Blog

01 Aug
0

நீதிமான் என்ன செய்வான் ?

சங்கீதம் 1:2

“கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” 

1. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து:

சங்கீதம் முழுவதிலும், கர்த்தருடைய வேதம் என்ற பதம் கடவுளுடைய வார்த்தை அடங்கிய முழு வேதத்தைக் குறிக்கிறது. “கர்த்தருடைய வேதம்” என்பது பரிசுத்த வேதாகமத்தின் முதல் ஐந்து நூல்களுல் குறுகிவிடவில்லை. நீதிமான் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாய் இருக்கிறான்.

அ) உன்னை எது மகிழ்விக்கிறது? உன்னை எது உற்சாகப் படுத்துகிறது? உனக்கு எது முக்கியம் என்பதை கண்டுபிடிக்க இது ஒரு நல்ல வழி. சில மனிதர்களுக்கு, தனிப்பட்ட இன்பம் தான் அவர்களை மகிழ்விக்கும் காரியமாக இருக்கும். மற்ற சிலருக்கு, குடும்பத்தோடு இருப்பதும், நண்பர்களோடு இருப்பதும் பிரியமாக இருக்கும். ஆனால் நீதிமானோ, அவனுடைய ஆசை கர்த்தருடைய வேதத்தில் இருப்பதை கண்டுபிடிக்கிறான்.

ஆ) “மனிதனுக்கு நிச்சயம் சில ஆசைகள், சில உயர்வான ஆசைகள் இருக்கும். அவனுடைய இருதயம் ஒருபோதும் வெறுமையாக இருக்காது. சிறப்பான காரியங்களால் நிரப்பப்படாவிட்டால், அது தகுதியற்றதாலும் மற்றும் ஏமாற்றங்களாலும் நிரம்பும்.” (ஸ்பர்ஜன்). இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தைதான் மிகவும் சிறப்பானது.

இ) ஒரு மனிதன் எதிலாவது பிரியப்பட்டால், அதை செய்யும்படியோ அல்லது அதை விரும்பும்படியோ அவனுடைய செயல் காணப்படும், நீங்கள் அவனை வற்புறுத்த தேவை இல்லை. அவன் அவைகளையெல்லாம் தானாகவே செய்வான். தேவனுடைய வார்த்தையில் நீ எவ்வளவு பிரியமாக இருக்கிறாய் என்பதை நீ அதற்கு எவ்வளவு ஏங்குகிறாய் என்பதை வைத்து அளவிட்டு விடலாம்.

தேவனுடைய வார்த்தையில் நீ எவ்வளவு பிரியமாக இருக்கிறாய் என்பதை நீ அதற்கு எவ்வளவு ஏங்குகிறாய் என்பதை வைத்து அளவிட்டு விடலாம்.

2. இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிறான்:

நீதிமான் தேவனுடைய வார்த்தையை சிந்திக்கிறான். அவன் வெறுமனே அவைகளை கேட்டு மறந்துவிடுவதில்லை; அவன் அதை தியானிக்கிறான். கிறிஸ்தவன் என்பவன் தேவனுடைய வார்த்தையை தியானிக்க வேண்டும்.

அ) நவீன கால தியானங்களில், மனத்தை வெறுமையாக்குவதே இலக்காக இருக்கிறது. இது ஆபத்தானது. ஏனென்றால், வெறுமையான மனம் என்பது வஞ்சனைக்கும் அசுத்த ஆவிக்கும் திரந்த அழைப்பாக காணப்படும். ஆனால், கிறிஸ்தவ தியானத்தில், தேவனுடைய வார்த்தையால் உன் மனதை நிரப்புவதே இலக்கு. ஒவ்வொரு வார்த்தையையும் பதத்தையும் கவனமாக சிந்திப்பதின் மூலமாகவும், அதை அவன் வாழ்வில் அப்பியாசப்படுத்துதலின் மூலமும், அதை திரும்பி கர்த்தரிடம் ஜெபிப்பதின் மூலமும் இது சாத்தியப்படும்.

