்க வைத்து வஞ்சிப்பது சாத்தானின் செயல்.ஆதியாகமம்3ம் அதிகாரத்தில் தேவன் இவர்கள் பாவத்தை கண்டறிந்து வெளிப்படுத்துகிறார். அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை நியாயப்படுத்துகிறார்கள். தேவன் அதற்கான தண்டனையை கொடுக்கிறார்.

 

ஆதியாகமம் 3:17 ஆதாமுக்கு கொடுத்த தண்டனை
ஆதியாகமம் 3:16 ஏவாளுக்கு கொடுத்த தண்டனை
ஆதியாகமம் 3:14,15 சர்ப்பத்திக்கு கொடுத்த தண்டனை

 

 

 

 

சர்ப்பத்திற்கு கொடுத்த சாபத்தில் தான் மகிமையான சுவிசேஷத்தின் நம்பிக்கையடங்கி இருக்கிறது. ஆதியாகமம் 3:14,15 “ அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

கவனிக்கவும் ஆதியாகமம் 3:15 –ல், இரண்டு வித்துக்கு இடையே பகைஸ்திரீயின் வித்து – சர்ப்பத்தின் வித்து.

இது தான் சுவிசேஷத்தின் முதல் அடிப்படையான பார்வை. இயேசு இந்த உலகத்திற்கு வந்த போது, பிசாசின் கிரியைகளை அழிக்க வந்தார். எப்படி இயேசு பிசாசின் கிரியைகளை அழித்தார்? அவருடைய வாழ்வு, ஊழியம்,மரணம்,உயிர்தெழுதல் மூலமாக வெளிப்படுகிறது. ஆதியாகமம் 3:15 –ல்,  இயேசு கிறிஸ்துவின் வருகையையும், அவருடைய பணியையும் குறிக்கிறது.

வசனம் 15

 1) உனக்கும் ஸ்திரீக்கும்  – யாருக்கு இடையே பகை.

          2 ) உன் வித்து, அவள் வித்து – ஆதாம் ஏவாளை தாண்டியும் இந்த பகை தொடரும்.

3) பகை எப்பொழுது உச்சகட்டம் அடையும் – அவர் உன் தலையை நசுக்கும்போது.

ரோமர் 16:20, வெளிப்படுத்தல் 12:9, யோவான் 8:44  தொடரும் பகை:- தொடர்ந்து மோதல் பிசாசானவன் தேவனுடைய பிள்ளைகளுக்கு பகைஞன் என்பது வேதத்தின் அடிப்படையான சத்தியம். அந்த பகையை ஆதியாகமம் 4- ம் அதிகாரத்தில் காயீன் – ஆபேல் ஆதியாகமம் 11- ல்,  பாபேல் கோபுரம், இஸ்ரவேல் – எகிப்து, தாவீது – கோலியாத், இயேசு – பிசாசு, யூதர்கள் – இயேசு பகை இன்றும் தேவனுடைய சபைக்கு விரோதமாக உள்ளது. அப்போஸ்தலர் 7:54 ; 8:3  ஸ்தேவான் கொலை – பவுலின் உபத்திரவம்.   இன்றும் அந்த பகை தொடர்கிறது. சுவிசேஷத்தின் இயேசுவின் ஊழியத்தில் தொடர்ச்சியான பகை பிசாசின் வித்தில் இருந்து  ஆதியாகமம் 3-ல், இருந்து வெளிப்படுத்தல் 21-22 வரை தோட்டம் – பாவக்காடாய் மாறியது  வெளிப்படுத்தல் 21-22 பாவக்காடு புதிய ஏதேனாய் மாறவுள்ளது.

புதிய ஏற்பாட்டில் நாம் வாசிக்கும்போது இயேசு கிறிஸ்து ஸ்திரீயின் வித்து என்று அடையாளப்படுத்தப்படுகிறார்.

இயேசு யார்?

கலாத்தியர் 4:4  “காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.” ஸ்திரீயின் இடத்தில் பிறந்தவரும்.இயேசு கிறிஸ்து ஆதியாகமம் 3- 15-ல், ஸ்திரீயின் வித்துவினால் தான் மரியாளை ஸ்திரீ என்றழைக்கிறார்.

யோவான் 2:1-11, காண ஊர் கல்யாணத்தில் “அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.”

யோவான் 19:26 “அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.”

ஸ்திரீயின் வித்தாகிய இயேசு கிறிஸ்துவின் பணிகள் என்ன?

இயேசு கிறிஸ்து எதற்காக உலகத்திற்கு வந்தார்? 1யோவான் 3:8 “ பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.”

மத்தேயு 2 :16-18 “ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.” இயேசுவை கொலை செய்ய ஏரோது வகைதேடினான்.  ஸ்திரீயின் வித்தாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பிசாசின் வித்துக்கும் பகை தொடர்கிறது. 

மத்தேயு 4:1-11, மாற்கு1:12-13, லூக்கா 4:1-13 சோதனை தொடர்ச்சியாக தாக்குதல், இரண்டாம் ஆதாம் யுத்தம் செய்ய வந்தார்.

