Blog

22 Nov
0

மறைந்திருக்கும் முழங்கால்கள்

மறைந்திருக்கும் முழங்கால்கள்

திருச்சபை வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும்  தேவன் தமது தாசர்களை
பயன்படுத்தி பல அசாதாரண செயல்களை நிகழ்த்தியுள்ளார். அவர்களில் “நவீனகால
ஊழியத்தின் தந்தை” என்று எல்லோராலும் அறியப்பட்டவர் மதிப்பிற்குரிய
திரு.வில்லியம்கேரி அவர்கள். நம்மில் அநேகருக்கு வில்லியம்கேரியைப்பற்றி
தெரிந்திருக்கும். ஆனால் அவரின் சாதனைகளுக்கும், அர்பணிப்புள்ள
உழைப்பிற்கும் பின்னால் திரைமறைவாக, முதுகெலும்பாக இருந்த ஒரு
நபரைப்பற்றி உங்களுக்கு தெரியுமா?

அவரது ஊழியங்களில் தொடர்ச்சியான  தோல்வியினாலும், சரீர பலவீனங்களினாலும்
மிகவும் சோர்வுற்ற அவரை ஆற்றுவதற்கும், உற்சாகபடுத்துவதற்கும் தேவனால்
பயன்படுத்தப்பட்ட பெண் ஒருவர் இருந்தார் என்று நீங்கள் அறிவீர்களா?ஆம்!.
அந்த பெண் தான் வில்லியம்கேரியின்  உடன்பிறந்த சகோதரியான  பாலிகேரி
அவர்கள். கேரி அவர்களின் ஆரம்ப ஊழியத்திலிருந்து இந்திய மக்கள்மீது அதிக
ஆர்வம்கொண்டு அவர்களின்  மீட்பிற்காக தொடர்ச்சியாக தேவனைநோக்கி  ஜெபித்த
சகோதரியே பாலிகேரி அவர்கள். கேரி அவர்கள் தனது இந்திய ஊழியத்தில்
சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும், சூழ்நிலைகளையும் தொடர்ச்சியாக
இங்கிலாந்திலுள்ள தன் சகோதரிக்கு கடிதங்கள் மூலம் எல்லாவற்றையும்
தெரியப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கடிதங்களைப்பெற்ற  அடுத்த கனமே அதற்காக தேவ சமூகத்தில் கண்ணீரோடு ஜெபிக்க
ஆரம்பித்து விடுவார் பாலிகேரி. வெகுவிரைவாக தன் சகோதரனுக்கு ஆறுதலையும்,
உற்சாகத்தையும் தரும் பதில் கடிதங்களை அனுப்ப ஒருபோதும் அவர்
தவறியதில்லை. தன் சகோதரியின் கடிதங்களை அநேக நாட்கள் காத்திருந்து பெற்று
அகமகிழ்ந்திருக்கிறார் கேரி. தனது ஊழியத்தின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும்,
தேவனின் ஆசீர்வாதத்திற்கும் பின்னால் தன் சகோதரியின் ஆழமான ஜெபங்கள் மிக
முக்கிய காரணம் என்பதை பலமுறை கேரி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
விக்கிரகங்களால்  நிறைந்த, அநேக மூடபழக்க வழக்கங்களை கொண்டிருக்கிற ஒரு
தேசம் மனந்திரும்புதலுக்கும், விசுவாசத்திற்குள்ளும்  வருவது மனித
முயற்சியினாலும் அர்பணிப்பினாலும் ஆகாது என்பதை பாலிகேரி நன்கு
அறிந்திருந்தார். பரத்திலிருந்து தேவ ஞானமும், வல்லமையும்  கேரிக்கு
அருளப்படாவிட்டால்  அவரது ஊழியத்தில் ஒரு  சிறிய செயல்பாடும் நிகழாது
என்பதை அறிந்த பாலிகேரி  அதற்காக ஊக்கத்தோடு  ஜெபிக்க ஆரம்பித்தார்.
கிட்டத்தட்ட 57 வருடங்களாக அனுதினமும் இந்திய மக்களுக்காக ஜெபத்தில்
தன்னை முழுவதுமாக அர்பணித்திருக்கிறார் பாலிகேரி.  இதில்
ஆச்சர்யபடுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லையே என்று நினைக்கலாம்.