ஆ) “தியானம் என்பது கர்த்தருடைய வார்த்தையை அசை போட்டு அதன் இனிமையையும் போஷாக்கையும் இருதயத்திலும் வாழ்விலும் பெறுவது: இதுவே தெய்வபக்தியுள்ள மனிதன் கனிகொடுக்கும் வழி.” (ஸ்பர்ஜன்)

தியானம் என்பது கர்த்தருடைய வார்த்தையை அசை போட்டு அதன் இனிமையையும் போஷாக்கையும் இருதயத்திலும் வாழ்விலும் பெறுவது: இதுவே தெய்வபக்தியுள்ள மனிதன் கனிகொடுக்கும் வழி.

இ) அநேகரிடம் இருக்கும் குறைபாட்டிற்கு காரணம் அவர்கள் வாசிக்கிறார்களே தவிற தியானிப்பது இல்லை. “வாசிப்பது மாத்திரம் நமக்கு நன்மையைக் கொண்டுவருகிறதில்லை; ஆன்மா அதனால் போஷிக்கப்பட்டு அதை அசைப்போட வேண்டும். ஒரு பிரசங்கி ஒருமுறை தான் இருபதுமுறை வேதத்தை முழங்காளில் நின்றபடியே வாசித்ததாகவும் தெரிந்துகொள்ளுதல் என்ற போதனையை ஒருபோதும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் என்னிடம் கூறினார். அது நடக்காது. வாசிப்பதற்கு அது மிகவும் அசௌகரியமான நிலை. அவர் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து வாசித்திருந்தால் அவரால் ஒருவேலை புரிந்துகொள்ள முடிந்திருக்கும்.” (ஸ்பர்ஜன்)

{ஈ) இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தை தியானிப்பது என்பது, நீதிமான் நாள் முழுவதும் அவருடைய வார்த்தையினால் நிறைந்திருக்கிறான் என்பதை குறிக்கிறது.

Pastor Amresh Semurath

Read More
29 Jul
0

நீதிமானின் குணாதிசயம்

சங்கீதம் 1:1-2

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

 

முதலாம் சங்கீதத்தின் முதலாம் வசனம் நமக்கு இரண்டு காரியங்களை கூறுகிறது

(1) நீதிமானின் ஆசீர்வாதம் (2) நீதிமான் எப்படியிருக்கமாட்டான் என்பதை கூறுகிறது.

பாக்கியவான் என்ற வார்த்தை மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு என்ற சிந்தனையை உள்ளடக்கியிருக்கிறது. பாக்கியவான் என்ற வார்த்தை எபிரெய மொழியில் சரியாக இருக்க வேண்டும் அல்லது நேராக இருக்க வேண்டும் என்ற நேரடி அர்த்தத்தைக்கொண்டுள்ளது. பாக்கியவான் என்று கூறும் போது ஒரு ஆண் அல்லது ஒரு பெண் தேவனுக்குநேராக மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும் இருப்பதை தெரிவிக்கிறது. பாக்கியவான் என்ற வார்த்தை ஒற்றை ஆசீர்வாதத்தை குறிக்காமல் பன்மையான ஆசீர்வாதத்தை குறிக்கிறது.

இந்த வசனம் ராஜா பாக்கியவான், ஞானி பாக்கியவான், ஐஸ்வரிவமுள்ளவன் பாக்கியவான் என்று கூறாமல் மனிதன் பாக்கியவான் என்று கூறுகிறது. ஏழையினாலும், வரலாற்றில் மறக்கப்பட்டவர்களாலும், கண்டுக்கொள்ளபடாதவர்களாலும் பிரபலமாகாதவர்களும் இந்த ஆசீர்வாதத்தை அடையமுடியும்.

இரண்டாவதாக, இந்த வசனத்தில் கூறப்பட்ட நீதிமான் எப்படிருக்கமாட்டான்.

