யோனா 1:5-6 

அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான். அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.

நாம் தொடர்ச்சியாக யோனாவின் வாழ்க்கையில் இருந்து சிந்தித்து வருகிறோம். யோனா 1:3-4 வசனங்கள்  யோனாவின் கீழ்ப்படியாமை குறித்து பேசுகிறது என்றும் அந்த பாவத்தின் ஆழம் எப்படிப்பட்டது என்பதையும் சிந்தித்தோம். யோனா தேவனுடைய சமுகத்தை விட்டு விலகி, தேவனுடைய கட்டளைகளை நிராகரித்து, நினிவேயில் பிரசங்கிப்பதை வெறுத்து, யோப்பாவில் போய் கப்பல் ஏறி தர்ஷீசுக்கு சென்றுக்கொண்டிருக்கிறான். யோனா தன் பயணத்திற்கு கூலி கொடுத்து தர்ஷீசுக்கு சென்றுக்கொண்டிருக்கிறான். தேவன் கடலில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி, யோனாவிடம் தேவன் செயல்படுகிறார்.

கப்பற்காரர்கள்

வசனம் – 5 “அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.”

அப்பொழுது கப்பற்காரர் பயந்து கடலில் பயணிக்கும்போது பயணிகளுக்கு பயம் வருவது இயல்பு. ஆனால் இங்கு மாறாக கப்பற்காரர்கள் (மாலுமிகள்) பயப்படுகிறார்கள். இவர்களின் பயம் மிக தெளிவாக கூறுகிறது. இந்த பெருங்காற்று அவர்கள் கப்பலையும், உயிரையும் கொன்றுவிடும் என்று பயந்து, அந்த பயத்தின் வெளிப்பாடு தான் “தங்கள் தங்கள் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டார்கள்”. 

இது எதை குறிக்கிறது? மனிதனுக்கு ஆபத்தின் விழும்பில் இருக்கும்போது மட்டுமே கடவுளைப் பற்றி எண்ணும் சுபாவத்தைக் கொண்டிருக்கிறான். ஆபத்தின் விழும்பில் கடவுள் இல்லை என்று ஒருவரும் கூறமாட்டார்கள். ஆபத்து முடிந்தவுடன் கடவுள் மீதான எண்ணம் முற்றிலுமாக அற்றுபோகும். பயம் என்பது கடவுள் மீது விருப்பமற்று காணப்படும் மனிதனையும் கடவுளிடம் கொண்டுவரும். இந்த சுவாபம் தான் விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும்  உள்ள வித்தியாசம். உண்மையான விசுவாசியின் விசுவாசம் பயத்தில் வெளிப்படாது. அது ஒவ்வொரு நாளும் வெளிப்படும். கப்பற்காரர்கள் ஜெபிதத்தோடு, அதை தாண்டி பாரத்தை லேசாக்க கப்பலில் இருந்த சரக்குகளை கடலில் எறிந்துவிட்டார்கள். இது ஒரு பெரிய கப்பல். பெரிய சரக்குகளை சுமந்து செல்லும் கப்பல். ஒரு தேசத்தில் இருந்து மற்றொரு தேசத்திற்கு சரக்குகளை கொண்டுச்சென்று, அதன் மூலம் வருமானம் பெறுபவர்கள். சரக்கு கப்பலில் சரக்குகளை ஏற்றுவது சாதாரண வேலை இல்லை, கடினமான வேலை. இந்த வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். அந்த ஊதியம் அவர்களுடைய வருங்கால நம்பிக்கையாக இருக்கிறது. இவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தங்கள் வருமானத்தையே கடலில் எறிந்தார்கள். வாழ்க்கையில் பணத்தைவிட உயிர்தான் முக்கியம் என்ற நிஜத்தை இன்று அநேகர் மறந்துவிடுகிறோம். நம்முடைய உயிருக்காக நம்முடைய செல்வங்கள் அனைத்தையும் இழக்க முடியும் என்ற மனித எண்ணத்தை மறந்தவர்களாய் வாழ்கிறோம். இயேசு கிறிஸ்து லூக்கா 12:15 கூறுகிறார், “பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.” மனிதனுக்கு இந்த உண்மை வாழ்வில் இக்கட்டில் தான் தெரியவருகிறது. கொரோனா வந்தபொழுது மனிதன் எல்லாம் காசு இருந்தும் உயிரை காப்பாற்ற முடியவில்லையே  என்று  புலம்பினான். ஆனால் இன்று கடவுளை மறந்து மறுபடியும் காசுக்கு பின்னாக தான் ஓடிக்கொன்டிருக்கிறான். 