இங்கே நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்  பாலிகேரி அவர்கள்
நம்மைப்போல் சாதரணமாக, சுகபோகமாக வாழ்ந்த நபர் கிடையாது. சிறுவயதிலே
வாதநோயினால் தனது இரண்டு கால்களையும் இழந்து முடவராக வாழ்ந்தவர். மிகவும்
ஏழ்மையான வறுமையில் தான் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திருக்கிறார். பல்வேறு
வியாதினால் பாதிக்கப்பட்டு மருத்துவ உதவி கூட கிடைக்கபெறாமல் அநேக
ஆண்டுகள் படுத்த படுக்கையாக கிடந்தவர். அவரால் இரண்டு வேலைகளை மட்டுமே
செய்ய முடியும், ஒன்று எழுதுவது மற்றொன்று ஜெபிப்பது. தனது
வாழ்க்கையிலேயே அநேக தாங்க முடியாத வேதனைகளும், துக்கங்களும்
சூழ்ந்திருக்கையில் முகமறியாத எந்த உறவுமில்லாத ஜனங்களுக்காக தேவ
சமூகத்தில் ஒரு வல்லமையான ஜெப போராட்டத்தை நடத்தியவர் தான் பாலிகேரி.
அவரின் கடைசி மூச்சு வரை இந்திய மக்களுக்காகவும், அவர்களின்
மீட்பிற்காகவும் ஜெபித்து கொண்டிருந்தார்  என்று அவர் அருகே
நின்றுகொண்டிருந்த சகோதரி ஒருவர் கூறியிருக்கிறார். திருச்சபை வரலாறு
முழுவதுமாக தலைசிறந்த ஒவ்வொரு போதகர்களுக்கும், தலைவர்களுக்கும் பின்னால்
இவரைபோன்ற அநேக ஜெப வீராங்கனைகளும், வீரர்களும் உண்டு.

இப்படிப்பட்ட  முடக்கப்பட்ட  முழங்கால்கள்  இல்லாத எந்த தேசமும்,
திருச்சபையும், ஊழியங்களும் ஒருபொழுதும் எழுப்புதலையோ, உயிர்மீட்சியையோ,
காண முடியாது. ஒவ்வொரு வெற்றியுள்ள ஊழியங்களுக்கும், எழுப்புதலுக்கும்
தேவனால் பயன்படுத்தப்படும் வல்லமையான ஆயுதம் இந்த மறைந்திருக்கும்
முழங்கால்களே!நீங்கள் அழிந்து கொண்டிருக்கும் உங்களது தேச மக்களுக்காகவும்,

கிறிஸ்துவின் ஊழியத்தை செய்யும் உங்களது போதகர்களுக்காகவும் இவ்வாறு
ஜெபிக்கிறீர்களா?

57 வருட ஜெபத்தின் பலன்கள்

·         40 இந்திய மொழிகளில் வேதாகம மொழிபெயர்ப்புகள்.

·         நான்கு மொழிகளில் சொல்லகராதிகள்.

·         செராம்பூர் இறையியல் கல்லூரி & பல்கலைக்கழகம்

·         ‘சதி’ என்கிற உடன்கட்டை ஏறுதல் அழிக்கப்படுதல்.

·         நவீன அச்சு இயந்திரம், நீராவி இயந்திரம், பல்துறை இலக்கிய புத்தகங்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சங்கங்கள் நிறுவுதல்.

சீர்திருத்தத்தை ஆரம்பிக்க வேண்டுமன்று வாஞ்சிப்பீர்களானால் முதலாவது
குனிந்து உங்கள் முழங்கால்கைளப் பாருங்கள். அவற்றில் இரத்தம் வழிகிறதா
என்பைத உறுதி செய்துகொள்ளுங்கள்.
                                                               – பால் வாஷர்.

Read More
22 Nov
0

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 5

ஒரு தேவனுக்கு மேல் அதிகமானோர் இருக்கிறார்களா?

பதில்:

ஒரே ஒரு தேவன் மாத்திரமே உண்டு. அவர் ஜீவிக்கிற ஆண்டவராகவே இருக்கிறார்.