நீதிமான் சில காரியங்களை செய்யமாட்டான். அவன் துன்மார்க்கனுடைய ஆலோசனையில் நடவாமல், நில்லாமல், உட்காராமல் இருப்பார்கள்: இரட்சிக்கப்பட்ட மனிதனும் இரட்சிக்கப்படாத மனிதனும் அவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள், எப்படி நடந்துகொள்கிறார்கள், யாரைச் சேர்ந்தவர்கள் என்பதில் வித்தியாசமாக இருக்கிறார்கள். ஆதாம் கிளார்க் இங்கே ஒரு முன்னேற்றத்தைக் கண்டு எழுதினார் “இந்த வசனத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பெரிய பாடம், பாவம் முற்போக்கானது; ஒரு தீய நாட்டம் அல்லது செயல் மற்றொன்றுக்கு வழிவகுக்கிறது. கெட்ட ஆலோசனையின்படி செயல்படுபவர் விரைவில் பாவச் செயல்களைச் செய்யலாம்; பாவச் செயல்களுக்குத் தன்னைக் உட்புகுத்தி கடவுளிடமிருந்து முற்றிலும் விசுவாச துரோகத்துடன் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம்.”

ஆலோசனை:

இரட்சிக்கப்பட்ட மனிதனுக்கு இரட்சிக்கப்படாத மனிதன் ஆலோசனை கொடுப்பான். ஆனால் அவன் அதை ஏற்றுக்கொண்டு அந்த ஆலோசனையின்படி நடக்கமாட்டான். பலவிதமான ஆதாரங்களில் இருந்து நமக்கு வரும் அனைத்து அறிவுரைகளாலும், இரட்சிக்கப்பட்டவன் பகுத்தறிவுள்ளவன், மேலும் தேவபக்தியற்றவர்களின் ஆலோசனையிலிருந்து விலகி இருப்பது எப்படி என்பதை அறிந்தவன். அநேகர் இதில் தோல்வியடைகிறார்கள். வருகிற ஆலோசனை தெய்வபக்தியானதா அல்லது தெய்வபக்தியற்றதா என்பதை நிதானிப்பதில்லை. அவர்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றிய ஆலோசனைகளைக் கேட்கிறார்கள், மேலும் “இது தெய்வபக்தியானதா அல்லது தெய்வபக்தியற்ற அறிவுரையா?” என்று கருதாமல் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் அல்லது ஒப்புக்கொள்ளாமலிருக்கிறார்கள். சங்கீதம் 119:24 கூறுகிறது,“உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது”.

வழி:

துன்மார்க்கர்கள் நிற்கும் இடத்தில் ஒரு பாதை உள்ளது, அந்த பாதையில் நீதிமான் இல்லை என்பதை நீதிமான் அறிவார்கள். பாதை என்பது ஒரு வழி, ஒரு சாலை, ஒரு திசையைப் பற்றி பேசுகிறது. பாவிகள் பயணிக்கிற அதே திசையில் நீதிமான் பயணிக்கிறதில்லை. நீதிமான் அநேகர் பயணிக்காத வழியில் பயணம் செய்ய பயப்படுவதில்லை. தேவன் ஒரு பாதையை வைத்திருக்கிறார் அதில் பயணிப்பது நல்லது, ஆகவே தான் இயேசு மத்தேயு 7:13-14 ல் கூறுகிறார்,“ இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.”

உட்காருதல்:

ஏளனமானவர்கள் உட்கார்ந்து கடவுளின் மக்களையும் கடவுளின் விஷயங்களையும் விமர்சிக்க விரும்புகிறார்கள். நீதிமான் அந்த ஆசனத்தில் உட்காரமாட்டான்!  இந்த பூமியில் கிறிஸ்தவர்கள் எப்பொழுதும்  பூரண பரிசுத்தவான்கள்  அல்ல.  அதனால், அவர்கள் மீது குறைகளைக் கண்டுபிடித்து அவர்களை நயவஞ்சகர்கள் என்று அழைப்பது எளிது.  ஆனால் கர்த்தர் நீதிமான்களை அறிவார்.  கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்.  கர்த்தர் நீதிமான்களை நேசிக்கிறார்.  மேலும் அந்த நித்திய நாள் வரப்போகிறது, அப்போது அவர் நீதிமான்களையும், பரிபூரணபாவமற்றவர்களாகவும், மகிமையுள்ளவர்களாகவும் ஆக்குவார்.