இந்த கப்பற்காரர்கள் தங்களுடைய பிரச்சனையை எவ்வளவு மேலோட்டமாக பார்க்கிறார்கள் என்று பாருங்கள். பாரத்தை லேசாகக்கிட்ட தப்பித்துவிடலாமா? பெரிய கொந்தளிப்பு நின்றுவிடுமா? மனிதன் பிரச்சனையை, சூழ்நிலையையே என்று பார்த்துக்கொண்டிருக்கிறான். “மனிதனுடைய பிரச்சனைக்கான பாவம் கப்பலின் கீழ்தட்டில் படுத்துக்கொண்டிருக்கிறது. மனிதனுடைய எல்லா பிரச்சனைக்கான காரணம் பாவம்”. கப்பற்காரர்போல நாம் சூழ்நிலைகளை மாற்ற தேவனிடம் ஜெபிக்கிறோம். வாழ்க்கையில் உள்ள பாவத்தை குறித்து யோசிப்பதே இல்லை. நாம் கடலில் நம்முடைய சரக்குகளை தூக்கி எறிந்தாலும் கொந்தளிப்பு நிக்கவே இல்லை. ஏன் என்றால் இருதயத்தில் இருக்கும் பாவம் நம்மை ஆட்சி செய்கிறது. “பாவம் என்கிற பாரத்தை விட மேலான பாரம் ஒன்றுமில்லை.”

கப்பற்காரர்போல நாம் சூழ்நிலைகளை மாற்ற தேவனிடம் ஜெபிக்கிறோம். வாழ்க்கையில் உள்ள பாவத்தை குறித்து யோசிப்பதே இல்லை.

இந்த கப்பற்காரர்கள் புறஜாதிகள்.  இஸ்ரவேல் தேசத்து ஜனங்கள் அல்ல, உடன்படிக்கையின் தேவன் யார் என்று தெரியாது. ஆனால் இவர்கள் “தேவனை நோக்கி வேண்டுதல் செய்கிறான்.” இந்த உலகத்தில் இரட்சிக்கப்படாத ஆணும், பெண்ணும் தேவன் இருக்கிறார் என்று அறிந்திருக்கிறான். எப்படியென்றால்,  படைப்பு கடவுள் இருக்கிறார் என்பதை தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த பெரிய கொந்தளிப்புக்கு கப்பற்காரர்களுக்கு கடவுளால் தான் கடல் கொந்தளிக்கிறது என்ற எண்ணம் உண்டாயிற்று. “படைப்பின் நோக்கமே கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நிரூபிப்பது தான். வசனம் -5 “ அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்;” எந்த கடவுளாகிலும் காப்பாற்றட்டும் என்று கதறுகிறான். இந்த உலகம் பல்வேறு தேவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கிறது, உண்மையான தேவனை பார்க்க கூடாத நிலையில் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதனுடைய பெரிய பிரச்சனையே இது தான் “கடவுள் இருக்கிறார் என்று தெரியும். ஆனால் யார் அந்த கடவுள் என்று தெரியவில்லை.” யாரிடம் ஜெபிக்க வேண்டுமென்று தெரியவில்லை. யாரிடத்தில் எப்படி ஜெபிக்க வேண்டுமென்று தெரியவில்லை. அப்புறம் எப்படி பதில் கிடைக்கும்? கடவுளை அறியாதவர்களின் ஜெபமும் அழுகையும் யாரிடம் சென்றடையும்? அது தேவனிடம் செல்லுமா என்ற நம்பிக்கையற்ற நிலை.