வேத ஆதாரம்:

உபாகமம் 6:4

         இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்

எரேமியா10:10

        கர்த்தரோ  மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.

 

Read More
21 Nov
0

சங்கீதம் 95

சங்கீதம் 95:1-7

தேவனை ஆராதிப்பது மனிதனுடைய வாழ்க்கையில் மிக உயர்ந்த தேவையாக இருக்கிறது. மனிதனுடைய வாழ்க்கையில் உண்மையாக தேவனை ஆராதிப்பது என்பது ஒரு கடினமான காரியம். ஏன் தேவனை ஆராதிப்பது மனிதனுக்கு கடினமானது? உண்மையாய் தேவனை ஆராதிப்பது மனிதனுடைய இயலாமையல்ல மனிதனுக்கு தேவனை ஆராதிப்பதை மனிதன் விரும்புதில்லை என்பது தான் அடிப்படை காரணம். இன்றைக்கும் தேவனை ஆராதிப்பது மனிதனுக்கு கடினமாக தான் இருக்கிறது. சபைக்கு போகனுமா? என்ற எண்ணம் அதிகமாக எழும்புகிறது. மனிதனுக்கு தேவனின் வார்த்தையை கேட்டவும், அவருடைய சமுகத்தில் வரவும், அவரை துதிக்கவும், நன்றி செலுத்தவும் ஆராதிக்கவும் விருப்பமில்லை.

கிறிஸ்தவ ஆராதனை என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூட்டமாக கூடுவது. ஆராதனையில் நாம் தேவனை சந்திக்க வேண்டும். தேவனை ஆராதிப்பது என்பது தேவனுடைய சமுகத்திற்கு முன்வந்து, நம்மை தேவனுக்கு முன்பாக தாழ்மைப்படுத்துவது, தேவனின் சமுகத்தில் நம்மை காண்பிப்பதாகும்.  தேவனை ஆராதிப்பதில் நாம் கீழ்ப்படியாமையையும் அவிசுவாசத்தையும் தள்ளி, தேவன் மீதான நம்முடைய எதிர்புகளை அகற்றி, அவருக்கு கீழ்ப்படிந்து விசுவாசித்து துதித்து அவரில் களிகூருகிறோம். தேவனை ஆராதிப்பது எப்பொதும் மனந்திரும்புதலை உள்ளடக்கியுள்ளது. தேவனை ஆராதிப்பது மனிதனுடைய வாழ்வில் தொடர்சியான மனந்திரும்புதலை கொண்டுவருகிறதாயிருக்கிறது.

இந்த 95-ம் சங்கீதம் மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

95:1-5 மகிழ்ச்சியாய் தேவனை ஆராதிக்க வாருங்கள்

95:6-7 தேவன் நம்முடைய தேவன்

95:8-11 கடின இருதயத்தின் உதாரணம்

சங்கீதம் 95தேவனை ஆராதிக்க நம்மை அழைக்கிறது. சங்கீதம் 95ல் கூறப்பட்டிருக்கிற ஆராதனை தனிப்பட்ட ஆராதனையல்ல, அனைவரும் சேர்ந்து ஆராதிக்கும் ஆராதனைக்கு அழைக்கிறது. சங்கீதம் 95:1- கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள். சங்கீதம் 95:6-நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள். தேவனை ஆராதிப்பது ஒரு கூட்டாக கூடி செய்யும் செயல். ஏன்னென்றால், தேவன் எனக்கு மட்டும் தேவன் அல்ல, அவர் நம் எல்லாருடைய தேவன். ஒன்றாக கூடி தேவனை ஆராதிப்பது நமது விசுவாசத்தின் அடிப்படையாக இருக்கிறது.