Read More
25 Mar
0

கடைசி நாட்கள்

இன்றைய சூழலில் உலகமெங்கும் உள்ள நாடுகளில் மனிதர்கள் தங்களுடைய தேவைக்காகவும், வசதிக்காகவும் இயற்கை வளங்களை எல்லாம் அதிகளவில் சேதப்படுத்தி வருவதால் சுற்றுச்சூழல் மிகவும் மோசமடைவதால் பருவ நிலைகளில் பெரிய மாற்றங்களும் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. உதாரணமாக, பெரிய அளவில் எரிமலைக் குழம்புகள் வெடித்து சிதறுதல், வழக்கத்திற்கு அதிகமான மழைப் பொழிவு, ஆறுகளில் ஏற்படும் வெள்ளம், மலைச் சரிவு, கடுமையான பனிப் பொழிவு, கடும் குளிர், கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயில், கடுமையான வறட்சி, காட்டுத் தீ, சுனாமி பேரலைகள், பூமியதிர்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் முந்தைய காலங்களில் நடந்ததைவிட அதிக அளவில் நிகழ்கிறது.

இயற்கை நிகழ்வுகளினால் ஏற்படும் பாதிப்புகள் ஒரு பக்கம் என்றால் மற்றொரு புறம் மனிதர்கள் வாழும் இடங்களில் எல்லாம் நாடுகளுக்கிடையே, மாகாணங்களுக்கிடையே, மாநிலங்களுக்கிடையே, மாவட்டங்களுக்கிடையே, வட்டாரங்களுக்கிடையே, கிராமங்களுக்கிடையே, தெருக்களுக்கிடையே, வீடுகளுக்கிடையே, குடும்ப உறவினர்களுக்கிடையே, உடன்பிறந்தோர்களுக் கிடையே, நன்பர்களுக்கிடையே ஏற்படும் அதிகார மோதல், எல்லைப் பிரச்சனைகள், போட்டி பொருளாதாரம், தீவிரவாதம், பிரிவினைவாதம், மதம், மொழி, இனம் ஆகியவற்றால் ஏற்படும் சண்டைகள், ஜாதிய சிந்தனை, ஏற்றத்தாழ்வு என ஒவ்வொரு நாளும் மோதல்களும், சண்டைகளும், கலவரங்களும், வன்முறைகளும், கொலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இத்தகைய போக்கானது குறையாமல் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே வருகிற செய்திகளை எல்லாம் நாம் அன்றாடம் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பார்க்கின்றபோது வேதத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்த நாட்கள் தான் உலகத்தின் கடைசி நாட்களாக இருக்குமோ என்று கிறிஸ்தவர்களில் அநேகர் நினைப்பதுண்டு. கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது கிறிஸ்துவையும், வேதத்தையும் நம்பாதவர்களில் பலரும்கூட உலகில் நடைபெற்று வரும் மோசமான நிகழ்வுகளைப்பற்றி சொல்லும்போது கலியுகம் என்று சொல்கின்றார்கள்.

அப்படியானால் இப்பொழுது நடைபெற்று வரும் நிகழ்வுகள் தான் உலகத்தின் கடைசி நாட்களா? அல்லது கடைசி நாட்களுக்கு இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகுமா? என்பதை எதனடிப்படையில் உறுதிசெய்ய முடியும். கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் ஆதாரமாக இருப்பது வேதம் மட்டும் தான். ஆகவே, நாமும் உலகத்தின் கடைசி நாட்களைப்பற்றி வேதத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்பதை கவனமாக பார்த்து ஆராய்ந்து அதன் மெய்த்தன்மையை அறிந்து விசுவாசத்தில் இன்னும் அதிகமாக வளருவோம்.

நீங்கள் வேதத்தில் உள்ள வசனங்களை தியானிக்கும்போதும், படிக்கும் போதும், உங்கள் நினைவில் எப்பொழுதும் இருக்க வேண்டியது என்னவென்றால்:

  1. வேதத்தில் சொல்லப்பட்ட வசனத்தை அதன் பின்னணியோடு இணைந்து படித்து அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  2. நீங்கள் படிக்கும் குறிப்பிட்டதொரு வேத பகுதியில் சொல்லியிருக்கும் வசனத்திற்கு போதுமான விளக்கம் இல்லாதபோது, நீங்களாகவே அதற்கு ஒரு புதிய விளக்கத்தைக் கொடுக்காமல், அதே சத்தியத்தை சொல்லக்கூடிய மற்ற வேதப் பகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
  3. உங்களுடைய அனுபவத்தின் அடிப்படையிலும் அறிவின் அடிப்படையிலும் வேத சாத்தியங்களை புரிந்துகொண்டு அதற்கு விளக்கம் அளிக்க ஒருபோதும் முற்படகூடாது.
  4. சரியான முறையில் உங்களால் வேதத்தின் சாத்தியங்களை படித்துப் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்றால், திருச்சபையில் உள்ள போதகரிடமோ வேதத்தில் கற்றுத் தேர்ந்த விசுவாசிகளிடமோ கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்.
  5. வேத வியாக்கியானப் புத்தகங்கள் மற்றும் ஆவிக்குரிய தலைவர்கள் எழுதியுள்ள நல்ல புத்தகங்களை தேடி கண்டறிந்து அதை வாசித்து பயன் பெறலாம்.

கடைசி நாட்களைப் பற்றி பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் அநேக வேத பகுதிகளில் குறிப்பிடப்பட்டிருந் தாலும், அவைகள் அனைத்தும் ஒரே கருத்தினை சொல்லவில்லை என்பதை அறிந்து கொள்ளவேண்டியது மிக அவசியம். பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் கடைசி நாட்கள் என்பது உலகத்தின் கடைசி நாட்களில் நடைபெற போதும் சம்பவங்களை குறிக்கவில்லை.

கடைசி நாட்களைப் பற்றி பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேத பகுதிகள்:

ஆதியாகமம் 49:1 ” யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்.”

நெகேமியா 8:18 “முதலாம் நாள் தொடங்கிக் கடைசிநாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளோவெனில், முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது.”

ஏசாயா 2:2 ” கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.”

மீகா 4:1 ” ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.”

உதாரணமாக, பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் 49:1 ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்  கடைசி நாட்கள் என்பதற்கான விளக்கம் என்னவென்றால், யாக்கோபு வயது முதிர்ந்த நாட்களில் தான் மரிப்பதற்கு முன்பாக தன்னுடைய 12 மகன்களையும் அழைத்து அவர்களைப் பற்றி தீர்க்கதரிசனமாக சொன்ன வார்த்தைகளாகும். இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் கடைசி நாட்கள் என்கிற வார்த்தைக்கு உலகத்தின் கடைசிநாட்களில் நடைபெறப் போகும் சம்பவங்களை குறிப்பிடவில்லை என்பதை அதன் தொடர்ச்சியாக வரும் மற்ற வசனங்களை வாசிக்கும் போது உங்களால் அதன் அர்த்தத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

கடைசி நாட்கள் அல்லது கடைசிக் காலம் பற்றி புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேத பகுதிகள்:

மத்தேயு 24:3  (உலகத்தின் முடிவு) ” பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.”

யோவான் 6:39,40 “அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.”

யோவான்7:37 “பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.”

யோவான்11:24 “அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்”

யோவான்12:48 “என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்”

யாக்கோபு 5:3 “உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.”

அப்போஸ்தலர் 2:16,17 “தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;”

 2 தீமோத்தேயு 3:1-5 “மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.”

எபிரெயர் 1 1-2 ” பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். “

புதிய ஏற்பாட்டில் கடைசிக் காலம் அல்லது கடைசி நாட்கள் என்பது எந்தக் காலத்தைக் குறிப்பிடுகிறது:

புதிய ஏற்பாட்டில் கடைசி நாட்கள் பற்றி குறிப்பிடும்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக வாழ்ந்தபோது அவருடைய சீடர்கள் அவரிடத்தில் உலகத்தின் முடிவில் என்ன விதமான சம்பவங்கள் இந்த பூமியில் நடக்கும் அதற்கான அடையாளங்கள் என்ன என்று மத்தேயு 24 -ஆம் அதிகாரத்தில் கேட்கிறார்கள், அதற்கு இயேசு கிறிஸ்து சொல்லும் விளக்கத்தையும் பார்க்கலாம்.

உலகத்தின் கடைசி நாட்களும் உலகத்தின் முடிவும் ஒன்றா? அல்லது இரண்டும் வெவ்வேறான அர்த்தமுள்ளதா? என்கிற கேள்வியும், குழப்பமும் நம்மில் பலருக்கும் இருக்கலாம். உலகத்தின் கடைசி நாட்களிலும் கடைசி நாட்களும், உலகத்தின் முடிவும் ஒன்றல்ல.