இந்த இரண்டு மனித பிரச்சனைக்கு கிறிஸ்தவத்தில் மட்டும் தான் பதில் உண்டு. பொதுவான வெளிப்பாடாகிய படைப்பு மற்றும் மனசாட்சி கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று மட்டுமே வெளிப்படுத்தும்.  அந்த கடவுள் யார் என்று வேதத்தில் தீர்க்கத்தரிசிகள் மூலமாய், அப்போஸ்தலர்கள் மூலமாய், அவருடைய குமாரன் மூலமாயும் வெளிப்படுத்தியிருக்கிறார் எபிரயேர் 1:1,2. இந்த இயேசுவை அறியாத ஜனங்கள் அநேகர். இந்த இயேசுவை அறிந்தவர்களுக்கு கடவுள் யார் என்று தெரியும்.யாரிடம் எப்படி ஜெபிக்க வேண்டுமென்று தெரியும். ஏன் சுவிசேஷம் சொல்ல வேண்டும்? மனிதன் இந்த பிரச்சனைக்கான தீர்வை தேடிக்கொண்டிருக்கிறான். பிரச்சனைக்கான தீர்வு இயேசு கிறிஸ்து மட்டுமே. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசிப்பதின் முலம் மட்டுமே தீர்வு. 

இப்படிப்பட்ட நிலையில் யோனா என்ன செய்கிறான்?

யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.

இப்பொழுது யோனாவால் மட்டுமே கப்பலில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல முடியும். இங்கு பிரச்சனை புறஜாதி ஜெபிக்கிறான் – யோனா தேவனுடைய தீர்க்கதரிசி தூங்குகிறான். எப்படி பெரிய கொந்தளிப்பு அடிக்கும்போது அயர்ந்த நித்திரையடைய முடியும். நான் தப்பி நிம்மதியாய் இருக்கிறேன் என்ற எண்ணம் அவனை தூங்க வைத்தது. ஆனால் அவன் ஆபத்தில் இருக்கிறான் என்பதை உணராமலிருக்கிறான்.  அநேகர் யோனாவை போல தூங்கிக்கொண்டுயிருக்கிறோம். தேவனை மறந்து, நிராகரித்து நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எண்ணி வாழ்க்கையில் எல்லாம் சுகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு வாழ்கிறோம். புயல் வேகமாக உங்களை நெருங்கிக்கொண்டுயிருக்கிறது. இன்றைக்கு நாம் எப்படி வாழ்கிறோம் என்றால் தேவனுடைய நன்மைகளை குணாதிசயங்களை அறிந்திருக்கிறோம். தேவன் இரக்கம், மனதுருக்கம், நீடிய சாந்தமும், கிருபை நாம் பாவம் செய்தாலும் என்னுடைய பொறுப்புகளை நான் செய்யாமல் போனாலும் அவர் என்னை மன்னித்துவிடுவார் என்கிற எண்ணம் கொண்டிருக்கிறோம். ஏன் என்றால் கடவுள் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு நாம் நம்முடைய பாவத்தில் யோனாவைப் போல அயர்ந்த நித்திரைபன்னுகிறோம். தேவன் இரக்கம், மனதுருக்கம், நீடியசாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர் என்பது சரி தான். ஆனால் ஒரு விசுவாசி பரிசுத்தமான வாழ்க்கை வாழவும், கொடுக்கப்பட்ட பொறுப்பை செய்ய கட்டளையையும் பெற்றிருக்கிறோம். இவைகளை மீறும் போது தேவன் சிட்சிக்கிறார் எபிரயேர் 12 : 5-6கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.” நம்முடைய ஆவிக்குரிய நிலையை நினைத்து நாம் சமாதானமாக இருக்கலாம், ஆனால் உண்மையாகவே தேவனோடு உள்ள உங்களுடைய தனிப்பட்ட உறவு எப்படி இருக்கிறது? யோனா தேவனுடைய சித்தத்திற்கு மாறாக போய் நிம்மதியாக ஒரு குழந்தையை போல தூங்குகிறான், அவன் சமாதானமாய் தூங்குகிறான். பெருங்காற்று வீசும் போதும் தூங்குகிறான். யோனாவை போல இன்று நாமும் இருக்கிறோம், இன்றைய சபையும் காணப்படுகிறது. தேவன் பெரிய கொந்தளிப்பை அனுப்புவார்.

யோனா இன்றைய கால சபையின் நிலையையும் உணர்த்துகிறார். 

வசனம் 6 “அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.”