இன்றைக்கு தேவனை ஆராதிப்பது தனிமனித விருப்பமாக மாறிவிட்டது. நான் தனியாக தேவனுக்குள்ளான உறவில் வாழ்கிறேன் சபைக்கு வருவதெல்லாம் அவசியமற்றது என்ற சிந்தனைக்குள்ளாக அநேகர் இருக்கிறார்கள். இந்த விருப்பமும் சிந்தனையும் வேத போதனைக்கு எதிரானது. வேதம் போதிக்கும் சத்தியம், நாம் தேவனை எல்லா தேவ பிள்ளைகளோடு இணைந்து அவரை ஆராதிக்க வேண்டும். உபாகமம்9:10 கூறுகிறது “அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர்  என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது”. இங்கு சபை கூடியிருந்த நாளில் என்ற பதம் ஆராதனையை குறிக்கிறது. தேவனுடைய கட்டளை அவருடைய பிள்ளைகள் ஒன்றாக கூடி அவரை ஆராதிக்க வேண்டும்.

தேவனை நாம் எவ்வாறு ஆராதிப்பது என்று இரண்டு காரியங்களையும் , ஏன் ஆராதிக்க வேண்டும் என்று நான்கு காரியங்களையும் சங்கீதம் 95 கூறுகிறது.

தேவனை நாம் எவ்வாறு ஆராதிப்பது என்றுசங்கீதம் 95  கூறும் இரண்டு காரியங்கள்

முதலாவதாக, ஆராதனை என்பது தேவனிடமாய் திரும்புதல். 

சங்கீதம் 95:1 வாருங்கள் மற்றும், 95:2  வந்து என்ற வார்த்தையில் அழைப்புவிடுக்கப்படுகிறது. ஆராதனையில் நாம் நம்முடைய தனிப்பட்ட  வேலைகள், பொறுப்புகள், செயல்களை விட்டு தேவனுடைய சமுகத்தில் திரும்புகிறோம். தேவனிடமாய் நம் வாழ்வை திருப்புகிறோம்.  தேவனிடமாய் நம் வாழ்வை திருப்பவில்லை என்றால் நம்முடைய வாழ்வின் மற்ற எல்லா காரியங்களும் சரியான பாதையில் இருக்காது. தேவனி ஆராதிப்பது மிக முக்கியமான செயல். ஆராதனை என்பது தேவன் பக்கமாய் திரும்புதல். 

இரண்டாவதாக, ஆராதனை என்பது ஆழமானது. சங்கீதம் 95:1 கெம்பீரமாய் 95:2 ஆர்ப்பரித்து என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த சங்கீதம் தேவாலயத்தில் செய்யப்படுகிற ஆராதனையை பிரதிபலிக்கிறது. ஆராதனை உற்சாகமாக நிகழ்கிறது. உற்சாகம் என்ற வார்த்தையை தவறாக புரிந்துக்கொள்ள கூடாது. உற்சாகம் நடனத்தையோ, குதித்தலையோ, விசில் அடிக்கிறதையோ, கத்துகிறதையோ குறிக்கவில்லை. உற்சாகமான ஆராதனை என்பது தேவன் மீதான ஆவலையும், அன்பையும் வெளிப்படுத்துதல்.  தேவன் மீதும், அவருடைய வழிகளையும் விரும்பி அவரை ஆராதித்தல். தேவனுடைய வழிகளை விரும்புதல் நம்முடைய இருதயத்தின் மையமாக இருக்க வேண்டும். ஆராதனையில் உணர்ச்சிகளை விட இருதயம் மிக முக்கியமானது. ஆராதனை ஏன் ஆழமானது என்றால், ஆராதனை தேவனைப் பற்றியது. 

தேவனிடமாய் திரும்பி அவரையும் அவருடைய வழிகளையும் நேசித்து தேவனை ஆராதிக்க வேண்டும் என்று சங்கீதம் கற்றுத்தருகிறது. 

ஏன் நாம் தேவனை ஆராதிக்க வேண்டும் நான்கு காரியங்களை இந்த சங்கீதம் கூறுகிறது.

முதலாவதாக, தேவன் பெரியவராயிருப்பதால் அவரை ஆராதிக்க வேண்டும். தேவன் பெரியவர் என்பதை அங்கீகரித்தல். தேவனுடைய எல்லையற்ற மகிமையையும்,  எல்லையற்ற வல்லமை, எல்லையற்ற ஞானம், எல்லையற்ற பரிசுத்தம், எல்லையற்ற நீதி,எல்லையற்ற நன்மை, எல்லையற்ற உண்மை, எல்லையற்ற அன்பு, எல்லையற்ற இரக்கம், எல்லையற்ற பொறுமை ஆகிய எண்ணற்ற குணாதிசயங்களை அங்கீகரித்தல். இப்படி அங்கீகரித்து ஆராதிப்பது தேவன் மட்டுமே பூரணமானவர் என்று வெளிப்படுத்துகிறது. 