உலக சரித்திரமானது இயேசு கிறிஸ்துவைக் கொண்டு இரண்டு நிலையாக பிரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலங்களை கி.மு. என்றும், கிறிஸ்து பிறந்து வாழ்ந்து, மரித்து, உயிர்த்தெழுந்ததற்கு பிந்தின காலங்களை – கி.பி என்றும் பிரிக்கப்பட்டது. வேதம் இயேசு கிறிஸ்துவுக்கு பின் உள்ள காலத்தை கடைசி நாட்கள் என்று குறிப்பிடுகிறது .

பழைய ஏற்பாட்டின் காலம் முழுவதும் மோசேயின் நியாயப்பிரமாணங்கள், தீர்க்கதரிசனங்கள், சங்கீதங்கள் மற்றும் தரிசனங்கள் மூலம் முன்னுரைக்கப்பட்டவைகள் அனைத்தும் வரப்போகிறவரான உலக இரட்சகரான மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவை பற்றினவைகளாகும். பகுதி பகுதியாக பிதாக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு வந்த மீட்பின் இரகசியமானது இந்தக் கடைசி நாட்களில் குமாரனாகிய  இயேசு கிறிஸ்து மூலமாய் சுவிசேஷத்தின் மூலம் யூதர்களுக்கும், புறஜாதியினருக்கும் முழுவதுமாக வெளிப்படுத்தப்பட்டது. இந்த நாட்களை நான் கடைசி நாட்கள் என்று வேதம் குறிப்பிடுகிறது.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, சிலுவை மரணம், உயிர்தெழுதல் மற்றும் பரமேறுதலுக்கு பிறகு இயேசுவின் 11 சீடர்களும் பெந்தகொஸ்தே நாளில் எருசலேமில் ஒன்றுகூடி பரிசுத்த ஆவியானவருக்காக காத்திருந்தபோது கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று யோவேல் தீர்க்கதரிசியின் மூலம் முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசனமானது அன்றைய தினம் நிறைவேறியது (அப்போஸ்தலர் 2:16,17).

ஆகவே கடைசி நாட்கள் என்பது இன்றைய நாட்களையோ இதற்கு பின்னாக வரப்போகும் நாட்களைப் பற்றியோ குறிப்பிடாமல் இயேசு கிறிஸ்துவுக்கு பின்பு உள்ள நாட்களையோ உலகத்தின் கடைசி நாட்கள் என்று குறிப்பிடுகிறது.

உலகத்தின் கடைசி நாட்களில் நடைபெறும் அடையாளங்கள் என்று வேதம் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு சம்பவங் களும் உலகத்தில் தவறாமல் நடந்தேறி வருவதன் மூலம் நாம் அதை உறுதி செய்ய முடியும். ஏனென்றால் வேத வாக்கியங்கள் தேவ ஆவியினால் கொடுக்கப்பட்டது. வேதத்தை தந்த தேவன் நித்தியமானவர், பொய்யுரையாதவர், மாறாதவர், உண்மையுள்ளவர், எனவே, அவர் அருளிய வார்த்தையும் மாறாதது, உண்மையுள்ளது.

இயேசு கிறிஸ்து உலகத்தில் இருந்தபோது வேதத்தின் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றின் மூலமும் நாம் அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாது இயேசு, வானமும், பூமியும் ஒழிந்து போனாலும் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோவதில்லை என்கிறார்.

அந்திக் கிறிஸ்து உலகத்தின் முடிவுக்கு அடையாளமா?

இன்றைக்கும் நம்மிடையே அநேக கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தின் முடிவு நாட்களில் அந்திகிறிஸ்து வருவான் என்று நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். அந்திக் கிறிஸ்து என்பது ஒரு தனி நபர் என்றும், அவர் முழு உலகத்தின் மீதும் ஆளுகை செய்யும் அதிகாரத்தை கொண்டவராக இருப்பார் என்றும், அவர் கிறிஸ்துவுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக செயல்படுவார் என்றும் நம்புகின்றார்கள்.