ஏன் இவ்வளவு பெரிய ஆபத்து? கப்பல்காரரின் பாவமா? புறஜாதியின் பாவமா? இல்லை தேவனுடைய தீர்க்கத்தரிசியின் பாவம். இன்றைக்கு உலகம் ஏன் இப்படியிருக்கிறது. சபை தன்னுடைய நிலையையும் பொறுப்பையும் “மறந்ததினாலே.”  சபை சுறுசுறுப்பாக விழித்திருக்கும்போது, பரிசுத்தத்தையும், ஜெபத்தையும், சுவிசேஷ பகிர்தலையும் சரியாக செய்யும்போது உலகமும் சரியாக இயங்கும். 18th C –ல் உலக முன்னேற்றம், எல்லா கண்டுபிடிப்புகளுக்கான காரணம் England, America –வில் நடந்த எழுப்புதல். தேவன் தன்னுடைய பொதுவான கிருபையில் தேசத்தை ஆசீர்வதிக்கிறார். சபை வேதத்தை நிராகரித்தபோது தன்னுடைய கடமையை செய்யாதபோது, விசுவாசத்தை விட்டு விலகியபோது, 19th c-ல் German ஞானிகள் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிர்த்தபோது சபை தூங்கியது, Hither மூலமாக உலகம் தலைகீழாக மாறியது. யோனா கர்த்தருடைய வார்த்தையை நிராகரித்தான். அது தன்னை சுற்றியுள்ள அனைவரையும் பாதிக்கிறது. இது தனிப்பட்ட வாழ்விலும் நிகழும். உங்களுடைய உறவு தேவனோடு சரியில்லை என்றால், மற்ற மக்களோடும் உங்கள் உறவு சரியிருக்காது. 

யோனா எப்படி கப்பலில் இருக்கிறானோ அதேபோல தான் சபையும் இன்று இருக்கிறது. ஜெப விண்ணப்பம் கொடுக்கிறது இல்லை. கடவுளுடைய வார்த்தை கேட்பதில்லை,ஜெபத்தை அசட்டை செய்யும் சபைகள், இறையியல் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இன்மை, விசுவாசியின் வாழ்க்கை பரிசுத்தமிண்மை ,சுவிசேஷ பகிர்தலில் உள்ள ஆர்வமற்ற நிலை தான் இன்றைய சபைகளிலும் காணப்படுகிறது. 

  • உறங்கும் திருச்சபை -> தன் நிலையை அறியாத சபை. தூங்குபவர்கள் எழுந்த பின் தான் நினைவுக்குவருவார்கள்.
  • உறங்கும் சபை -> தன் கனவில் நமக்கு எப்பொழுதும் ஒன்றும் ஆகாது என்று காண்பார்கள்.
  • உறங்கும் சபைக்கு-> எச்சரிப்பு பிடிக்காது.
  • உறங்கும் சபை->  ஜெபிக்கவும் செய்யாது,பிரசங்கிக்கவும் செய்யாது.

வசனம்- 6 நீ நித்திரை பண்ணுகிறது என்ன? “தேவைப்படும் கடிந்துகொள்ளுதல்.” எல்லாரும் கடவுளை நோக்கி கூப்பிடும்போது நீ எப்படி தூங்குகிற கடவுளை அறிந்திருப்பதாக கூறுகிறவர்களின் நடக்கையை கண்டு உலகம் திகைக்கும்போது உலகம் அவர்களுடைய பாவத்தை சுட்டிக்காட்டும். விசுவாசி சரியாக நடக்க இந்த உலகம் எதிர்பார்க்கும். விசுவாசிகள் நம்முடைய சுவிசேஷம் பகிரும் வாய்ப்பை அடிக்கடி தவறவிடுகிறோம். 

யோனாவைப்போல இன்னொரு தீர்க்கத்தரிசியும் படகில் தங்கினார். அவருக்கும் காற்றும் கடலும் கொந்தளிக்கிறது.  சீஷர்கள் கதறினார்கள் “நாங்கள் மடிந்து போகிறோம் உமக்கு கவலையில்லையா” இயேசு யோனாவை போல அதை நிராகரிக்காமல் எழுந்து மாற்கு 4:39 “அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று”. இயேசு நம்முடைய பாவத்தின் மீதான தேவனுடைய கோபமாகிய பெரிய கொந்தளிப்பை நிறுத்தி, சமாதானத்தை கொடுக்கிறார். நம்முடைய பாவம் தேவனை கோபமாக்கினது.  அதற்காக தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார். நித்திய சமாதானத்தை கொண்டு வந்தார். மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்போம்.