மேலே உள்ள இயேசுவின்  சோதனையின் பகுதிகள் என்ன கற்று தருகிறது. எப்படி சோதனையில் அவரை போல வேதத்தை பயன்படுத்தனும்னா? அது சரியாக இருந்தாலும் இயேசுவானவர் பரிசுத்த ஆவியினால் கொண்டுபோகப்பட்டார். பிசாசை சந்திக்க இயேசு கிறிஸ்து போகிறார்.பகையை சந்தித்து  வெற்றி சிறந்து இரட்சிப்பை கொண்டுவந்தார். முதலாம் ஆதாம் சோதனையில் வீழ்ந்தான் இரண்டாம் ஆதாம் சோதனையை மேற்கொண்டு வெற்றி சிறந்தார்.  இயேசுவின் ஊழியத்தை அழிப்பதே பிசாசின் நோக்கம், அதினால் தான் அநேக பிசாசு பிடித்தவர்கள் (லேகியோன்) இயேசுவின் ஊழியத்தில் அநேகம் காணப்பட்டார்கள். பிசாசு பேதுருவையும் பயன்படுத்தினான் மத்தேயு 16:23,  மாற்கு 8:33.

ஆதாம் சாத்தானிடம் தோற்றுபோனான். இயேசு பிசாசை தொடர்ச்சியாக எதிர்த்தார்.

எப்படி?

தொடர்ச்சியாக தன்னுடைய வாழ்வில் முழுவதுமாக தன் பிதாவுக்கு கீழ்ப்படிந்ததின் மூலம். 3 வருடம் ஊழியத்திற்கு பின், இயேசுவும் மரத்திற்கு கொண்டு வரப்படுகிறார். இந்த மரம் பழத்தைக் கொண்டது அல்ல. உயிரை பறிக்ககூடியது. இந்த கீழ்ப்படிதல் அனைத்தையும் மாற்றியது. (ஆதியாகமம் 2:9 வாசிக்கவும். கலாத்தியர் 3:13  சாபம் – அழகு  இங்கு சாபம்.) “அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்”பிலிப்பியர்2:8.

முடிவுரை

ஸ்திரீயின் வித்தாகிய இயேசு கிறிஸ்துவின் பணி தொடர்ச்சியாக பிசாசை எதிர்பதாக இருந்தது. இயேசு தன் வாழ்நாள் முழுவதும் பரிசுத்தமாய் வாழ்ந்தார் என்றால், இயேசு தன் வாழ்நாள் முழுவதும் பாவத்தை எதிர்த்து போராடினார். இயேசுவை விசுவாசிக்கிற நாமும் கூட பாவத்தை எதிர்த்து போராட வேண்டும். பாவத்தை மேற்கொள்ள வேண்டும். ஸ்திரீயின் வித்தாகிய இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கும்போது நாமும் அவருடைய வழிகளில் நடக்க வேண்டும். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; குமாரனின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு நம்மை முன்குறித்து இரட்சித்து இருக்கிறார். தேவன் தொடர்ச்சியாக நம்மை பாவத்தை எதிர்த்து போராட கிருபையும் இரக்கமும் பாராட்டுவாராக. 

Read More
17 Feb
0

சங்கீதம் 19ன் சுருக்கம்

1. வானத்தில் தேவன் தன்னை குறித்த இருத்தலை வெளிப்படுத்தியுள்ளார்.

சங்கீதம் 19:1-6.

  1. தவறில்லாத சாட்சிகள் சங்கீதம் 19:1
  2. சோர்வுற்ற / இடைவிடாத சாட்சி  சங்கீதம் 19:2
  3. புரிந்துகொள்ளக் கூடிய சாட்சி. சங்கீதம் 19:3-6.

2. வேதாகமத்தில் தேவனைக்குறித்த வெளிப்பாடு.

சங்கீதம் 19:7-14

  1. கர்த்தரின் வார்த்தை மதிப்புமிக்கது
    1. அது நமக்கு அறைகூவுகிறது  சங்கீதம் 19:7.
    2. அது நம்மை உற்சாகப்படுத்துகிறது. சங்கீதம் 19:8.
    3. நமக்கு சாவல்விடுகிறது. சங்கீதம் 19:9-10.
  2. கர்த்தரின் வார்த்தை வல்லமை உள்ளது  ஆகவே அது நம்மை சங்கீதம் 19: 11-14
    1. குற்றவாளி என கருதுகிறது சங்கீதம் 19:11
    2. நம்மை சுத்தப்படுத்துகிறது சங்கீதம் 19:12.
    3. நம்மை சரிப்படுத்துகிறது  சங்கீதம் 19:13-14.
    4. இது பெரும்பாதகத்திற்கு விலக்கி காக்கும் சங்கீதம் 19:13.
    5. என்னை ஐக்கியத்திற்குள் காக்கும் / வைக்கும்  சங்கீதம் 19:14

 

Read More
12369