ஆனால், அந்திக் கிறிஸ்துவைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது என்று பார்க்கும்போது ( 1 யோவான் 2: 18, 22; 4:3; 2 யோவான் 7)   ஆகிய வசனங்களில் யோவான் இவ்விதமாக குறிப்பிடுகிறார்: மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக் கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே. அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த இயேசுவின் சீடர்களில் ஒருவரான யோவான், தான் வாழ்ந்த சம காலத்தையே அவர் கடைசி காலம் என்றும், அவரது நாட்களிலேயே, இந்த உலகத்தில் அநேக அந்திக்கிறிஸ்துகளும் இருந்தார்கள் என்றும் குறிப்பிடுகின்றார். அந்திக்கிறிஸ்து என்பது ஒரு தனி நபரல்ல. மாறாக, யாரெல்லாம் மாம்சத்தில் வந்த இயேசுவை கிறிஸ்து அல்ல என்று சொல்கின்றார்களோ அவர்கள் அனைவருமே அந்திக்கிறிஸ்து தான் என்கிறார்.

இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை:

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் இருந்தபோது தன்னுடைய 12 சீடர்களோடு அவர் எருசலேம் தேவலாயத்தை பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்படும்போது, அவருடைய சீடர்கள் அந்த எருசலேம் தேவலாயத்தின் கல்லுகள் எப்படிப்பட்டது என்று கேட்டதற்கு, இயேசு சொன்ன பதில், இதோ இந்தப் பெரிய கட்டிடங்களைப் பார்க்கின்றாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்கிறார். அப்பொழுது அவருடைய சீடர்களில் பேதுருவும், யாக்கோபும்,யோவானும்,அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்து வந்து இவைகள் எப்பொழுது நடக்கும்? அதற்கான அடையாளங்கள் என்ன என்று கேட்டார்கள் (மத்தேயு 24 , மாற்கு 13, லூக்கா 21:5-37).

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது இப்போதுள்ள இந்த உலகம் முடிவுக்கு கொண்டுவரப்படும்.உலகத்தில் நடைபெறும் பல்வேறு சம்பவங்களை அதற்கு முன் அடையாளங்களாக இயேசு மத்தேயு 24, மாற்கு 13, லூக்கா 21:5-37 ஆகிய வேதப்பகுதிகளில் சொல்லியிருக்கிறார். இயேசு கிறிஸ்து மகிமைப் பொருந்தினவராக வானத்திலிருந்து இறங்கி வரும் அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான். பரலோகத்தில் உள்ள தூதர்களும் அறியார்கள். குமாரனும் அறியார் (மாற்கு 13:32). உலகத்தின் முடிவில் இயேசு கிறிஸ்துவானவர் வான மண்டல சேனைகளோடு எக்காள சத்தத்தோடும் இந்த உலகத்தை நியாயந்தீர்க்கும் நீதியுள்ள நியாதிபதியாக வருவார் என்று வேதம் குறிப்பிடுகிறது. அதன் பிறகு புதிய பூமியும், புதிய வானமும் உருவாக்கப்படும். அது நித்திய வாழ்வாக இருக்கும் என்று வேதம் முன்னுரைத்துள்ளது.

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றி குறிப்பிடும் போது வேதம் பல முறை எச்சரிக்கையாயிருங்கள், வஞ்சிக்கப்படாதிருங்கள், விழித்திருங்கள், வேண்டிக்கொள்ளுங்கள், ஜெபம்பண்ணுங்கள் என்று குறிப்பிடுவதை கவனிக்க வேண்டும்.

உலகத்தின் கடைசி நாட்களும் அதன் முடிவும்:

நிறைவாக உலகத்தின் முடிவில் என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இயேசுவின் சீடர்களுக்கு இருந்ததுபோல நம்மில் பலருக்கும்கூட இருக்கலாம். அது முக்கியமல்ல, வேதத்தில் சொல்லியிருக்கும் எல்லா வாக்குத்தத்தங்களும், தீர்க்கதரிசனங்களும் வரலாற்றில் தவறாமல் மிகச் சரியாக நிறைவேறிக்கொண்டே வருகிறது.