இரண்டாவதாக தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும் என்றால் தேவன் ஒப்பிடப்படமுடியாதவர்.  சங்கீதம் 95:3 “கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்“. அவருடைய மகிமையை யாரோடும் ஒப்பிடவே முடியாது. இந்த உலகத்தில் உள்ளவைகளுக்கு அப்பாற்பட்டவர். மனிதன் செய்யும் எந்த தேவர்களாலும் அந்த மகிமைக்கு நெருங்க முடியாது. தேவன் எல்லாவற்றிக்கும் மேலானவர். 

மூன்றாவதாக, தேவன் எல்லாவற்றையும் படைத்து ஆளுகிறார். சங்கீதம் 95:4-5 “பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள். சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று“. தேவன் தான் படைத்தவர். ஒன்றுமில்லாமையில் இருந்து நாம் காண்கிற காணாத அனைத்தயும் படைத்திருக்கிறார். எந்த மனிதனாலும் செய்ய முடியாத கிரியையை தேவனுடைய கரம் செய்தது. படைத்து மாத்திரம் அல்ல, படைத்த அனைத்து படைப்பையும் இன்று வரை முழுவதுமாக ஆளுகை செய்து, பாராமரித்து வருகிறார். ஆகவே படைப்புகளாகிய நாம் படைத்தவரை மட்டுமே ஆராதிக்க வேண்டும்.சங்கீதம் 95:6 “நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு  முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்“.

நான்காவதாக, சங்கீதம் 95:7 கூறுகிறது, அவர் நம்முடைய தேவன். “அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே“. தேவனை ஆராதிக்கும் போது அவருடைய சமுகத்தில் நாம் இருக்கிறோம், அப்பொழுது அவர் நம்மோடு அவருடைய வார்த்தையின் மூலமாக நம்மிடத்தில் பேசுகிறார். அவருடைய வார்த்தையின் மூலமாக தன்னை நமக்கு வெளிப்படுத்தி, நம்மோடு உறவை ஏற்படுத்துகிறார். அவருடைய வார்த்தையை கேட்டு கீழ்ப்படியும் போது தேவன் நம் மீது பிரியமாயிருக்கிறார். ஏசாயா 66:2 “என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர்  சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்“.

மனிதனுடைய பிரதான வேலையே தேவனை ஆராதிப்பது மட்டும் தான். கூட்டாக கூடி ஆராதிப்பது அவசியமானது. அதை தவறவிடக்கூடாது. எந்த சூழ்நிலையிலும் சபையில் கூடி தேவனை ஆராதிப்பதை நிறுத்திவிடக்கூடாது. நாம் தேவனுடைய கரத்தில் இருக்கிறோம். இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார், பரிசுத்த ஆவியானவர் நம்மோடு இருக்கிறார். ஆகவே நாம் தேவனை தொழுதுக்கொள்வோம். 

 

Read More
21 Nov
0

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 4

தேவன் எப்படியிருக்கிறார்?

பதில்

தேவன் ஆவியாயிருக்கிறார். அவர் நித்திய, மாறாத, ஞானம், வல்லமை, பரிசுத்தம், நீதி, நம்மை, உண்மை கொண்டவராக இருக்கிறார். 

வேத ஆதாரம்

யோவான் 4:24 

    தேவன் ஆவியாயிருக்கிறார்

யோபு 11:7

    தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?

சங்கீதம் 90:2

    பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.

1தீமோத்தேயு 1:17

    நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

யாக்கோபு 1:17

    நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

யாத்திராகமம் 3:14

    அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.

சங்கீதம் 147:5

    1. நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.

வெளிப்படுத்தல் 4:8

      1. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய

    கர்த்தர்

       பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

 

Read More