இயேசுவின் இரண்டாம் வருகையில் நீங்கள் அவரோடகூட நிதியத்தில் வாழப் போகின்றீர்களா? அல்லது அவர் தரும் நித்திய தண்டனையைப் பெற்றவர்களா நித்திய நரகத்தில் இருக்கப் போகின்றீர்களா? என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

பாவிகளை இரட்சிக்கும்படி மாம்சத்தில் வந்த மனுஷகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசியாத வரைக்கும் நீங்களும் பிசாசின் பிள்ளையாகத்தான் இருப்பீர்கள். இன்று நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் சகல விதமான வசதி வாய்ப்புகளோடும், சமுதாயத்தில் மிக முக்கியமான பொறுப்புகளை வகித்து வந்தாலும், எல்லாராலும் மதித்துப் போற்றக்கூடியவராக இருந்தாலும்,எண்ணற்ற நன்மைகளை மற்றவர்களுக்கு செய்திருந்தாலும்கூட நீங்கள் ஒருபோதும் நித்திய மோட்ச வாழ்வை பெறமுடியாது என்று வேதம் சொல்கிறது.

நீங்கள் செய்த எல்லா பாவத்திற்கான தண்டனையையும் இயேசு கிறிஸ்து சிலுவையில் சுமந்து தீர்த்தார். இயேசு கிறிஸ்துவினுடைய பரிசுத்தமான பிறப்பையும், வாழ்வையும், மரணத்தையும், உயிர்தெழுதலையும் விசுவாசித்து, தன்னுடைய பாவத்தை அவரிடம் அறிக்கையிட்டு மனந்திரும்புகிற ஒவ்வொரு பாவியும் அவரால் இலவசமாக கிருபையால் மீட்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பாவ மன்னிப்பும், நித்திய வாழ்வும் உண்டு என்பதை வேதம் உறுதி செய்கிறது.

இதை வாசிக்கும் நண்பரே, இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசியாத நிலையில், உங்களுடைய பாவமெல்லாம் மன்னிக்கப்படாத நிலையில் நீங்கள் இந்த உலகத்தைவிட்டு ஒரு நாள் மரித்துப்போனால் நீங்கள் நித்திய நரக தண்டனையை அடைவீர்கள் என்பது உறுதி. உங்களுடைய நிலைமை மிகவும் பரிதபிக்கக்கூடியதும், மோசமானதாகவும் இருக்கும். உங்களுக்கு நேரிடப் போகும் நித்திய நரகமானது எப்படியிருக்கும் என்று பல இடங்களில் வேதம் எச்சரிக்கையாக சொல்லியிருக்கிறது  (வெளிப்படுத்தின விசேஷம் 20:10 ;  மத்தேயு  8:12 ; 13:37- 42 ; 22 :11- 13; 25: 26- 30). பிசாசையும், அவனுடைய கூட்டத்தார் எல்லோரையும் இயேசு தன்னுடைய இரண்டாம் வருகையின்போது நித்திய நரகத்தில் தள்ளி அவர்களை நீதியாய் நியாயந்தீர்ப்பார். அங்கே அக்கினியும், கந்தகமும் இருக்கும். இரவும், பகலும் ஓய்வில்லமால் அழுகையும், பற்கடிப்பும் உண்டு என வேதம் சொல்கிறது (வெளிப்படுத்தின விசேஷம் 20:10 ). ஆகவே, இன்றே நீங்கள் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து நித்திய வாழ்வை பெற உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

Read More
02 Dec
0

Spurgeon’s Catechism – தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து எப்படி மனிதனானார்?

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 21

தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து எப்படி மனிதனானார்?

பதில்

தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து, பாவமில்லாதவராய், கன்னி மரியாளின் வயிற்றிலே பரிசுத்த ஆவியின் வல்லமையினால் உற்பவிக்கப்பட்டு, உண்மையான சரிரம் மற்றும் ஆன்மாவைத் தமக்குள்ளே பெற்றவராய் மனிதனானார்.

வேத ஆதாரம்

1)  எபிரெயர் 2: 14

  1. “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்.”

2)  மத்தேயு 26:38 

  1. “அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது.”

3)  எபிரெயர் 4:15 

  1. ” நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.”

4)  லூக்கா 1:31

  1. “இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.”

5)  லூக்கா 1:35

  1. “தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.”

6)  எபிரெயர் 7:26

  1. “பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.”

Read More